Published:Updated:

`பதான்’ பட பாடல் விவகாரம்: ஷாருக், தீபிகாவை குறிவைத்து தாக்குதலா?! - தொடரும் சர்ச்சை

ஷாருக் கான், தீபிகா படுகோன்

ஷாருக்கான் நடித்த 'பதான்' படத்தின் பாடல் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, ஒரு மதத்தைப் புண்படுத்துவதாக அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றனர். இதன் பின்னணி என்ன?

`பதான்’ பட பாடல் விவகாரம்: ஷாருக், தீபிகாவை குறிவைத்து தாக்குதலா?! - தொடரும் சர்ச்சை

ஷாருக்கான் நடித்த 'பதான்' படத்தின் பாடல் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, ஒரு மதத்தைப் புண்படுத்துவதாக அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றனர். இதன் பின்னணி என்ன?

Published:Updated:
ஷாருக் கான், தீபிகா படுகோன்

கடந்த சில தினங்களுக்கு முன் ஷாருக்கான்-தீபிகா படுகோன் நடித்த 'பதான்' படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல் 'பேக்ஷரம் ரங்' வெளியானது. அதில் இருவர் அணிந்திருந்த உடையின் நிறங்கள் சர்ச்சையாகி இருக்கிறது. இதில் தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி உடையும், ஷாருக்கான் பச்சை, வெள்ளை ஆடையும் அணிந்திருந்தனர். இதில் தீபிகா உடை ஒரு மதத்தையும், ஷாருக்கான் உடை பாகிஸ்தான் நாட்டு கொடியைக் குறிப்பிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. எனவே, இந்தப் பாடல் காவி உடையை அவமதிக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டதாகவும், இந்தப் படத்திற்குத் தடை விதிக்க வேண்டுமெனவும் மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்தார். இதன்பிறகு சமூகவலைத்தளத்தில் இது தொடர்பான விவாதங்கள் அனல் பறக்கிறது.

பதான் புறக்கணிப்பு
பதான் புறக்கணிப்பு

வலுக்கும் எதிர்ப்பு!

இது தொடர்பாக ஹனுமன் காரி மதத்தின் தலைவர் ராஜூ தாஸ் பேசியதாவது, ``பாலிவுட் சினிமா சனாதன தர்மத்தைத் தொடர்ந்து அவமதிக்கிறது. காவி நிறத்தில் அணிந்திருக்கும் பிகினி உடை இந்து மதத்தைப் புண்படுத்துகிறது. எனவே, மக்கள் அனைவரும் இதைப் புறக்கணிக்க வேண்டும். அதைமீறி திரையரங்குகளில் இது திரையிடப்பட்டால், தீயிட்டுக் கொளுத்த வேண்டும். இந்தப் படத்தை எடுத்தவர்களுக்கும் அதுதான் தண்டனை” என மிரட்டல் தொனியில் பேசியுள்ளார்.

பிரக்யா சிங்
பிரக்யா சிங்

காவி நிறத்தை ஆபாசமாக சித்தரித்த படத்தை யாரும் பார்க்கக் கூடாது. இந்தக் செயலில் ஈடுபட்டவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூர் பேசியிருக்கிறார்.

மேலும் வீர சிவாஜி அமைப்பை சேர்ந்தவர்கள் மத்திய பிரதேச மாநில இந்தூரில் பதான் படத்தைத் தடை செய்ய கோஷமிட்டனர். இன்னும் ஒருபடி மேலே சென்று, ஷாருக்கான் - தீபிகா போஸ்டர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறு பாடல்களுக்கு எதிர்ப்பு அதிகரிக்கவே, இதற்கான ஆதரவுக் குரலும் அதிகரித்தது. கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் பேசிய ஷாருக்கான், "சமூகவலைத்தங்களில் பல நேரம் பிற்போக்கான கருத்துக்கள் மனிதர்கள் மிகக் கீழ்த்தரமாக சிந்திக்க வைக்கிறது. எதிர்மறை கருத்துக்கள் என்னை ஒருபோதும் பாதிக்காது” என பதிலைச் சொன்னார். எனினும், பலரும் காட்டமான விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். குறிப்பாக, இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், ``காவி உடை அணிந்து குற்றச்செயலில் ஈடுபடுவது சரியா?. மேலும் காவி உடை அணிந்து கொண்டு வெறுப்புப் பிரசாரம் செய்வது, பாலியல் வன்கொடுமை செய்வது, பாலியல் குற்றவாளிகளுக்கு மாலை அணிவிப்பது தவறில்லை எனும் போது, எப்படி நடிகை காவி நிற உடை அணிவது மட்டும் எப்படி தவறாகும்?” என்னும் கேள்வியைக் கேட்டிருந்தார்.

பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ்

இதற்கு முன்பு பாலிவுட்டில் மாதுரி - அனில் கபூர், கத்ரினா- அக்ஷய் குமார், கரீனா என இவர்கள் காம்போவில் வெளியான காதல் பாடல்களில் நடிகை அணிந்திருந்த காவி உடையைக் குறிப்பிட்டு, `ஷாருக்கான் - தீபிகா படுகோன் படத்திற்கு மட்டும் ஏன் எதிர்ப்பு?’ என சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், சிலர் தீபிகா படுகோன் நடித்த பாஜிராவ் மஸ்தானியில் தீபிகா பேசிய வசனத்தைப் பதிவிட்டு அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதில், இந்தப் பேஷ்வா குடும்பத்தில் சேர வேண்டும் என்றால், காவி நிற துணியைக் கொண்டு வர வேண்டும் எனக் கூறப்படும் . அதற்கு இஸ்லாமிய பெண்ணான தீபிகாவின் பதில்,"நிறங்கள் ஒவ்வொன்றையும் மதம் தான் தீர்மானிக்கிறது. ஆனால், நிறம் ஒரு மதம் அல்ல. சில மனிதர்கள் கண்களில் காணும் நிறமெல்லாம் மதமாக தெரிகிறது” எனப் பதில் கூறியிருப்பார். இதைப் பலரும் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு, விமர்சனத்துக்குப் பதில் எனக் கூறி வருகிறார்கள்.

 பாஜிராவ் மஸ்தானி போஸ்டர்
பாஜிராவ் மஸ்தானி போஸ்டர்

ஷாருக் - தீபிகா மீது தனித் தாக்குதலா?

இவர்கள் இருவர் மீதும் பாஜக வைக்கும் முதல் குற்றச்சாட்டு இதுவல்ல. 2015-ம் ஆண்டு, பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா, ஷாருக்கான் இந்தியாவில் வசித்தாலும், அவர் இதயம் பாகிஸ்தானுக்குத் துடிக்கிறது எனக் கூறியது சர்ச்சையானது. அதேபோல், பாகிஸ்தானில் உள்ள ஜமாத்-உத்-தாவா அமைப்பின் தலைவர் கபிஸ் சயீத் போன்று ஷாருக்கான் பேசுவதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியது விமர்சனத்துக்குள்ளானது. இதற்கு சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

அதே போல், தீபிகா படுகோன், குடியுரிமை சட்டத்திருத்துக்கு எதிராகப் போராடிய ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தது, தீபிகா ராம் லீலா படத்தின் பெயர் தலைப்புக்கு எழுந்த சர்ச்சையால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதன் பிறகும் திரையரங்குகளுக்கு வெளிய மத அமைப்புகள் போஸ்டரை எரித்தது என தீபிகாவும் பல விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறார்.

பதான் பட போஸ்டர்
பதான் பட போஸ்டர்

ஆனால், இம்முறை படத்தில் இடப்பெற்றிருக்கும் பாடலில் நடிகர்கள் அணிந்த உடையின் நிறத்துக்குச் சர்ச்சை எழுந்திருக்கிறது. நிறம் மாற்றப்பட்டால் மட்டுமே அப்படம் திரையிடப்படும் என மத்திய பிரதேச அமைச்சர் கூறியிருக்கிறார். ஆனால், இது தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிப்பைப் படக்குழு வெளியிடாமல் இருக்கிறது.