Published:Updated:

`குழந்தை ராமர்; கூட்டிச்செல்லும் மோடி!' - சர்ச்சையான ட்வீட்க்கு வானதி சீனிவாசன் விளக்கம்

ராமர் கோயில் படம்
ராமர் கோயில் படம்

பா.ஜ.க-வின் மாநிலத் துணைத் தலைவரான வானதி சீனிவாசன் தன் ட்விட்டர் பக்கத்தில் ராமர் படம் ஒன்றை பகிர்ந்திருப்பதை சமூக ஊடகங்களில் சிலர் சர்ச்சையாக்கியிருக்கிறார்கள்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி, 40 கிலோ வெள்ளிச் செங்கல்லைப் பதித்தார். சென்னையில் உள்ள பா.ஜ.க-வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கே.டி.ராகவன், கரு.நாகராஜன் உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகளும் தொண்டர்கள் பங்கேற்றனர். பா.ஜ.க-வில் சேர்ந்துவிட்டதாகச் சொல்லப்பட்ட தி.மு.க-வைச் சேர்ந்த ஆயிரம் விளக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வான கு.க.செல்வமும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

ராமர் கோயில் கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டும் விழாவையொட்டி, பா.ஜ.க-வின் மாநிலத் துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தன் ட்வீட்டர் பக்கத்தில் ஓவியம் ஒன்றை பகிர்ந்துள்ளார். புதிதாகக் கட்டப்படவிருக்கும் ராமர் கோயிலை நோக்கி, ராமரின் கையைப் பிடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி அழைத்துச் செல்வதுபோல அந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. பெரிய உருவத்தில் மோடியையும் ஒரு குழந்தையைப் போல ராமரையும் அதில் வரைந்துள்ளனர். அந்த ஓவியத்தை, `படம் போதும்... கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வைச் சொல்ல...’ என்ற வாசகத்துடன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் வானதி சீனிவாசன்.

அந்தப் பதிவுக்கு, பா.ஜ.க-வையும் பிரதமர் மோடியையும் விமர்சித்து சிலர் பின்னூட்டமிட்டுள்ளார்கள். மேலும், முகநூலில் சிலர் விமர்சனம் செய்துள்ளனர். `ராமனுக்கே மோடிதான் வழிகாட்டியா?’ என்பது போன்ற விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இது குறித்து வானதி சீனிவாசனிடம் கேட்டோம்.

ராமல் கோயில் மாதிரி படம்
ராமல் கோயில் மாதிரி படம்

``அது ஓர் அழகான படம். நம் நாட்டில் கடவுளை ஒரே மாதிரி வழிபடுவது கிடையாது. கடவுளை ஒரு குழந்தையாகவோ, ஒரு தாயாகவோ, ஒரு தந்தையாகவோ பார்க்கிறோம். பல்வேறு வடிவங்களில் மனதுக்கு நெருக்கமானவர்களாகக் கடவுளர்களைக் காண்கிற நாடு இது. அதனால்தான், இந்து மதத்தில் இவ்வளவு மதச் சுதந்திரம் இருக்கிறது. சகிப்புத்தன்மையும் ஏற்புத்தன்மையும் இருக்கக்கூடிய மதம் இது. அது ஒரு குழந்தை ராமர். அந்தக் குழந்தை ராமரின் கையைப் பிடித்து அழைத்துச் செல்வது மாதிரியான உருவகம் அது. சர்ச்சையாக்குவதற்கு அதில் ஒன்றும் கிடையாது.

தமிழ் கடவுள் முருகன், ஔவையார் உரையாடலை அறிவோம். அதன்படி கடவுளைவிட ஔவை பெரியவர் என்று அர்த்தமா? இல்லை. அந்த இடத்தில் தமிழ் பெரிது. முருகனைவிட தமிழுக்கு உயர்வு கொடுப்பதற்கான கதை அது. அதனால், அந்தந்த சந்தர்ப்பங்களில் கடவுளை நாம் எப்படிப் பார்க்க வேண்டும் என்பது முக்கியம். கடவுளர்களை எல்லா நேரத்திலும் ஒரே மாதிரியாகப் பார்க்க வேண்டும் என்று இந்து மதமே சொல்லித்தரவில்லை.

அயோத்தியில் பூமி பூஜை
அயோத்தியில் பூமி பூஜை

பாரதியார்கூட, `கண்ணன் என் வேலைக்காரன்’ என்று பாடியிருக்கிறார். கண்ணனை குழந்தையாகப் பார்க்கிறோம். அந்த மாதிரி, கடவுளை தனக்கு உற்ற நண்பனாக, மனதுக்கு நெருக்கமான ஒருவராகப் பார்ப்பதில் தவறே கிடையாது. அந்த வகையில், பிரதமர் மோடி கையைப் பிடித்துக் கூட்டிச்செல்வது குழந்தை ராமரை. அயோத்தியில் இருப்பதே `லாலா’ ராம்தான். அதாவது, குழந்தை ராமர்தான். அது பிறந்த இடம்தானே அது” என்றார் வானதி.

அடுத்த கட்டுரைக்கு