Published:Updated:

`டிஐஜி மிரட்டல்; கம்பெனிக்குள் முகாமிட்ட ஆய்வாளர்!' -கலெக்டர் அதிரடியால் நெகிழ்ந்த தனியார் நிறுவனம்

முகக் கவசம் தயாரிக்கும் இயந்திரம்
முகக் கவசம் தயாரிக்கும் இயந்திரம்

கோவையில் முகக் கவசங்கள் தயாரிக்கும் இயந்திரங்களை விற்பனை செய்யும் நிறுவனத்தை, காவல் துறை டி.ஐ.ஜி மூலம் ஒரே நிறுவனத்துக்கு மட்டுமே வழங்க வேண்டும் என மிரட்டுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை சிங்காநல்லூர் பகுதியில், மகாலிங்கம் என்பவர் ஸ்ரீ சாஸ்தா இன்ஜினீயரிங் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் முகக் கவசங்கள் தயாரிக்கும் இயந்திரங்களை உற்பத்தி செய்து, விற்று வருகிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக முகக் கவசங்களின் தேவை அதிகரித்துள்ளதால், அதைத் தயாரிக்கும் இயந்திரங்களின் தேவையும் அதிகரித்துள்ளது.

முகக் கவசம் தயாரிக்கும் இயந்திரம்
முகக் கவசம் தயாரிக்கும் இயந்திரம்

இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியரிடம் சாஸ்தா இன்ஜினீயரிங் சார்பில் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், `முகக் கவசத்தை உற்பத்தி செய்யும் இயந்திரம் சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால், மேலை நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதால் ஏற்படும் விலை உயர்வு காரணமாக, அந்த இயந்திரத்தை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. இதையடுத்து, இந்த இயந்திரங்களைத் தயாரிப்பதில் எங்களது நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கத் தொடங்கியது.

மகாலிங்கம்
மகாலிங்கம்

இதனால் நாடு முழுவதும் இருந்து ஆர்டர்கள் குவிந்தன. அதில் கியூ அண்ட் கியூ என்ற நிறுவனத்தினரும் முகக் கவசங்கள் தயாரிக்கும் இயந்திரம் வேண்டி எங்களை அணுகினர். சென்னையைச் சேர்ந்த டி.ஐ.ஜி மற்றும் உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் சிலரது பெயர்களைச் சொல்லி மிரட்டி மற்ற வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு முன்பாகவே ஒரு இயந்திரத்தைப் பெற்றனர்.

மேலும், தொடர்ந்து மற்ற வாடிக்கையாளர்களுக்கு இயந்திரத்தை வழங்கக் கூடாது என்றும் தங்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும் டி.ஐ.ஜி உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் மூலம் மிரட்டுகின்றனர். இதனால், எங்களிடம் ஆர்டர் செய்தவர்களுக்கு உரிய நேரத்தில் இயந்திரங்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மனோஜ்
மனோஜ்

எங்களால் வரிசை எண் படியே இயந்திரங்கள் வழங்க முடியும். எனவே, தொடர்ந்து இயந்திரத்தை உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கவும், இந்த மிரட்டல்களைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தனர்.

முக்கியமாக, சிங்காநல்லூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் சாஸ்தா இன்ஜினீயரிங் நிறுவனத்துக்குள்ளேயே இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இதையடுத்து, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் துணை கமிஷனர் ஆகியோரை தொடர்புகொண்ட மாவட்ட ஆட்சியர் ராசாமணி,

ஆட்சியர் ராசாமணி
ஆட்சியர் ராசாமணி

``சாஸ்தா நிறுவனத்தைவிட்டு முனீஸ்வரன் உடனடியாக வெளியேற வேண்டும்” என்று கண்டித்துள்ளார். இதையடுத்து, அங்கிருந்து வெளியேறிய முனீஸ்வரன், ``அங்கு இருதரப்பினருக்கும் இடையே பிரச்னை என்ற தகவலால்தான் சென்றேன். மற்றபடி எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை” என்று கூறியுள்ளார்.

புகார் தெரிவித்தவுடன் உடனே நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு