Published:Updated:

`வழக்கு நிலுவையில் இருக்கும்போது அடிக்கல் நாட்டலாமா?!'- சர்ச்சையில் முதல்வரின் நாகப்பட்டின விழா

மயிலாடுதுறை
மயிலாடுதுறை

நாகப்பட்டினத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டும் தினத்தன்று, மயிலாடுதுறை கோட்டம் முழுவதும் வீடுகளில் கறுப்புக் கொடியேற்றி அரசுக்கு எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டுமென வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வருகிற மார்ச் மாதம் 7 - ம் தேதியன்று, நாகப்பட்டினத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. விழாவில், தமிழக முதலமைச்சர் கலந்துகொள்ள உள்ளார். மயிலாடுதுறைக்கு தனி மாவட்டம், மருத்துவக் கல்லூரி, புறவழிச்சாலை, தொழிற்சாலைகள் எனப் பல கோரிக்கைகளை மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்திவந்தபோதிலும், தமிழக அரசு தொடர்ந்து மயிலாடுதுறை கோட்டத்தைப் புறக்கணித்து வருகிறது என்று பேச்சு எழுந்த வண்ணம் உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாகப்பட்டினத்தில் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் நாளான மார்ச் 7-ம் தேதியன்று, மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் கடைகளில், பொதுமக்கள் கறுப்புக்கொடி ஏற்றி, தங்களுடைய எதிர்ப்பை தமிழக அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராம. சேயோன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது சம்பந்தமாக வழக்கறிஞர் ராம.சேயோனிடம் பேசினோம். "மயிலாடுதுறை மக்கள், கடந்த 30 ஆண்டுகாலமாக மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டுமென போராடிவருகிறார்கள் .

வழக்கறிஞர்  ராம. சேயோன்
வழக்கறிஞர் ராம. சேயோன்

மேலும், மாவட்டம்தோறும் ஒரு மருத்துவக் கல்லூரி என்ற திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு அமைய உள்ள மருத்துவக் கல்லூரியை, மயிலாடுதுறையில் அமைக்க மயிலாடுதுறை மக்கள் கடந்த ஓராண்டு காலமாகக் கோரி வருகிறார்கள். இந்நிலையில், மயிலாடுதுறை மக்களின் கோரிக்கையைப் புறந்தள்ளி, தமிழக அரசு அவசர அவசரமாக அடிக்கல் நாட்டு விழா நடத்துவது ஏன்?

மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரியை அமைக்க வேண்டும் எனக் கோரி, குத்தாலம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், மயிலாடுதுறை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் மற்றும் வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆகியோர் தொடர்ந்த ரிட் மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, தமிழக அரசு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்பார்க்காமல் அடிக்கல் நாட்டு விழா நடத்துவது சட்டத்துக்குப் புறம்பானதாகும்.

நீதிமன்றத்தை அவமதிக்கக்கூடிய செயலாகும். தொடர்ந்து மயிலாடுதுறையைப் புறக்கணித்துவரும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் நாளன்று, மயிலாடுதுறை கோட்டத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலும் கடைகளிலும் கறுப்புக்கொடி ஏற்றி, தங்களுடைய எதிர்ப்பை தமிழக அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு