Published:Updated:

`வள்ளுவம் என்பது வாழ்வியல் அறம்!'- திருவள்ளுவர் விவகாரத்தில் பா.ஜ.க-வுக்கு தொடரும் எதிர்ப்பு

திருவள்ளுவர்
திருவள்ளுவர்

தொடர்ந்து தி.மு.க தரப்பில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்ப, தமிழக பா.ஜ.க-வின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் ஒரு ட்வீட் பதிவிடப்பட்டிருக்கிறது.

திருவள்ளுவர் காவி உடையில் இருப்பது போன்ற படம் தமிழக பா.ஜ.க-வின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்தப் புகைப்படத்துக்கு தி.மு.க சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தி.மு.க தலைவர் ஸ்டாலின், `` 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம். எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும். சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்!" எனக் கடுமையாக எச்சரிக்கை கொடுத்திருந்தார். தொடர்ந்து தி.மு.க தரப்பில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்ப தமிழக பா.ஜ.க-வின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் ஒரு ட்வீட் பதிவிடப்பட்டிருந்தது.

bjp tweet
bjp tweet

அதில், ஸ்டாலின் ட்வீட்டை டேக் செய்து, ``யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு" இந்த எளிய குறளை தப்பும் தவறுமின்றி இரண்டு முறை சரியாகப் பொருளுடன் உச்சரித்தால், அந்தப் பதிவை நீக்கி விடுகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே பெரியார் விவகாரம் சர்ச்சையான நிலையில், திருவள்ளுவரை காவி உடையில் வைத்த பா.ஜ.க-வுக்கு தமிழக கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, ``ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, `பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற மனிதத் தத்துவத்தை நிலைநாட்டிய திருக்குறள், உலகப் பொதுமறையாகப் போற்றப்படுகிறது. நாடு, மொழி, இன, மத வேறுபாடுகள் இன்றி அனைவரும் பின்பற்றக் கூடிய வாழ்வியல் நெறியை போதிப்பதால்தான் திருக்குறள் மனித சமூகத்தின் வழிகாட்டும் நூலாகத் திகழ்கின்றது.

அத்தகைய திருக்குறளைத் தந்த `செந்நாப் போதார்’ திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்து, மதச் சாயத்தைப் பூசி பா.ஜ.க-வினர் ட்விட்டரில் படம் வெளியிட்டிருப்பது கண்டனத்துக்குரிய செயலாகும். திருக்குறள் நெறியை இந்துத்துவ `சிமிழுக்குள்’ அடக்க நினைக்கும் இதுபோன்ற பண்பாடற்ற செயல்பாடுகளை பா.ஜ.க நிறுத்த வேண்டும் " எனக் கூறியுள்ளார்.

`` திருவள்ளுவருக்கு, காவி உடையும் திருநீர் பூச்சும் அணிவித்து இழிவு செய்திருக்கிறார்கள். திருவள்ளுவரை சாதி, மதம், மொழி, தேசிய எல்லை கடந்து உலகம் முழுவதும் பலரும் கொண்டாடி வருகிறார்கள். கடந்த காலத்தில் திருவள்ளுவரைக் கொண்டாடிய யாரும் அவரை ஓர் அரசியல் இயக்கம் சார்ந்து சித்திரிக்க முயன்றது கிடையாது.

Vaiko
Vaiko

பா.ஜ.க-வுக்குச் சொந்த பெருமிதங்களும் வளமான வரலாறுகளும் எப்போதும் இல்லாத நிலையில், பெருமைக்குரிய ஆளுமைகளை வண்ணம் பூசி, சில அடையாளங்களை மாற்றி தங்களுக்கானவர்களாக சித்திரிக்கும் இந்த முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்" என சி.பி.எம் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

``வள்ளுவர் சிலையை சேதப்படுத்தலாம். ஆனால், அதைச் செய்த மூடர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். திருவள்ளுவர் என்பவர் சிலை மட்டும் இல்லை. வள்ளுவம் என்பது வாழ்வியல் அறம். சிலையை சேதப்படுத்தியவர்கள் மறைந்து மண்ணோடு போனபின்பும் வள்ளுவம் வாழும்" எனக் கொதிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் எம்.பி கனிமொழி.

பின் செல்ல