Published:Updated:

`நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தாகிவிடும்!' -சி.வி.சண்முகத்துக்காக மருத்துவர்களோடு மோதிய அதிகாரிகள்

பொதுக்கழிப்பிடக் கட்டடமாக இருந்தாலும் சரி, கழிவுநீர் செல்லும் வாய்க்காலாக இருந்தாலும் சரி, அதை அரசியல்வாதிகள்தான் திறந்து வைக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதி இந்திய அரசியலில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் சி.வி.சண்முகம்
அமைச்சர் சி.வி.சண்முகம்

விழுப்புரம், அரசு பொது மருத்துவமனையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக டயாலிசிஸ் பிரிவு தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதற்காக கடந்த ஆண்டு 2 டயாலிசிஸ் இயந்திரங்கள் வாங்கப்பட்டன. ஆனால், அதற்கான கட்டடம், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் டயாலிசிஸ் பிரிவைச் செயல்படுத்த முடியாமல் இருந்தது.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு சுகாதாரத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சியால், கட்டடம் ஒதுக்கப்பட்டு அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டன. நாளொன்றுக்கு 6 பேர் டயாலிசிஸ் செய்துகொள்ளும் வசதிகளோடு கடந்த 5-ம் தேதி முதல் இந்தப் பிரிவு செயல்படத் தொடங்கியது. சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்தவர்கள் 3 நாள்களுக்கு ஒருமுறை டயாலிசிஸ் செய்துகொள்ள வேண்டுமென்பதால் அன்றிலிருந்து பரபரப்பாக இயங்கத் தொடங்கியது இந்தப் பிரிவு.

டயாலிசிஸ் பிரிவு
டயாலிசிஸ் பிரிவு

பொதுக்கழிப்பிடக் கட்டடமாக இருந்தாலும் சரி, கழிவுநீர் செல்லும் வாய்க்காலாக இருந்தாலும் சரி, அதை அரசியல்வாதிகள்தான் திறந்து வைக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதி இந்திய அரசியலில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கடந்த 5-ம் தேதியே செயல்படத் தொடங்கிவிட்ட டயாலிசிஸ் பிரிவுக்கு திறப்பு விழாவுக்கான நாள் இன்று குறிக்கப்பட்டது. விழுப்புரம் தொகுதியின் எம்.எல்.ஏ-வும், தமிழக சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் கலந்துகொண்டு திறந்து வைப்பார் என்றும் அறிவித்திருந்தனர் மக்கள் தொடர்பு அதிகாரிகள்.

அமைச்சர் வருகிறார் என்பதால் அந்தப் பிரிவு சுத்தம் செய்யப்பட்டு, அவர் வந்து தொடங்கி வைப்பதற்காக அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்குகள் வைக்கப்பட்டன. இன்று காலை வீடுர் அணையில் நிரம்பியிருக்கும் தண்ணீரை திறந்துவிட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், 9.30 மணிக்கு டயாலிசிஸ் பிரிவைத் தொடங்கிவைக்கும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதுகுறித்த ஏற்பாடுகளுக்காக விழுப்புரம் மாவட்ட மக்கள் தொடர்புத் துறையின் அதிகாரிகள், மருத்துவமனைக்குச் சென்றனர். வழக்கம்போல அங்கு 2 சிறுநீரக நோயாளிகள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தனர்.

டயாலிசிஸ் பிரிவு
டயாலிசிஸ் பிரிவு

உடனே டென்ஷனான மக்கள் தொடர்புத் துறை அதிகாரிகள் அங்கிருந்த மருத்துவர்களிடம், ``டயாலிசிஸ் மெஷினை உடனே ஆஃப் செய்யுங்கள். அமைச்சர் வந்தவுடன் ஆரம்பித்து வைப்பார்” என்று கூறினர். அதற்கு, ``ட்ரீட்மென்ட் போயிகிட்டு இருக்கு சார்” என்று பதிலளித்தனர் பணியில் இருந்த மருத்துவர்கள்.

அதற்கு, ``பரவாயில்லை. அப்படியே நிறுத்தி வையுங்கள். அமைச்சர் வந்தவுடன் ட்ரீட்மென்ட் தொடரட்டும்” என்று மருத்துவர்களிடம் மீண்டும் வலியுறுத்தினர். ஆனால், ``சார் அப்படியெல்லாம் நிறுத்த முடியாது.

டயாலிசிஸ் ஆரம்பித்துவிட்டால் முடியும் வரை நிறுத்த முடியாது. ரத்தம் உறைந்து நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தாகிவிடும்” என அதிர்ச்சியோடு விவரித்துள்ளனர். இவர்களின் உரையாடலைப் பார்த்துக்கொண்டிருந்த டயாலிசிஸ் நோயாளிகள் பீதியில் உறைந்தனர்.

ஆனால், “அதை நிறுத்த வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்று பாருங்கள். அமைச்சர்தானே தொடங்கிவைக்க வேண்டும். அதற்குள் நீங்கள் ஏன் முந்திக் கொண்டீர்கள்” என்று மருத்துவர்களை வறுத்தெடுத்தனர் அதிகாரிகள்.

அதன்பிறகு வேறுவழியின்றி அங்கு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நோயாளிகளின் படுக்கைகள் தெரியாதவாறு நகரும் திரை கொண்டு மறைத்தனர் அதிகாரிகள். காலை 9.30 மணிக்கு வருவதாக இருந்த அமைச்சர் சி.வி.சண்முகம் 10.30 மணிக்கு வந்து குத்துவிளக்கேற்றி டயாலிசிஸ் பிரிவைத் தொடங்கி வைத்தார்.

அமைச்சர் சி.வி.சண்முகம்
அமைச்சர் சி.வி.சண்முகம்

சுமார் 4 மணி நேரம் நடக்கும் டயாலிசிஸ் சிகிச்சையை ஆரம்பித்துவிட்டால் அதை நடுவில் நிறுத்த முடியாது. அப்படி நிறுத்தினால் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் உயிரிழக்க நேரிடும். அதனால்தான் மின்சாரம் தடைபட்டால்கூட அது இயங்கும்படி அதனுடன் இன்வெர்ட்டர் பொறுத்தப்பட்டிருக்கும்.

2017-ம் ஆண்டு டயாலிசிஸ் சிகிச்சையின்போது ஏற்பட்ட மின் தடையால் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்தனர். ஆனால் இதுகுறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், அமைச்சருக்காக நோயாளிகளின் உயிரைப் பணயம் வைத்த அதிகாரிகளின் செயல் நோயாளிகளை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.