Published:Updated:

`வி.சி.க-வை ஏன் குறிவைக்கிறது பா.ஜ.க?!' - அதிர்ச்சி கொடுத்த அடுத்தடுத்த விக்கெட்டுகள்

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

பட்டியலின மக்கள் பலவீனமாக இருப்பதாக எண்ணிக்கொண்டு, `அவர்களை எளிதாகக் கையாண்டுவிடலாம்' என பா.ஜ.க நினைக்கிறது. அவர்களின் முயற்சிகளுக்கு நாங்கள் தடையாக இருக்கிறோம்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும், பா.ஜ.க-வில் இணைந்துவருவது அரசியல் அரங்கில் உற்று கவனிக்கப்படுகிறது. `ராம்விலாஸ் பஸ்வான்போல பா.ஜ.க-வுக்கு ஆதரவு கொடுக்குமாறு பொன்.ராதாகிருஷ்ணன் போன்றோர் திருமாவிடம் வலியுறுத்தினர். அதை ஏற்காததால், எங்கள் கட்சியின் நிர்வாகிகளை வளைக்கிறார்கள்' என்கின்றனர் வி.சி.க வட்டாரத்தில்.

பா.ஜ.க முருகன்
பா.ஜ.க முருகன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலாளர்களான வடசென்னை கபிலன், ஈரோடு விநாயகமூர்த்தி உட்பட பலரும் தமிழக பா.ஜ.க-வில் ஐக்கியமாகிவிட்டனர். இவர்களின் ஆதரவாளர்கள் பலரும் எல்.முருகன் முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்தனர். `சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், ஒவ்வொரு கட்சியிலிருந்தும் முக்கியப் பிரமுகர்களை வளைக்கும் வேலையில் பா.ஜ.க ஈடுபட்டுவருகிறது. இதில், அதிகப்படியான தாக்குதல் வி.சி.க மேல் தொடுக்கப்படுகிறது’ என்கிறார்கள்.

கோவை: `கொங்கு டார்கெட்;  டிசம்பரில் திருப்புமுனை!' - பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன்

`என்ன காரணம்?' என்று விடுதலைச் சிறுத்தைகள் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசுவிடம் பேசினோம். ``வட மாநிலங்களில் ராம்விலாஸ் பஸ்வான், ராம்தாஸ் அத்வாலே போன்றோர் பா.ஜ.க-வில் ஐக்கியமாகிவிட்டனர். `அவர்களைப்போல நாங்களும் கூட்டணியில் இணைய வேண்டும்' என 2019 தேர்தலின்போது பொன்.ராதாகிருஷ்ணன் நேரடியாகவே வந்து எங்கள் கட்சியின் தலைவரிடம் பேசினார். 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போதும் பேசினார். `ஆதரவு கொடுத்தால் மத்திய அமைச்சர் பதவி தருவோம்' என்றார்.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

இதற்கு பதில் கொடுத்த எங்கள் தலைவர், `நாங்கள் அம்பேத்கர் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். அதனால்தான் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைப்பதற்கான அவசியம் எழவில்லை' என்றார். தமிழ்நாட்டில் சிந்தாந்தரீதியாக ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வை எதிர்க்கக்கூடிய ஒரே கட்சி வி.சி.க-தான். `தேசம் காப்போம்' மாநாடு, பேரணி எனத் தொடர்ந்து செயல்பட்டுவருகிறோம். பட்டியலின மக்கள்தான் பலவீனமாக இருப்பதாக எண்ணிக்கொண்டு, `அவர்களை எளிதாகக் கையாண்டுவிடலாம்’ என பா.ஜ.க நினைக்கிறது. அவர்களின் முயற்சிகளுக்கு நாங்கள் தடையாக இருக்கிறோம். அதனால் எங்களை பலவீனப்படுத்த முயல்கிறார்கள்.

பய எலி பா.ஜ.க... தேசவிரோத தி.மு.க - பா.ஜ.க Vs தி.மு.க!

இதன் ஒருகட்டமாக, அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த முருகனைத் தலைவராகக் கொண்டுவந்தனர். கொங்கு மண்டலத்தில் அருந்ததியர் சமூகத்தினர் பரவலாக இருப்பதும் இதற்குக் காரணம். இதன் தொடர்ச்சியாக தி.மு.க-விலிருந்து வி.பி.துரைசாமி, வி.சி.க-விலிருந்த கபிலன், விநாயகமூர்த்தி ஆகியோரை சேர்த்துக்கொண்டனர். பல இடங்களில் வங்கிக் கடன் பெற்றுத் தந்து, கட்சியில் சேர்க்கும் வேலைகளையும் செய்கிறார்கள். அவர்கள் இவ்வாறு செய்வதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. கொள்கையில் பிடிப்புடன் இருப்பவர்கள், வி.சி.க-வில் இருப்பார்கள். நாங்கள் வேண்டாம் என்று எங்கள் கட்சியில் ஒதுக்கிவைத்திருப்பவர்களையெல்லாம் அவர்கள் அள்ளிக்கொண்டு போகிறார்கள். அவ்வளவுதான்" என்றார்.

கே.டி.ராகவன்
கே.டி.ராகவன்

வன்னி அரசுவின் கருத்துக்கு பதில் கொடுத்த பா.ஜ.க-வின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், `` வி.சி.க-விலிருந்து மட்டுமல்ல, தி.மு.க, அ.தி.மு.க-விலிருந்தெல்லாம் பா.ஜ.க-வில் இணைகிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தலித் மக்களுக்கு எதையுமே செய்யவில்லை என்பதால்தான் அங்கிருந்து பலரும் பா.ஜ.க-வுக்கு வருகிறார்கள். இதை நீங்கள் கபிலனிடம் கேட்டாலும் சொல்வார். `நமது சமுதாயத்துக்குப் பெரிய தலைவராக திருமாவளவன் இருப்பார்' என அந்த மக்கள் நம்பினார்கள். ஆனால், அந்தச் சமூகம் திருமாவளவனால் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதை அறிந்து, எங்கள் பக்கம் வருகிறார்கள்.

மக்களவையில் எங்களுக்கு 303 எம்.பி-க்கள் இருக்கிறார்கள். மாநிலங்களவையில் 75 எம்.பி-க்கள் இருக்கிறார்கள். வி.சி.க-வை நம்பி நாங்கள் இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் 88 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம். வி.சி.க எத்தனை இடங்களில் வென்றது? தி.மு.க-வும் அவர்களைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒரே தேசியக் கட்சியாகவும், இந்தியாவின் முதன்மைக் கட்சியாகவும் நாங்கள் இருக்கிறோம். எனவே, வி.சி.க-வை உடைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அந்தக் கட்சியை வளர்த்தவர் `தடா' பெரியசாமி. அவரே எங்கள் பக்கம் இருக்கிறார்" என்றார் கொதிப்புடன்.

அடுத்த கட்டுரைக்கு