Published:Updated:

கலெக்டரின் வருத்தம்; பீலா ராஜேஷ் பேசியும் தீராத பிரச்னை! -கோவை மருத்துவமனை டீன் மாற்றப்பட்ட பின்னணி

டீன் அசோகன்
டீன் அசோகன்

விஷயம் சுகாதாரத்துறை செயலாளர் வரை சென்றும் பிரச்னை சரி செய்யப்படவில்லை. இதனால் ஒருகட்டத்தில் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

தமிழகத்திலேயே சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ளது. கொரோனா பாதித்தவர்களுக்கு சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ். ஐ மருத்துவமனை மற்றும் அரசு அனுமதி வழங்கியுள்ள சில தனியார் மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பி.ஜி படித்துவரும் பயிற்சி மருத்துவர்கள் பலரும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவருகின்றனர். அப்படி சிகிச்சையளித்து வந்த இரண்டு மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட இரண்டு மருத்துவர்களும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை

இந்நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்களுக்காக செயல்பட்டுவந்த கேன்டீன், எந்த முன் அறிவிப்புமின்றி சமீபத்தில் மூடப்பட்டது. இதனால், ஹாஸ்டலில் தங்கியுள்ள நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் உணவு கிடைக்காமல் தவித்தனர். இதுதொடர்பாக மாணவர்கள், தண்ணீர் மற்றும் உணவு கேட்டு கோவை அரசு மருத்துவமனை டீனுக்கு மனு கொடுத்தனர்.

மேலும், ட்விட்டரில் முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோருக்கு டேக் செய்தும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு ட்விட்டரிலேயே பதிலளித்த பீலா ராஜேஷ், ‘கோவை கலெக்டருடன் பேசிவிட்டேன். அங்கு உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது’ என்று கூறினார். ஆனால், விஷயம் சுகாதாரத்துறை செயலாளர் வரை சென்றும் பிரச்னை சரி செய்யப்படவில்லை. இதனால் ஒருகட்டத்தில் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியோ, “கொரோனா பாதித்த மருத்துவர்கள் அங்கு சென்றதால் கேன்டீனை பூட்டிவிட்டனர். பாதுகாப்புக்காக அப்படி பூட்டினால், மருத்துவமனை நிர்வாகம்தான் உணவுக்கான மாற்று ஏற்பாட்டை செய்திருக்க வேண்டும். மருத்துவமனை நிர்வாகம் இந்தப் பிரச்னையை சரியான முறையில் அணுகவில்லை. இதுதொடர்பாக டீனிடம் நான் எனது வருத்தத்தை தெரிவித்துள்ளேன். சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் என்னிடம் பேசினர்" என்றார்.

புகார்
புகார்

இந்த சர்ச்சை ஒருபுறம் என்றால், கொரோனா பாதிக்கப்பட்டு இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் மருத்துவர்களுக்கே மருந்துகள் வழங்கப்படவில்லை என்று புகார் எழுந்தது. கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவர்கள், ‘தங்களுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் வழங்கப்படுவதில்லை. எனவே, அந்த மருந்தை விரைந்து வழங்குங்கள்’ என்று மருத்துவர்களுக்கான வாட்ஸ்அப் குழுவில் கேட்டுள்ளனர். மருந்து கொடுக்கவேண்டிய உயரதிகாரிகள், மருந்து கேட்ட மருத்துவர்களை, ‘ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் ஸ்டாக் இல்லை’ என்று சொல்லி கடிந்துகொண்டதுடன், அவர்களை அந்த வாட்ஸ்அப் குழுவில் இருந்து நீக்கியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த விவகாரம் மருத்துவர்கள் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்திலும் மருத்துவ மாணவர்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுப்பதில், கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் சில தவறுகளைச் செய்துவிட்டது என்று ஆட்சியரே ஒப்புக்கொண்டார். இப்படிப் பல சர்ச்சைகள், கோவை அரசு மருத்துவக் கல்லூரியைச் சுற்றி வட்டமடித்துக்கொண்டிருந்தன. மாணவர்கள் மீதான புகாரில் மருத்துவக் கல்லூரி டீன் அசோகன் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் தொடர்ந்து எழுப்பப்பட்டது. குறிப்பாக, உணவு விவகாரத்தில் சுகாதாரத்துறை செயலாளர் சொல்லியும் பிரச்னை சரிசெய்யப்படவில்லை. இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

அசோகன்
அசோகன்

இந்த நிலையில்தான், கோவை அரசு மருத்துவக் கல்லூரி டீன் அசோகன் திடீர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர் அசோகன், மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டமும், அறுவை சிகிச்சைப் பிரிவில் முதுநிலை மருத்துவப் பட்டமும் பெற்று, கடந்த 1990-ல் அரசுப் பணியில் சேர்ந்தார். பின்னர், சேலம், கோவை அரசு மருத்துவமனைகளில் பிளாஸ்டிக் அறுவைசிகிச்சைப் பிரிவு துறைத் தலைவராகப் பணியாற்றினார்.  கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதி முதல் கோவை அரசு மருத்துவமனை டீனாகப் பணியாற்றிவந்தார். தற்போது இந்தப் பிரச்னையால் டீன் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டுள்ளார். அசோகனுக்குப் பதிலாக, பேராசிரியர் காளிதாஸ் என்பவருக்கு டீன் பொறுப்பு கூடுதலாக வழங்கப்படுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு