Published:Updated:

`கால கீழ வச்சா வெட்டிடுவேன்’ன்னாங்க; அதான் பேசுனேன்! - சர்ச்சையில் பெரம்பலூர் வட்டாட்சியர்

வட்டாட்சியர் கவிதா
வட்டாட்சியர் கவிதா

`வந்ததுமே காரில் உட்கார்ந்துகொண்டு அலட்சியமாகப் பேசினார். அத்தோடு அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே மக்கள் மேடம் கொஞ்சமாவது மக்களுக்கு மதிப்பு கொடுத்துக் கீழ இறங்கிப் பேசுங்கள் என்று சொன்னார்கள்’.

`என்ன எவன்டா கீழ இறங்கச் சொன்னது. நேர்ல வாங்கடான்னு' பெண் வட்டாட்சியர் ஒருவர் பொதுமக்களைத் தரக்குறைவாகத் திட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அத்தோடு மக்களைத் தரக்குறைவாகப் பேசிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் அந்த அதிகாரியைச் சிறைப்பிடிப்போம் என்று ஆவேசப்படுகிறார்கள் பொதுமக்கள்.

பெரம்பலூர்  போலீஸார்
பெரம்பலூர் போலீஸார்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டைப் பகுதியில் வட்டாட்சியராக இருப்பவர் கவிதா. பசும்பலூர் கிராமத்தில் உள்ள அரசு ஆதி திராவிடர் விடுதியை, கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இந்த வார்டில், சென்னை கோயம்பேட்டிலிருந்து பெரம்பலூர் திரும்புபவர்கள் தங்க வைப்பதற்காகவும், ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில், பசும்பலூர் கிராம மக்கள், இங்கு தனிமைப்படுத்தும் கொரோனா வார்டு அமைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கைகளில் மருந்து பாட்டில், மண்ணெண்ணெய் ஆகியவற்றை வைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்வோம் எனத் தெரிவித்துள்ளனர்.

வட்டாட்சியர் கவிதா
வட்டாட்சியர் கவிதா

அப்போது, சம்பவ இடத்தில் இருந்த வட்டாட்சியர் கவிதா, எதிர்ப்பு தெரிவித்த மக்களைத் தரக்குறைவாக மிரட்டும் தொனியில் பேசியதாகவும் சொல்லப்படுகிறது. இந்தநிலையில் மக்களை மிரட்டும் வட்டாட்சியர், அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறன்றன. இதையடுத்து, தரக்குறைவாகப் பேசிய வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆட்சியரிடம் மனுகொடுக்கவும் தயாராகி வருகின்றனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சிலரிடம் பேசினோம். ``கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைக் கிராமத்தின் எல்லைப் பகுதியில் வைத்து ட்ரீட்மென்ட் பார்க்காமல் மையப்பகுதியில் உள்ள பள்ளியில் வைத்து ட்ரீட்மென்ட் பார்த்தால் என்ன அர்த்தம்? இவர்களால் எங்களுக்கும் எங்களது பிள்ளைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று இரண்டு நாள்களுக்கு முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். இந்த நிலையில் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வட்டாட்சியர் கவிதா இங்கு வந்தார்.

போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்கள்
போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்கள்

வந்ததுமே காரில் உட்கார்ந்துகொண்டு அலட்சியமாகப் பேசினார். அத்தோடு அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே மக்கள் மேடம் கொஞ்சமாவது மக்களுக்கு மதிப்பு கொடுத்து கீழ இறங்கிப் பேசுங்கள் என்று சொன்னார்கள். அதற்கு அவர், என்ன எவன்டா கீழ இறங்கச் சொன்னது. நேர்ல வாங்கடான்னு வட்டாட்சியர் ஏக வசனத்தில் தரக்குறைவாகப் பேசத்தொடங்கினார். மக்களும் பதிலுக்குப் பேச பெரும் பிரச்னையாக வெடித்தது.

அதிகாரிகள் என்ன வானத்திலிருந்து குதித்தவர்களா? ஏன் மக்களிடம் பேசும்போது கீழ் இறங்கிப் பேசமாட்டார்களா? எங்கள் மீது தரக்குறைவாகப் பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல் அவர் இங்கு வரும் போது சிறைப்பிடிப்போம். அத்தோடு எங்களை தரக்குறைவாகப் பேசியவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆட்சியரிடம் மனுகொடுக்க இருக்கிறோம்” என்று ஆவேசப்பட்டார்கள்.

இதுகுறித்து வட்டாட்சியர் கவிதாவிடம் பேசினோம். ``சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வந்தவர்களைத் தனிமைப்படுத்துவதற்காக பசும்பலூரில் உள்ள பள்ளியைத் தேர்வு செய்தோம். அதுவும் நான் செய்யவில்லை. ஆட்சியர் தேர்வு செய்தார். இந்தநிலையில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மணிகண்டன் என்பவர் என்னிடம் வந்து இந்த ஊரைத் தேர்வு செய்யக்கூடாது. இவர்களால் எங்களுக்கும் பாதிக்கும் என்றார்.

கார் முற்றுகை
கார் முற்றுகை

அதற்கு நான், `இவர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை. சந்தேகத்தின் அடிப்படையில் உள்ளவர்கள். இவர்களை வீட்டில் இருக்கச் சொல்லி உத்தரவிட்டாலும், அவர்கள் யார் பேச்சையும் கேட்காமல் கடைவீதிகளுக்கு வந்துவிடுகிறார்கள் அவர்களைக் கண்காணிப்பில் வைத்திருக்கவேண்டும் என்பதற்காக ஆட்சியர் உத்தரவிட்டதால், இந்த இடத்தைத் தேர்வு செய்தோம்' என்று சொன்னேன். அதற்கு ஒன்றும் சொல்லாமல் கிளம்பிவிட்டார். கொஞ்சம் நேரத்தில் மக்களைத் திரட்டிக்கொண்டுவந்து என்னோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்தக் கூட்டத்திலிருந்த சின்ன பையன் ஒருவன், `கால கீழ வச்சா உன்ன வெட்டுவேண்டி'ன்னு அவதூறான வார்த்தையில் பேசினார். அத்தோடு நான் உட்கார்ந்திருக்கும் ஜீப்போடு என்னைக் கொளுத்தி விடுவதாக மண்ணெண்ணெய் கேனுடன் வந்தார்கள். அந்த ஆத்திரத்தில்தான் பேசினோன். நானும் ஒரு பெண் தானே. கொரானோ நேரத்திலும் யாருக்காக வேலை பார்க்கிறோம்?’’ எனத் தழுதழுத்தார்.

அடுத்த கட்டுரைக்கு