Published:Updated:

`பாசிட்டிவா... நெகட்டிவா?' - கோவை மாநகராட்சி கொரோனா குளறுபடி!

கோவை
கோவை

கோவை மாநகராட்சிப் பகுதிகளில், கொரோனா சோதனை முடிவுகளில் குளறுபடி ஏற்படுவதாகப் புகார் எழுந்திருக்கிறது.

கோவை சொக்கம்புதூர்ப் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். கடந்த மாதம் இவர் ஓர் ஆரம்ப சுகாதாரநிலையத்தில் கொரோனா சோதனை செய்திருக்கிறார். அங்கு அந்த இளைஞருக்கு முதலில் `நெகட்டிவ்’ என்ரு சொல்லியிருக்கிறார்கள். ஆனால், பிறகு அதே இளைஞருக்கு `பாசிட்டிவ்’ என்று கூறியிருக்கிறார்கள். குழப்பத்தில் அந்த இளைஞர் ஒரு தனியார் மருத்துவமனையில் சோதனை செய்து பார்த்திருக்கிறார்.

கொரோனா
கொரோனா
கோவை: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு... படுக்கை பற்றாக்குறை! - அவதியுறும் மக்கள்

அங்கு அவருக்கு `நெகட்டிவ்’ என ரிசல்ட் வந்திருக்கிறது. “சார் எனக்கு நெகட்டிவ்” என்று அந்த இளைஞர் அதிகாரிகளிடம் ரிப்போர்ட்டைக் காட்டியிருக்கிறார். ஆனால், ``எங்களுக்கு பாசிட்டிவ் என்றுதான் வந்திருக்கிறது” என்று கூறி, அவரை கொடிசியா கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதித்திருக்கிறார்கள்.

இது குறித்து அந்த இளைஞர், ``எங்கள் பகுதியில், கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி நடந்த ஒரு மருத்துவ முகாமில் என் மாமாவுக்குச் சோதனை செய்தனர். அதன் முடிவுகள் வருவதற்குள் என் மாமாவை அவருக்கு ஏற்பட்ட சிறுநீரகப் பிரச்னை காரணமாக, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கும் மாமாவுக்கு கொரோனா சோதனை செய்து, அதில் `நெகட்டிவ்’ எனக் கூறிவிட்டனர். ஆனால், மாநகராட்சியிலிருந்து அழைத்து, அவருக்கு `பாசிட்டிவ்’ என்ரு கூறினர்.

கோவை அரசு மருத்துவமனை
கோவை அரசு மருத்துவமனை

`அரசு மருத்துவமனையில் எடுத்த சோதனையில் `நெகட்டிவ்’ என வந்திருக்கிறது’ என்று நாங்கள் கூறினோம். அதற்கு மாநகராட்சியில், `நாங்கள் சொல்வதுதான் சரியான முடிவு’ என்று சொல்லி, எங்கள் வீட்டை, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக்கிவிட்டனர்.

கோவை: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு... படுக்கை பற்றாக்குறை! - அவதியுறும் மக்கள்

அந்தக் காலகட்டத்தில், மாநகராட்சியிலிருந்து எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. `உதவிக்கு அழையுங்கள்’ என்று ஒரு செல்போன் நம்பரைக் கொடுத்தனர். அந்த எண்ணில் எங்கள் அழைப்பை ஏற்கவில்லை. என் அம்மா சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டவர். அவருக்கு மருந்துகூட வாங்க முடியவில்லை. இதற்கு நடுவே, அருகிலுள்ள ஓர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆகஸ்ட் 25-ம் தேதி, நாங்கள் கொரோனா பரிசோதனை செய்தோம்.

கோவை இளைஞர்
கோவை இளைஞர்

நான்கு நாள்கள் கழித்து, `முடிவுகள் என்ன?’ என்று கேட்டபோது, அங்கிருந்தவர்கள், ‘நெகட்டிவ் தான்’ என்று கூறினர். ஆனால், அடுத்த சில நாள்களில் மாநகராட்சி எனக்கு அழைத்து, `உங்களுக்கு பாசிட்டிவ்’ என்று கூறினர். `முதலில் நெகட்டிவ் என்று கூறினீர்களே...’ என்று நான் கேட்டதற்கு, `இப்போதுதான் முடிவுகள் வந்தன’ என்று பதிலளித்தனர்.

எனக்கு மட்டுமல்ல, எங்களது உறவினர்களுக்கும் இதேநிலைதான். வீட்டில் ஒருவருக்கு மட்டும் `நெகட்டிவ்’ என ரிசல்ட் வர, மற்றவர்களுக்கு `பாசிட்டிவ்’ என்று ரிசல்ட் வந்தது. அதன்பிறகு நான் ஒரு தனியார் மருத்துவனையில் கொரோனா பரிசோதனை செய்துவிட்டு, மாநகராட்சி சொன்னதால், கொடிசியா மையத்துக்குச் சென்றுவிட்டேன். ஆனால், நான் தனியார் மருத்துவமனையில் எடுத்த சோதனையில் எனக்கு `நெகட்டிவ்’ என ரிசல்ட் வந்தது. அது குறித்து நான் எவ்வளவு சொல்லியும் அவர்கள், `எங்கள் முடிவுதான் இறுதியானது. இங்கு பாசிட்டிவ்தான்’ என்று சொல்லிவிட்டனர்.

தனியார் சோதனை முடிவு
தனியார் சோதனை முடிவு

நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆனேன். அங்கு உணவு வழங்கும் இடத்தில் சமூக இடைவெளியே கடைப்பிடிப்பதில்லை. குளியலறை, கழிப்பறை எங்கும் பராமரிப்பே இல்லை. அந்தச் சூழலே நமக்கு கொரோனா வந்துவிடும் என்ற பயத்தை கொடுக்கிறது.

நெல்லை: கொரோனா முறைகேடு - ரூ.1 கோடி கேட்டு அரசு மருத்துவமனைமீது வழக்கு!

நோயாளிகளைக் கணக்குக் காட்டி வேறு ஏதாவது செய்கிறார்களா என்று சந்தேகமாக இருக்கிறது. இனியாவது, முடிவுகளைச் சரியாக எடுத்து, உரிய பராமரிப்புடன் சிகிச்சையளிக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதி, மருத்துவமனை என அனைத்து இடங்களையும் தூய்மையாக வைத்து, போதிய வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும்” என்றார்.

கொடிசியா
கொடிசியா

இது குறித்து மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரி ராஜாவிடம் கேட்டோம்.``கொரோனா அறிகுறி இல்லாதவர்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படும். நோயின் இறுதிக்கட்டத்தில் சோதனை செய்தால் முடிவுகளில் மாற்றம் ஏற்படலாம். அதேபோல, கோவை அரசு மருத்துவமனைப் பரிசோதனை மையம், கொரோனா பாதிப்பு காரணமாக சில நாள்கள் மூடப்பட்டது. இதனால் சோதனை முடிவுகளில் சற்று தாமதம் ஏற்பட்டது. எனவே, ஒவ்வொரு மண்டலத்துக்கும் தனித்தனியாகச் சோதனை மையங்களைப் பிரித்து, முடிவுகளை விரைந்து சொல்ல நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு