Published:Updated:

நாகர்கோயிலில் விதிமுறைகளை மீறிய வணிகவளாகம்... ஆளுங்கட்சிக்கு சலுகையா?!

முன்னாள் எம்.எல்.ஏ. ராஜனின் பர்னிச்சர் கடை
முன்னாள் எம்.எல்.ஏ. ராஜனின் பர்னிச்சர் கடை

சுமார் 25 ஆண்டுகளாக தி.மு.க-வில் இருந்தவர்தான் ராஜன். அவர் நாகர்கோவில் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர். 2011 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் அ.தி.மு.க-வில் இணைந்தார்.

நாகர்கோவில் மாநகராட்சியில் எங்கு பார்த்தாலும் ஆக்கிரமிப்பு அகற்றங்கள் நடைபெறுகின்றன. பார்க்கிங் இல்லாமல் கட்டப்பட்ட வணிக வளாகங்களை வாகன நிறுத்தத்துக்கு இடம் ஏற்படுத்தி மாற்றி அமைக்கும் பணிகளும் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. விதிமுறையை மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. சாலையை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியவர்களும், உரிய அனுமதி பெறாமல் விதிமுறைகளை மீறியவர்களும் தாமாக முன்வந்து தங்கள் கட்டடங்களை விதிமுறைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்தும் வருகின்றனர்.

முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன்
முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன்
`அ.தி.மு.க அமைச்சருக்கு உளவு பார்த்த  தி.மு.க. புள்ளி!'- கொதிக்கும் செந்தில் பாலாஜி

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரில் இருந்து டெரிக் ஜங்ஷன் வரை கட்டடங்களை மாற்றி அமைக்கும் பணி இப்போதும் நடந்துகொண்டிருக்கிறது. கோட்டாறு பார்வதிபுரம் சாலையில் சில வணிக வளாகங்கள் சீல் வைக்கப்பட்டு இன்னும் திறக்கப்படாமலே உள்ளது. அதில் கார்ப்பரேட் வணிக நிறுவனங்களும் அடங்கும். விசாலமான சாலை வசதிதான் நகரின் வளர்ச்சிக்கான ஆதாரம் என்ற கொள்கை முனைப்போடு நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் செயல்பட்டு வருகிறார். போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சந்திப்பாக இருந்த வேப்பமூடு ஜங்ஷனில் அரசுப் போக்குவரத்து மருத்துவமனை, தனியார் பெட்ரோல் பங்க் ஆகியவை அகற்றப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கோட்டாறு ரயில் நிலையத்துக்குச் செல்லும் சாலை விரிவாக்கத்துக்காக வணிக நிறுவனங்கள் இடிக்கப்பட்டன. மேலும், மீனாட்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து கோட்டாறு செல்வதற்காக சாலையோரத்தில் இருந்த உச்சிமாகாளி மீனாட்சி அம்மன் கோயில் இடித்து அகற்றப்பட்டது.

அரசு புறம்போக்கு இடங்கள் மட்டுமல்லாது வளைந்து செல்வதாலும், இட நெருக்கடியாலும் திணறும் சாலைகளை நேராக மாற்றி அமைக்க தனியாரிடம் பேசி இடம் பெற்று சாலை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. சாலையில் ஜே.சி.பி இயந்திரம் சென்றாலே ஆக்கிரமிப்புக் கட்டட உரிமையாளர்கள் கதிகலங்கும் அளவுக்கு நாகர்கோவிலில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் துரிதநிலையை அடைந்திருக்கிறது.

தி.மு.க மாநகரச் செயலாளர் மகேஷ்
தி.மு.க மாநகரச் செயலாளர் மகேஷ்

நாகர்கோவிலில் விதிமுறை மீறிய, ஆக்கிரமிப்பில் இருக்கும் எல்லா கட்டடங்களும் இடிபடுகின்றன. ஆனால், சாலை ஆக்கிரமிப்பில் இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ-வும், அ.தி.மு.க மாவட்ட துணைச் செயலாளருமான ராஜனுக்குச் சொந்தமான ஒழுகினசேரி பர்னிச்சர் கடையை மட்டும் கமிஷனர் கைவைக்கவில்லை என தி.மு.க-வினர் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து நாகர்கோவில் மாநகர தி.மு.க செயலாளர் மகேஷ் நம்மிடம் பேசினார்.

"நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் சாலை விரிவாக்கத்துக்காக ஆக்கிரமிப்பில் இருக்கும் கட்டடங்களை அகற்றும் பணியில் தீவிரமாக இருக்கிறார். அனுமதி இல்லாத கட்டடங்களுக்கு சீல் வைக்கிறார். சாலை விரிவாக்கத்தால் நகரின் வளர்ச்சி மேம்படும் என்பதால் இந்த நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்கிறோம். அதேசமயம் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜனின் ஒழுகினசேரி பர்னிச்சர் கடை ஆக்கிரமிப்புப் பகுதியில் இருந்தும் அதை அகற்றவில்லை. அந்தக் கடை அனுமதி பெற்றுதான் கட்டப்பட்டுள்ளதா என ஆர்.டி.ஐ-யில் கேட்டேன். எந்த ஆண்டு, எந்த தேதியில் அந்தக் கட்டடத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அனுமதி எண்ணுடன் தெரிவித்தால் விவரங்கள் வழங்கலாம் என ஏடாகூடமாக பதில் தருகிறார்கள் அதிகாரிகள். இதுகுறித்து நாங்கள் போராட்டம் நடத்தியும் எந்தப் பலனும் இல்லை. ஆளும் கட்சிக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதியா?" என கொதித்தார்.

சுமார் 25 ஆண்டுகளாக தி.மு.க-வில் இருந்தவர்தான் ராஜன். அவர் நாகர்கோவில் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர். 2011 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் அ.தி.மு.க-வில் இணைந்தார். தி.மு.க-வில் இருந்தவர் இப்போது அ.தி.மு.க-வுக்குச் சென்றதால் தி.மு.க-வினர் அவரை குறிவைப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விளக்கம் கேட்பதற்காக முன்னாள் எம்.எல்.ஏ ராஜனை பலமுறை போனில் தொடர்புகொண்டோம்.

"உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டத்தில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்" என்றார். பின்னர் தொடர்புகொண்டபோது "நாளை பேசுகிறேன்" என சமாளித்தார். அவரது கட்டடம் குறித்து அவர் பேச முன்வரவில்லை. முன்னாள் எம்.எல்.ஏ. ராஜனின் குடும்ப இடத்தில் அமைந்திருக்கும் ஆலன் பர்னிச்சர் கடை, விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும், அதன் அருகில் இருக்கும் விமலா பர்னிச்சர் அமைந்துள்ள இடம் பட்டா நிலத்தில் வருவதாகவும், இருப்பினும் பழைய வரைபடம் மூலம் ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார்
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார்
``ஒரு வாரத்தில் 1 கோடி செலவு செய்யச் சொல்கிறார் கலெக்டர்!” கொதிக்கும் தேனி காளவாசல் உரிமையாளர்கள்!

இதுகுறித்து நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரிடம் பேசினோம்.

"அந்த பர்னிச்சர் கட்டடத்துக்கான அனுமதி குறித்த தகவல் முதலில் தெரியவராததால் ஆர்.டி.ஐ-யில் அதிகாரிகள் அவ்வாறு பதில் கொடுத்திருக்கலாம். இப்போது முழுமையாக ஆய்வு செய்ததில் ஆலன் பர்னிச்சர் கட்டடம் ஆக்கிரமிப்பில் இல்லை. ஆனால், விதிமுறையை மீறி கட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தரைதளம் மற்றும் முதல்தளத்துக்கு மட்டுமே அனுமதி பெறப்பட்டுள்ளது. அதற்கு மேல் உள்ள இரண்டு தளங்கள் விதிமுறையை மீறி கட்டப்பட்டுள்ளது. விதிமுறையை மீறி கட்டடம் கட்டப்பட்டதற்காக நோட்டீஸ் வழங்கப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு