Published:Updated:

`கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் இந்தி ஆசிரியரே இல்லை!’ - சர்ச்சைக்கு ஆணையாளர் விளக்கம்

கோவை மாநகராட்சி
கோவை மாநகராட்சி

``கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் `இந்தி படிக்க விரும்புகிறீர்களா?’ என்ற கேள்வி இடம் பெறவில்லை’’ என்று மாநகராட்சி ஆணையாளர் விளக்கமளித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் கடந்த திங்கள்கிழமை முதல் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது. கோவை மாநகராட்சிப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்கக் கொடுக்கப்படும் விண்ணப்பப் படிவங்களில் 18 பிரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 14-வது பிரிவில், `இந்தி மொழி படிக்க விரும்புகிறீர்களா அல்லது கைத்தொழில் பாடம் எடுக்க விரும்புகிறீர்களா?’ என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது.

விண்ணப்பம் இந்தி கேள்வி
விண்ணப்பம் இந்தி கேள்வி
`விமான நிலைய இந்தி சர்ச்சை!’- கனிமொழி புகார்; விசாரணைக்கு சி.ஐ.எஸ்.எஃப் உத்தரவு #NowAtVikatan

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. முக்கியமாக, `மும்மொழிக் கல்விக் கொள்கையை ஏற்று கொள்ள முடியாது’ என்று அரசியல் கட்சியினர், கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

``தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே நீடிக்கும். புதிய தேசிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்வதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதனால், கோவை மாநகராட்சிப் பள்ளி விண்ணப்பப் படிவங்களில் இந்தி மொழி குறித்து கேள்வி இடம்பெற்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கு.ராமகிருஷ்ணன்
கு.ராமகிருஷ்ணன்

``தமிழக அரசு நியமித்துள்ள குழு எந்தப் பரிந்துரையும் செய்யாத நிலையில், இது போன்ற கேள்வியை விண்ணப்பங்களில் இடம்பெறச் செய்வது ஏற்கத்தக்கதல்ல. உடனடியாக கோவை மாநகராட்சி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களைத் திரும்பப் பெற வேண்டும். இல்லாவிடில், கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கை 2020 - வரவேற்பும் எதிர்ப்பும்!

அதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தியும் இந்த விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன் குமார் ஜடாவத், ``அந்த விண்ணப்பம் மாநகராட்சி சார்பில் வழங்கப்படவில்லை. மாநகராட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தும்விதமாக தவறான தகவல் தரப்பட்டுள்ளது. அப்படிப் பள்ளி சார்பில் இந்தி குறித்தான விண்ணப்பம் கொடுத்திருந்தால், பள்ளி ஆசிரியரிடம் கேளுங்கள். தவறான புகார் தெரிவித்தவர்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநகராட்சி அதிகாரபூர்வ விண்ணப்பம்
மாநகராட்சி அதிகாரபூர்வ விண்ணப்பம்

அப்படிப் பள்ளி சார்பில் இந்த விண்ணப்பம் கொடுக்கப்பட்டிருந்தால், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாநகராட்சிப் பள்ளியில் இந்திவழிக் கல்வி முறையே இல்லை. இங்கு இந்தி ஆசிரியர்களே இல்லை. இது தவறான தகவல்’’ என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு