Published:Updated:

ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் ஆட்சிப்பணி அதிகாரிகள்! - ‘சங்கல்ப்’ அகாடமியிலிருந்து கிளம்பும் சர்ச்சைகள்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் ஆட்சிப்பணி அதிகாரிகள்
ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் ஆட்சிப்பணி அதிகாரிகள்

குமாரசாமி சொன்னதுபோல ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்தும் மையங்களில் பயிற்சிபெற்றவர்கள் 4,000 பேர் அதிகாரிகளாக வந்திருந்தால் அது தேசத்துக்கு மிகவும் நல்லது

பிரீமியம் ஸ்டோரி

“நம் நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பயிற்சிபெற்ற 4,000 பேர் இந்திய ஆட்சிப்பணியில் சேர்ந்துள்ளனர். 2016-ம் ஆண்டு மட்டுமே அங்கிருந்து 626 பேர் இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் வெற்றிபெற்றுள்ளனர். நாடு எங்கே சென்றுகொண்டிருக்கிறது?’’ - சமீபத்தில் கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவருமான குமாரசாமி இப்படியொரு திரியைக் கொளுத்திப்போட இந்த விவகாரம் பெரும் விவாதமாக மாறியிருக்கிறது!

குமாரசாமியின் கருத்துக்கு கர்நாடக பா.ஜ.க-விலிருந்து உடனடியாக எதிர்ப்பு கிளம்பியது. அந்த மாநில பா.ஜ.க செயலாளர் ரவிக்குமார், “குமாரசாமி சொன்னதுபோல ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்தும் மையங்களில் பயிற்சிபெற்றவர்கள் 4,000 பேர் அதிகாரிகளாக வந்திருந்தால் அது தேசத்துக்கு மிகவும் நல்லது. குமாரசாமியும் அவரின் குழந்தைகள், பேரக்குழந்தைகளை ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேர்க்கட்டும். நாங்கள் அவர்களையும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளாக ஆக்குகிறோம்’’ என்று பதிலடி கொடுத்தார். அதற்கு குமாரசாமியோ, “நாடு தற்போது சென்றுகொண்டிருக்கும் பாதையைப் பார்க்கும்போது, அந்தக் கருத்தைக் கூற வேண்டும் என்று நினைத்தேன். மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும்; உண்மையைச் சொல்ல எனக்கு எந்த பயமும் இல்லை. நான் யாருக்கும் எதிராகவோ, ஆதரவாகவோ இந்தக் கருத்தைக் கூறவில்லை’’ என்று விளக்கம் கொடுத்திருந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்ய சபாவின் எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவும், “ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அனைத்துத் துறைகளிலும் ஊடுருவியிருக்கிறது. குறிப்பாக, கல்வித்துறையில் அதிகமாகவே ஊடுருவியிருக்கிறது’’ என்று விமர்சித்திருக்கிறார்.

குமாரசாமி - மல்லிகார்ஜுன கார்கே
குமாரசாமி - மல்லிகார்ஜுன கார்கே

“எதன் அடிப்படையில் இது போன்ற விமர்சனங்களை எதிர்க்கட்சியினர் முன்வைக்கின்றனர்?” என்று காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியிடம் பேசினோம்... “குமாரசாமியும் மல்லிகார்ஜுன கார்கேவும் சொல்லியிருக்கும் கருத்துகள் நூற்றுக்கு நூறு உண்மை. அனைத்துத் துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஊடுருவிவருகின்றனர். உதாரணத்துக்கு, இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் இணைச் செயலாளர்கள் பொறுப்புக்கு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பின்புலத்தி லுள்ளவர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக இல்லாதபோதும் நேரடியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்துத் துறைகளும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும் என்கிற பாசிசத்தின் மாடல்தான் இது. கல்வித்துறை மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அதிகார மையங்கள் இவர்களின் முதன்மையான இலக்குகளாக இருக்கின்றன. ‘சங்கல்ப்’ என்னும் பெயரில் அந்த அமைப்பு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் கோச்சிங் சென்டர் களை நடத்திவருகிறது. அங்கிருந்து பலர் அதிகாரிகளாகத் தேர்வாகின்றனர். அதிலேயே பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன. அதுமட்டுமல்ல... பணியில் விருப்ப ஓய்வுபெற்று பா.ஜ.க-வில் சேரும் சிலரும் சங்கல்ப்பில் படித்தவர்களாக இருக்கிறார்கள்’’ என்றார்.

ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் ஆட்சிப்பணி அதிகாரிகள்! - ‘சங்கல்ப்’ அகாடமியிலிருந்து கிளம்பும் சர்ச்சைகள்...

தி.மு.க-வைச் சேர்ந்த கல்வியாளர் பாலா கூறுகையில், “சங்கல்ப் அகாடமியை 34 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்திவருகிறது. 2014-ல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 2015, 2016, 2017 ஆகிய மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் மொத்தம் 3,413 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ் பணிகளுக்குத் தேர்வாகியிருக்கிறார்கள். அவர்களில் 60 சதவிகிதம், அதாவது 2,007 பேர் சங்கல்ப் அகாடமியில் படித்தவர்கள். இவர்களுக்கு நேர்முகத்தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன என்கிற சந்தேகமும் இருக்கிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக ஆளுநர் ரவி உள்ளிட்டோர் அந்த அகாடமிக்குச் சென்று அடிக்கடி உரையாடுகிறார்கள். அமித் ஷா அவர்களின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். ஆட்சிப்பணியில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் கொண்டவர்கள் ஊடுருவுகிறார்கள் என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் இருக்க முடியும்?” என்று கேட்கிறார்.

“ஆமாம், ஆர்.எஸ்.எஸ் பின்னணியிலிருந்துதான் அதிகாரிகள் வருகிறார்கள், இதிலென்ன தவறு இருக்கிறது’’ என்று கேட்கிறார் பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன். “இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் சிந்தனையிலும் ஊடுருவ வேண்டும்; அனைத்துத் துறைகளிலும் நாட்டின்மேல் பக்தி கொண்டவர்களைக் கொண்டுவர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் நினைக்கிறது. அதற்காகத் திட்டமிட்டே சில வேலைகளைச் செய்துவருகிறோம். நேரடியாக இல்லாவிட்டாலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பயிற்சிபெற்றவர்கள், அந்த சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான அமைப்புகளை நடத்திவருகிறார்கள். அதன் மூலம் ஒவ்வொரு துறையிலும் ஆர்.எஸ்.எஸ் சிந்தனையுடைவர்கள் சேர்ந்துவருகிறார்கள். இதில் தவறேதும் இல்லையே... ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் நடத்தும் சென்டர்களிலிருந்து செல்பவர்களுக்கு நேர்முகத் தேர்வுகளில் முன்னுரிமை வழங்குகிறார்கள் என்பதற்கு ஆதாரம் இருந்தால் வழக்கு தொடரட்டும்.

ஜோதிமணி - பாலா - வானதி சீனிவாசன்
ஜோதிமணி - பாலா - வானதி சீனிவாசன்

தமிழகத்தில் பெரியாரின் பெயரில், திராவிடத்தின் பெயரில் ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்ட பயிற்சி நிறுவனங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. அங்கிருந்து அரசாங்கப் பணிகளுக்குத் தேர்வாகும் நபர்களை, அங்கு படித்ததாலேயே வேலைக்கு எடுத்துக்கொள்கிறார்கள் என்று நாங்கள் சொல்வதில்லையே... அதேபோல ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பின்புலம் கொண்டவர்களை நேரடியாக அரசுப் பணிகளில் நியமிக்கக் கூடாது என்று எந்தச் சட்டத்திலும் சொல்லவில்லை. பணிக்குச் சேர்ந்த பிறகு அரசு விதிமுறைகளை அவர்கள் மீறுகிறார்களா என்பதைத்தான் பார்க்க வேண்டும்” என்றார் ஆணித்தரமாக!

நாட்டை வழிநடத்தவேண்டியது அரசியலமைப்புச் சட்டம்தானே தவிர, தனி அமைப்போ அல்லது சித்தாந்தமோ கிடையாது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு