Published:Updated:

`வைரஸ் எங்களிடமிருந்து பரவ வாய்ப்பே இல்லை..!' -வீடியோ மூலம் விளக்கம் கொடுத்த வுஹான் ஆய்வகம்

வுஹான் ஆய்வகம்
வுஹான் ஆய்வகம்

இங்கு பரிசோதனைகள் மேற்கொள்ள மூன்று அறைகளும், பரிசோதனைக்கான விலங்குகளைப் பராமரிக்க இரண்டு அறைகளும், விலங்குகளைப் பிரித்து ஆய்வுசெய்ய ஓர் அறையும், வைரஸ்களைப் பாதுகாக்க ஓர் அறையும் உள்ளது.

வுஹான் மாகானத்தின் வைராலஜி ஆய்வகத்தில், விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் வீடியோ ஒன்றை சீனா வெளியிட்டுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் உள்ள வைராலஜி ஆய்வகத்திலிருந்து கொரோனா பரவியிருக்கக் கூடுமோ என்கிற சர்ச்சை பரவிவருகிறது. இதற்கு விளக்கம் தரக்கூடிய வகையில் அந்த ஆய்வகத்தின் வீடியோ ஒன்றை சீனா வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனைகளில் ஈடுபடும்போது தொற்று எதுவும் நேரிடா வகையில் PPE எனப்படும் தற்காப்புக் கவசம் அணிந்து வேலை செய்வதைக் காண முடிகிறது.

வுஹான் ஆய்வகம்
வுஹான் ஆய்வகம்

ஜாங் ஹௌஜுன் என்கிற ஆராய்ச்சியாளர், அங்கு வேலை செய்வோர் அணிகிற இரண்டடுக்கு பாதுகாப்புக் கவசத்தைப் பற்றியும், ஆய்வகத்தின் மையப் பகுதி எவ்வாறு காற்றுப்புகாத ஐந்தடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கிறது என்பதையும் தெளிவாக விளக்குகிறார். மேலும், அந்த ஆய்வகம் கசிவு ஏற்படுவதைத் தவிர்க்க, காற்று உட்புகும் வண்ணம் மட்டுமே அமைக்கப்பட்டிருப்பதாகவும், உள்ளே இருந்து காற்று வெளியே செல்ல முடியாதெனவும் கூறுகிறார். சீன அறிவியல் அகாடமியுடன் இணைந்த வுஹானின் இந்த ஆய்வகம், 34 மில்லியன் பவுண்ட் செலவில் 2015ல் கட்டிமுடிக்கப்பட்டு அதிகாரபூர்வமாக 2018ல் திறக்கப்பட்டது.

இங்கு பரிசோதனைகள் மேற்கொள்ள மூன்று அறைகளும், பரிசோதனைக்கான விலங்குகளைப் பராமரிக்க இரண்டு அறைகளும், விலங்குகளைப் பிரித்து ஆய்வுசெய்ய ஓர் அறையும், வைரஸ்களைப் பாதுகாக்க ஓர் அறையும் உள்ளது. இந்த அறையில்தான் 1,500-க்கும் மேற்பட்ட கொடிய வைரஸ்கள் பாதுகாக்கப்பட்டுவருகின்றன. ஒரே நேரத்தில் 24 விஞ்ஞானிகள் பணியாற்றும் அளவுக்கு இதன் ஆய்வுக்கூடம் விசாலமானது.

வுஹான் ஆய்வகம்
வுஹான் ஆய்வகம்

கடந்த மாதம், சீன அரசுக்குச் சொந்தமான China Daily என்கிற ட்விட்டர் கணக்கு ஒன்றில் வைரஸ்கள் பாதுகாத்து வைத்திருக்கும் குளிர்சாதனப் பெட்டகத்தின் புகைப்படம் ஒன்று பதிவிடப்பட்டது. அப்பெட்டகத்தின் சீல் உடைந்துள்ளதாக எழுந்த சர்ச்சையை அடுத்து அப்புகைப்படம் நீக்கப்பட்டுவிட்டது. இது தொடர்பாக அமெரிக்க உளவுத் துறையினர், வுஹான் ஆய்வகத்தின் மீது விசாரணை நடத்தி, "துல்லியமாக என்ன நடந்தது" என்பதைக் கண்டறிய முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், இந்த நோய்ப்பரவல் வெளவால்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகள் மூலம் மனிதர்களுக்குப் பரவியதா என்பதை விசாரித்துவருவதாகத் தெரிவித்தார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அடிப்படை ஆதாரமற்றது என முற்றிலுமாக வுஹானின் ஆய்வக அதிகாரிகள் மறுத்துள்ளனர். COVID-19 வைரஸின் மரபணு மீதான ஆய்வுகள் இந்த வைரஸ் செயற்கையாக வடிவமைக்கப்படவில்லை என்றும் வெளவால்களில் இருந்து தோன்றியிருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வுஹான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி நிறுவனத்தின் துணைத்தலைவர் Dr.யுவான் ஜிமிங் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், "இந்த வைரஸ் எங்கள் ஆய்வகத்திலிருந்து பரவ வாய்ப்பே இல்லை. ஒரு வைரஸை உருவாக்க அசாதாரண நுண்ணறிவும், வேலைப்பாடுகளும் தேவை என்கின்றனர் விஞ்ஞானிகள். இதை வைத்துப்பார்க்கும்போது, தற்போது இப்படியானதொரு வைரஸை உருவாக்கும் சக்தி மனிதர்களுக்கு இல்லையென்றே நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

Dr.யுவான் ஜிமிங்
Dr.யுவான் ஜிமிங்

இந்நிறுவனத்தின் துணை இயக்குநரான ஷி ஜெங்லி பத்திரிகையாளர்களிடம், இந்த நோய்த் தொற்றுக்கும் எங்கள் ஆய்வகத்திற்கும் எந்த வகையிலும் சம்பந்தம் இல்லை எனத் தன்னால் உறுதியாகக்கூற முடியும் என்றுள்ளார். மேலும், இங்கு பணிபுரியும் ஹுவாங் யான்லிங்கை கொரோனா தாக்கிய முதல் நபர் எனக்கூறும் அறிக்கைகளையும் வுஹான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி நிறுவனம் மறுத்துள்ளது. கடந்த டிசம்பரில் கொரோனா பரவத் தொடங்கியதில் ஆரம்பித்து தற்போது வரை உலக அளவில் 2.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.1,68,000-க்கும் அதிகமான மக்களைக் கொன்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு