Published:Updated:

தனியார் சிமென்ட் ஆலைக்கு லாபம்; 1,500 ஏக்கர் அரசு ஆலைக்கு நஷ்டமா?-விற்பனை மேலாளரைச் சுற்றும் சர்ச்சை

அரசு சிமென்ட் ஆலை
அரசு சிமென்ட் ஆலை

`ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி அதில் கோடி கோடியாகக் கொள்ளை அடித்துக்கொண்டிருக்கிறார்கள்.'

`அரியலூரில் நூற்றுக்கணக்கிலான ஏக்கர் பரப்பளவில் இயங்கி வரும் தனியார் சிமென்ட் ஆலைகள் அசுர லாபத்தில் இயங்கி வரும் நிலையில் 1,500-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நிலங்களைக் கொண்டு இயங்கி வரும் அரசு சிமென்ட் ஆலை மட்டும் நஷ்டத்தில் இயங்குவது எப்படி? இங்குள்ள அதிகாரிகள் கோடிகோடியாகக் கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறார்கள். விற்பனை மேலாளர் மீது ஏகப்பட்ட முறைகேடு புகார்கள் இருப்பதாக' தொழில்துறை இயக்குநருக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள் ஆலையில் பணிபுரியும் அதிகாரிகள்.

சிமென்ட் ஆலை
சிமென்ட் ஆலை

அரியலூர், ’சிமென்ட் உற்பத்தி நகரம்’ என்று அழைக்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிமென்ட் ஆலைகளும், 160-க்கும் மேற்பட்ட சுண்ணாம்புச் சுரங்கங்களும் இருக்கின்றன. `300 ஏக்கர் நிலங்களை வைத்திருக்கும் தனியார் சிமென்ட் ஆலைகள் கோடி கோடியாகச் சம்பாதிக்கும்போது 1,500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களைத் தன்வசம் வைத்திருக்கும் அரசு சிமென்ட் ஆலை மட்டும் ஏன் நஷ்டத்தில் இயங்குகிறது? ஆனால், இங்குள்ள அதிகாரிகள் மட்டும் கோடி கோடியாகக் கொள்ளை அடித்துக்கொண்டிருக்கிறார்கள்' என்று புகார் எழுந்திருக்கிறது.

`இந்த ஆலைகளில் நிரந்தரப் பணியாளர்களை நியமிக்காமல், ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி அதில் கோடி கோடியாகக் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தட்டிக் கேட்க வேண்டிய அதிகாரிகளும் அவரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு பாக்கெட்டை நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள். அப்படிதான் அரசு சிமென்ட் ஆலையில் விற்பனைப்பிரிவு மேலாளராக இருக்கும் ஜாபர்சாதிக் அலி மீது பல்வேறு முறைகேடுகள் எழுந்து கொண்டிருக்கின்றன’ என குமுறுகிறார்கள் சிமென்ட் ஆலையில் பணிபுரியும் அதிகாரிகள். ``எந்த பிரச்னை வந்தாலும் பரவாயில்லை, நான் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சபீதாவின் ஆள் என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது” எனச் சொல்லி பந்தாவாக வலம் வருகிறார் ஜாபர்சாதிக் அலி என்கிறார்கள்.

அதிக விலைக்கு விற்பனை; லட்சக்கணக்கில் கொள்ளை.. திமுக புகாருக்கு அரியலூர் சிமென்ட் ஆலை சொல்வது என்ன?

இதுகுறித்து சிமென்ட் ஆலைக்குள் நடக்கும் பிரச்னைகள் குறித்து ஓய்வுபெற்ற அதிகாரிகளிடம் பேசினோம்.``ஊரடங்கு நேரத்தில் எந்த ஆலைகளும் இயங்காத நிலையில், அரசு சிமென்ட் ஆலையில் பணிபுரிந்த அதிகாரிகள், சிமென்ட்டை அதிக விலைக்கு விற்று லட்சக்கணக்கில் கொள்ளை அடித்திருக்கிறார்கள். இந்த பிரச்னைதான் தற்போது பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில்தான் விற்பனைப்பிரிவு மேலாளர் ஜாபர் சாதிக் அலி சிக்கியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டதும் அந்தத்துறையின் இயக்குநர் இவரைப்பற்றி முழுமையாக விசாரிக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார். அந்த விசாரணையில்தான் பல்வேறு விவகாரங்கள் வெளிவந்துள்ளது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு விற்பனைப்பிரிவு துணை மேலாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர் இவர்.

துணை மேலாளர் பதவிக்கு தேர்வு செய்வதற்காக ஒப்புதல் பெற்ற 12 பெயர் கொண்ட பட்டியலில் ஜபார் சாதிக் பெயர் இடம்பெற்றுள்ளது
துணை மேலாளர் பதவிக்கு தேர்வு செய்வதற்காக ஒப்புதல் பெற்ற 12 பெயர் கொண்ட பட்டியலில் ஜபார் சாதிக் பெயர் இடம்பெற்றுள்ளது

ஆனால், அப்பதவிக்கு இவர் தகுதியில்லாதவர் மற்றும் அனுபவம் இல்லாதவர் என்று தேர்வுக் குழுவால் நீக்கப்பட்டவர். அதனைத்தொடர் விற்பனை மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்காதவர் இன்று விற்பனைப்பிரிவு மேலாளராகப் பதவியில் இருக்கிறார். இது எப்படி சாத்தியம்? இந்தப் பதவிக்கு வரவேண்டுமென்றால் குறைந்தது பதினைந்து ஆண்டுகள் வரை சிமென்ட் மற்றும் மார்க்கெட்டிங் துறையில் அனுபவம் இருக்க வேண்டும்.

ஆனால், முன் அனுபவமே இல்லாதவர் ஒருவர் விற்பனை பிரிவு (மார்க்கெட்டிங் துறை) கல்வி பயிலாதவர் உயர்பதவியில் எப்படி வந்திருக்க முடியும். இதனை ஆர்.டி.ஐ எடுத்து வைத்திருக்கிறோம். கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தொழில்துறை நிறுவனத்தின் 294-வது நிர்வாகக் கூட்டத்தில் பல கோப்புகளுக்குக் கையெழுத்து பெறப்பட்டது.

நிர்வாக குழு இயக்குனர்களின் ஒப்புதல் பெற்றபின் பணி நியமன ஆணை வழங்கவேண்டும் என்று போடப்பட்டுள்ள மினிட்ஸ்
நிர்வாக குழு இயக்குனர்களின் ஒப்புதல் பெற்றபின் பணி நியமன ஆணை வழங்கவேண்டும் என்று போடப்பட்டுள்ள மினிட்ஸ்

அதில், ஜாபர்சாதிக் அலியின் கோப்புகளையும் நடுவே வைத்து இயக்குநர்களின் ஒப்புதல் பெற்றுள்ளார். இது கிரிமினல் குற்றம் என்றும் இந்த செய்தி இப்போதுதான் வெளிவந்துள்ளது. இதற்குக் காரணம் முன்னாள் இயக்குநர் சபிதா ஐ.ஏ.எஸ் மற்றும் அவர்களுக்குக் கீழ் உள்ள அதிகாரிகள் வரை லட்சக்கணக்கில் பணத்தைக்கொடுத்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.

இந்நிலையில் ஜாபர் சாதிக் அலியின் குடும்பம் மற்றும் நண்பர்கள் இருக்கும் ஊரான சேலம் மண்டலத்திற்கும் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் சென்னை மண்டலத்திற்கும் சிறப்புச் சலுகை விலையாக சிமெண்டை ரூ.265 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி செய்யும் இடத்திலிருந்து தூரம் உள்ளதால் இந்த தொகை நிர்ணயம் என்று நிர்வாகம் சொன்னாலும் உற்பத்தி செய்யும் மாவட்டத்தில் டீலர்களுக்கு கிடைக்கும் விலையைவிட சுமார் ரூ.20 குறைவு எனவும் மேலாளர் நண்பர்கள் மூலம் அரசு சிமெண்ட் டீலர்ஷிப் எடுத்து லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.

அதனைத்தொடர்ந்து அரசு வாகனத்தையே அவரது குடும்பத்திற்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஒரு அதிகாரி மீதே இவ்வளவு முறைகேடு புகார்கள் இருக்கிறது என்று பலமுறை புகார் கொடுத்துவிட்டோம் ஆனால் தொழில்துறை செயலாளர் முருகானந்தம்தான் இவரைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார். தற்பொழுது புதிதாக மாறியுள்ள நிர்வாக இயக்குநருக்குப் புகார் அனுப்பியுள்ளோம்” என்று முடித்துக்கொண்டார்கள்.

அரசு சிமெண்ட் ஆலை
அரசு சிமெண்ட் ஆலை

இதுகுறித்து விற்பனை பிரிவு மேலாளர் ஜாபர்சாதிக் அலியிடம் பேசினோம். முழுமையாகக் கேட்டுக்கொண்டவர், ``இதுகுறித்து உங்களிடம் பேசவேண்டிய அவசியமில்லை. எங்களது உயர் அதிகாரிகளிடம் பேசிக்கொள்கிறேன்” என்று அலட்சியமாகப் பேசி போனை துண்டித்தார். டேன்செம் நிர்வாக இயக்குநர் முரளிதரனிடம் பேசினோம். ``இது தொடர்பாகப் புகார்கள் வந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறேன். கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்பதோடு முடித்துக் கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு