Published:Updated:

`அரசிடம் கேள்வி கேட்கலாம்.. தனியாரிடம்?!' -சர்ச்சையை ஏற்படுத்திய `அட்சய பாத்திரம்' திட்டம்

அடிக்கல் நாட்டுவிழா
அடிக்கல் நாட்டுவிழா

பள்ளி மாணவர்களுக்கு, தனியார் அமைப்பு காலை உணவு வழங்கத் திட்டமிட்டுள்ளது. இதை தமிழக அரசு ஊக்குவிப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘மதிய உணவுத் திட்டம்’. இதைக் கேட்டதும் முதலில் நம் நினைவுக்கு வருவது தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பெயர்தான். ஏனெனில், அவர் தான் வறுமையின் காரணமாகச் சிறு வயதிலேயே வேலைக்குச் செல்லும் மாணவர்களைப் பள்ளிக்கு வரவழைப்பதற்காகவும் அவர்களின் கல்வி வளர்ச்சியை மனதில் கொண்டும் இந்தத் திட்டத்தை முதன்முதலில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார்.

முன்னதாக, நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில், அப்போதைய சென்னை மாகாணத்தின் ஒரு சில பள்ளிகளில் மட்டும் இந்தத் திட்டம் செயல்பட்டுவந்தது. பின்னர், இதை அறிந்த காமராஜர் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசித்து, மதிய உணவுத் திட்டத்தை அரசுத் திட்டமாக தமிழகம் முழுவதும் கொண்டுவந்தார்.

சத்துணவு
சத்துணவு

காமராஜர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டம், பின்னர் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் சத்துணவுத் திட்டமாக விரிவடைந்தது. பள்ளி மாணவர்களுக்கு ஏதோ ஒரு சாதம் என்று வழங்காமல், அது சத்துள்ளதாக இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது. பிறகு, கருணாநிதி ஆட்சிக்காலத்தில் இந்த திட்டத்தில் முட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. ஜெயலலிதா ஆட்சியில், சத்துணவுத் திட்டத்தில் பயறுகள் போன்ற இதர சத்துணவுப் பொருள்கள் கொண்டுவரப்பட்டன.

கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக சத்துணவுத் திட்டம் தமிழகத்தில் நடைமுறையில் இருந்துவருகிறது. இதுவரை மதிய உணவுத் திட்டமாக மட்டுமே இருந்துவந்த இதைத் தற்போது காலையிலும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், பள்ளி மாணவர்களுக்கு காலை வேளையில் உணவு வழங்குவது தமிழக அரசு இல்லை ‘அட்சய பாத்திரம்’ என்ற தனியார் அறக்கட்டளை. இந்த அறக்கட்டளை சார்பில் தொடங்கவுள்ள இரண்டு சமையல் கூடங்களின் அடிக்கல் நாட்டு விழா, சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. தனியார் அமைப்பின் திட்டத்தை அரசு ஊக்குவிப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சத்துணவு
சத்துணவு

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தனியார் தொண்டு அறக்கட்டளை அமைப்பு, அட்சய பாத்திரம். 2000-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, உணவு சமைத்து இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு நேரில் சென்று உணவு வழங்கிவருகிறது. பசிக் கொடுமையைத் தவிர்ப்பது, உணவால் மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது, பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பது, மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்குதல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டுவருகிறது.

Vikatan

இந்தியா முழுவதும் உள்ள 16,856 அரசு மற்றும் அரசு சாரா பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 18.02 லட்சம் குழந்தைகளுக்கு, இந்த அறக்கட்டளை உணவு வழங்கிவருகிறது. இதற்காக ஆந்திரா, அஸ்ஸாம், சத்தீஸ்கர், குஜராத், கர்நாடகா, ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் போன்ற பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் சமையல் கூடங்களை உருவாக்கி, உணவு சமைக்கப்பட்டுவருகிறது. இதற்காக சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து நிதி வசூலிக்கப்படுகிறது.

அட்சய பாத்திரம் அறக்கட்டளை
அட்சய பாத்திரம் அறக்கட்டளை

பக்திவேதாந்த சுவாமி பிரபாதாவின் (அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை நிறுவியவர்) கனவை நனவாக்கும் முயற்சியில் இந்த அமைப்பு செயல்பட்டுவருகிறது. 2020-ம் ஆண்டுக்குள் 50 லட்சம் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இயங்கிவருகிறது. ஆனால், இங்கு தயாரிக்கப்படும் உணவுகளில் பூண்டு, வெங்காயம் போன்றவை சேர்க்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதனால் உணவின் சுவை குறைந்து, பெரும்பாலான மாணவர்கள் இவர்களின் உணவுகளை உண்பதில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் கடந்த வருடம் கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சையானது. ஆனால், இந்த அறக்கட்டளை சத்தான உணவையே தயாரிப்பதாகவும் வேறு சிலர் கூறுகின்றனர்.

Vikatan

நிலைமை இப்படி இருக்க, இந்த அறக்கட்டளை தற்போது சென்னை மாநகராட்சியுடன் இணைந்து உணவு தயாரித்து, அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதை அரசே ஊக்குவித்து, அதன் அடிக்கல் நாட்டு விழாவை அரசு விழா போல நடத்தியுள்ளது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

அறக்கட்டளையின் சமையல் கூடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

அட்சய பாத்திரம் அறக்கட்டளை
அட்சய பாத்திரம் அறக்கட்டளை

இதுமட்டுமில்லாது, இந்த அறக்கட்டளையின் பணிகளைப் பாராட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஐந்து கோடி ரூபாய் நிதியுதவியும் அளித்துள்ளார். ` அரசு செய்யவேண்டிய வேலையைத் தனியார் செய்கிறது. இதற்கு, அரசு துணை நிற்கிறது. கல்விக்காக கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த வேளையில், ஒரு தனியார் அமைப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்குவது சரியானதா?' என்று கல்வியாளர்களும் பெற்றோர்களும் கேள்வியெழுப்புகின்றனர்.

இந்த விவகாரம் பற்றி நம்மிடம் பேசிய கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ``2005-ம் ஆண்டு முதல் கல்விக்காகவே தனியாக வரி வசூல் செய்யப்பட்டுவருகிறது. அந்த வரியின்மீது வரியாக செஸ் வரியும் வசூலிக்கப்பட்டுவருகிறது. இந்த செஸ் வரி வசூலிக்கப்படாத காலத்திலேயே, தமிழக அரசு அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கிவந்தது. மதிய உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்துவது, அதை வலுவாக்குவதற்காகக் காலை உணவு திட்டத்தைக் கொண்டு வருவதை அரசு செய்ய வேண்டும்.

அட்சய பாத்திரம் அடிக்கல் நாட்டுவிழா
அட்சய பாத்திரம் அடிக்கல் நாட்டுவிழா

மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காகத்தான் சத்துணவு ஊழியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலமாகவே அந்தந்தப் பள்ளியில் தயார்செய்து மாணவர்களுக்கு வழங்குவதுதான் நியாயமானதாக இருக்க முடியும். அதைத் தனியாரிடம் கொடுப்பது ஒரு நியாயமான அணுகுமுறை கிடையாது. காலை உணவு தனியாரிடம் சென்றால், அதன் விரிவாக்கமாக மதிய உணவும் தனியார்வசம் செல்ல வாய்ப்புள்ளது. எல்லாவற்றையும் தனியாரிடம் கொடுப்பதற்கு, எதற்காகக் கல்விக்கு எனத் தனியாக வரி வசூலிக்கிறார்கள். இப்படி அனைத்திலும் தனியாரை அனுமதிப்பதை ஒட்டுமொத்தமாகக் கல்வியிலிருந்து அரசு விலகிக்கொண்டு, கல்வித் துறையை சந்தையாக்கும் ஏற்பாடாகத்தான் பார்க்கிறோம்.

தனியார் அமைப்பு வழங்கும் உணவில் பூண்டு, வெங்காயம் இல்லை என்றால், அது எப்படி சத்தான உணவாக இருக்க முடியும். பூண்டுக்குத் தனியாக மருத்துவ குணங்கள், பயன்கள் இருக்கின்றன. அதேபோலத்தான் வெங்காயத்துக்கும் இருக்கிறது. உணவிலிருந்து இதை நீக்கிவிட்டால், அது முழுமையான சத்தான உணவாக இருக்காது. தனியார் அமைப்பு உணவளித்தால் அவர்களின் விருப்பம் போலத்தான் வழங்குவார்கள்.

அட்சய பாத்திரம் அடிக்கல் நாட்டுவிழா
அட்சய பாத்திரம் அடிக்கல் நாட்டுவிழா

ஆனால், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு சத்தானதாக இருக்க வேண்டும். இதற்காகத்தான் இந்தப் பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறேன். ஒரு குழந்தைக்கு அனைத்து வகையான சத்தும் தேவை. அதனால் மாணவர்களின் உடல் மற்றும் மனவளர்ச்சிக்குத் தேவையான அனைத்தும் கலந்த உணவு அளிக்க வேண்டும். இதையே அரசு செய்தால் அவர்களிடம் ஏன் எனக் கேள்வி கேட்கலாம். ஆனால், தனியாரிடம் சென்று அப்படி கேட்க முடியாது. அதனால் இந்தத் திட்டத்தை அரசு எடுத்து நடத்த வேண்டும்” என்று ஆவேசமாகப் பேசி முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு