Published:Updated:

வேல் யாத்திரை : `ஊருக்கு மட்டும்தான் உபதேசமா முதல்வரே?' - கொதிப்பில் தமிழக பா.ஜ.க!

வேல் யாத்திரை
வேல் யாத்திரை

``எங்களுடைய தலைவரை யாத்திரை சென்ற முதல்நாளே கைது செய்தார்கள். அடுத்து வந்த நாள்களில் கைதுசெய்திருந்தால் இந்தக் கேள்வி வந்திருக்காது" என்கிறார் கே.டி.ராகவன்.

தமிழக பா.ஜ.க நடத்தும் வெற்றிவேல் யாத்திரைக்குத் தொடர்ந்து ஏற்படும் தடங்கல்களால் கொதிப்பிலிருக்கிறார்கள் பா.ஜ.க நிர்வாகிகள். `கொரோனா பரவல் தொடர்பாக ஊருக்கு மட்டுமே உபதேசம் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அவர் பங்கேற்கும் கூட்டங்களில் விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை' எனக் கொதிக்கிறார் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

`வேல் யாத்திரையைத் தடுக்கக் கூடாது எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் நாகராஜன். இந்த வழக்கு கடந்த 10-ம் தேதி நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.ஜி.பி திரிபாதி தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், `கடந்த 6, 8 மற்றும் 9-ம் தேதிகளில் பா.ஜ.க-வினர் திருத்தணி, திருவொற்றியூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டனர். அதில் கலந்துகொண்டவர்கள் தனிமனித இடைவெளியைப் பின்பற்றவில்லை. முகக்கவசம் அணியவில்லை. பா.ஜ.க தலைவர் எல்.முருகனும் முறையாக முகக்கவசம் அணியவில்லை' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைச் சுட்டிக்காட்டிய அரசுத் தரப்பு வழக்கறிஞர், வேல் யாத்திரை காரணமாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் அவதிக்குள்ளானதாகவும், இந்த யாத்திரையில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அதன் பிறகு பேசிய நீதிபதிகள், `அனுமதி அளிக்காத நிலையில், எப்படி யாத்திரை செல்ல முடியும்... கடந்த மூன்று நாள்களாக கட்சித் தலைவர்கள் கூடியிருக்கிறார்கள். கட்சித் தலைவர் பெரிய வேல் ஒன்றை ஏந்திச் செல்கிறார். இது ஆயுதச் சட்டப்படிக் குற்றம்' எனச் சுட்டிக்காட்டினர். அதன் பிறகு யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர பா.ஜ.க-வுக்கு அனுமதியளித்ததுடன், வேல் யாத்திரையைத் தடுக்கக் கூடாது என்ற இடைக்கால கோரிக்கை மனுவை முடித்துவைத்தனர்.

வேல் யாத்திரை
வேல் யாத்திரை

நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு எடுத்துவைத்திருக்கும் வாதம், பா.ஜ.க-வினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக, பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன், தனது ட்விட்டர் பதிவில், `தி.மு.க நடத்தும் ஆர்ப்பாட்டம், போராட்டத்துக்கு அனுமதி வழங்கும் அ.தி.மு.க அரசு, பா.ஜ.க-வின் வேல் யாத்திரை தொடங்குவதற்கு முன்பே கைது செய்வது ஏன்? முதல்வரும் அமைச்சர்களும் செல்லும் நிகழ்ச்சிகளில் ஏராளமான கூட்டம் கூடுகிறது. அங்கெல்லாம் ஏற்படாத கொரோனா தொற்று பா.ஜ.க-வின் ஆன்மிக நிகழ்ச்சியில் மட்டும் ஏற்பட்டுவிடுமா என்ன?' எனக் கேள்வி எழுப்பினார்.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர் லெனினிடம் பேசினோம். ``எதிர்க்கட்சிகள் நடத்தக்கூடிய போராட்டங்களுக்கு அ.தி.மு.க அரசு அனுமதி கொடுப்பதாகச் சொல்வது தவறானது. ஆளும்கட்சிதான் `அரசு விழா’ என்ற பெயரில் தேர்தல் பிரசாரம் செய்துவருகிறது. பா.ஜ.க-வினர் நடத்தும் வேல் யாத்திரைக்கு அரசு தடைவிதித்திருக்கிறது. அதையும் மீறிக் கூடுகிறார்கள். அவர்களை சம்பிரதாயமாகக் கைதுசெய்துவிட்டு, மாலையில் விடுவிக்கிறது காவல்துறை. `வேல் யாத்திரை’ என்ற பெயரில் தொடர்ந்து கூடுகிறவர்களை ஏன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில்லை... தவிர, அவர்கள் நடத்தும் வேல் யாத்திரை என்பது பக்திக்காக அல்ல.

லெனின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
லெனின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

அதன் மூலம் மக்களிடம் ஆதாயம் தேட முயல்கிறார்கள். கே.டி.ராகவன், அண்ணாமலை உட்பட பலரும் கூட்டங்களை நடத்திவருகின்றனர். அவர்கள் கட்சியின் சார்பில் உள் அரங்குக் கூட்டமும் நடந்துகொண்டிருக்கிறது. வேல் யாத்திரை என்பது அரசியல் யாத்திரைதான் எனக் காவல்துறையும் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் சட்டம் ஒழுங்கு கெடும் என்பதைத் தமிழக அரசும் உணர்ந்திருக்கிறது. அதேநேரம், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டும் சில இடங்களில் பா.ஜ.க-வினர் ஊர்வலம் நடத்தியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் அரசியலாக கவனிக்காதவர்கள், இப்போது பேசத் தொடங்கியிருப்பதற்குக் காரணம், தேர்தல் கணக்குகள் தொடங்கிவிட்டதுதான்" என்றவர்,

``மக்கள் பிரச்னைகளுக்காக பா.ஜ.க-வினர் களமிறங்குவதே இல்லை. வெங்காய விலை உயர்ந்துவிட்டது. மற்ற அத்தியாவசியப் பொருள்களின் விலையும் அதிகரித்திருக்கிறது. இதற்காக என்றாவது பா.ஜ.க-வினர் குரல் கொடுத்திருக்கிறார்களா? வேல் யாத்திரை என்ற பெயரில் மத அரசியலை முன்வைப்பதுதான் இவர்களின் நோக்கம். இதற்குத் தமிழ்நாட்டில் இடமில்லை. மதச்சார்பின்மையை விதைத்திருக்கும் மாநிலம் இது. இதற்கு எதிரான வேலைகளை பா.ஜ.க-வினர் செய்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் பல்வேறு ஆர்ப்பாட்டங்களுக்கு அரசு தடைவிதித்திருக்கிறது. பல இடங்களில் கைதுச் சம்பவம் நடந்ததற்கும் ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆர்ப்பாட்டம் என்பது ஒரு சில மணிநேரங்களில் முடிந்துவிடும். ஆனால், யாத்திரை என்பது ஒருநாள் முழுவதும் நடக்கக்கூடியது. ஐந்து மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து ஒரே இடத்தில் இருக்கக் கூடாது என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் தங்களது வாகனத்திலேயே நீண்டநேரம் நிற்கின்றனர். இதனால் கொரோனா பரவாதா?" என்றார் கொதிப்புடன்.

கே.டி.ராகவன்
கே.டி.ராகவன்

``அரசின் மீது இவ்வளவு கோபம் ஏன்?" என கே.டி.ராகவனிடம் கேட்டோம். ``எதிர்க்கட்சிகள் நடத்தக்கூடிய போராட்டங்களில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது பற்றித் தெரியாது. ஆனால், நாங்கள் வேல் யாத்திரையைத் தொடங்கிய அன்றே கைதுசெய்தார்கள். அப்படியானால், அ.தி.மு.க-வினர் பொது இடங்களில் கூடுவதை மட்டும் ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்... முதல்வர் பங்கேற்கும் பல நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் கூடுகின்றனர். `மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்’ என்கிறார் முதல்வர். மற்றவர்களுக்கு உபதேசம் செய்கிறவர், தான் அப்படி நடந்து கொள்கிறாரா என்பதைப் பார்க்க வேண்டும். அதைவிடுத்து, எங்களைக் கைதுசெய்வது எந்தவகையில் சரியானது... தி.மு.க-வினர் மட்டும் கூடுவதற்கு அனுமதி கொடுக்கிறார்கள். அப்படியானால், இரண்டு கட்சிகளுக்கும் உள்ள புரிதல் என்ன?

`சட்டம், தன் கடமையைச் செய்யும்!’ - வேல் யாத்திரை விவகாரத்தில்  முதல்வர் பழனிசாமி

எங்களுடைய தலைவரை யாத்திரை சென்ற முதல்நாளே கைதுசெய்தார்கள். அடுத்து வந்த நாள்களில் கைதுசெய்திருந்தால் இந்தக் கேள்வி வந்திருக்காது. நான் முன்வைக்கும் இந்த விமர்சனங்களுக்கும், தேர்தல் கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை. அதைப் பற்றியெல்லாம் நான் பேசவில்லை. வேல் யாத்திரை பற்றி மட்டும்தான் பேசுகிறேன். எங்களுக்கு ஆலோசனை சொல்கிற முதல்வர், எவ்வாறு நடந்துகொள்கிறார் என்பதுதான் கேள்வி. இதைச் சாத்தான் வேதம் ஓதுவதைப்போலத்தான் பார்க்கிறோம். எங்களுடைய யாத்திரையைத் தடுப்பதில் அரசுக்கு உள்நோக்கம் இருக்கிறது. வரும் 17-ம் தேதி தருமபுரியில் யாத்திரை நடக்கவிருக்கிறது. அதன் பிறகு கடலூர், விழுப்புரம், சேலம் எனத் தொடர்ந்து நடத்தவிருக்கிறோம். அந்தந்த மாவட்டங்களில் எங்களைக் கைதுசெய்தாலும், மற்ற நிர்வாகிகளைவைத்து யாத்திரையைத் தொடர்ந்து நடத்துவோம்" என்றார் உறுதியாக.

அடுத்த கட்டுரைக்கு