Published:Updated:

நடிகையின் பாஸ்போர்ட்டில் இருந்த முகவரி.. குழப்பம்.. கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது ஏன்?

கமல்
கமல்

கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை அலுவகலத்தில் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க உடனடியாக அது அகற்றப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு உத்தரவு, சுகாதாரப் பணிகள் என மத்திய, மாநில அரசுகள் செய்து வரும் பல்வேறு நடவடிக்கைகளைப் பலர் பாராட்டிய நிலையில் இதை விமர்சிக்கும் விதமாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சமீபத்தில் சில பதிவுகளை இட்டார்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

``உயிர் காக்க 21 நாள்கள் உள்ளிருக்கச் சொல்லும் நேரத்தில், அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க. பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம்" என்றும், ``வீட்டின் உள் இருத்தல் என்பது முதல்படிதான், ஆனால் அது மட்டுமே தீர்வாகாது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அதிகாரி அறிவுறுத்துகிறார். அடுத்த கட்டத்தை நோக்கி வேகமாக முன்னேற வேண்டிய நேரம் இது'' தமிழக முதல்வரையும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் இணைத்து, ட்வீட் பதிவிட்டார்.

கமல்
கமல்

மேலும், ``இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்குப் பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி, மக்களுக்கு உதவ நினைக்கிறேன். அரசின் அனுமதி கிடைத்தால், அதைச் செய்யத் தயாராகக் காத்திருக்கிறேன்" என்று தனது ஆழ்வார்பேட்டை அலுவகலத்தை மருத்துவமனையாக மாற்றுவதற்கு முன்வந்தார். இந்நிலையில்தான் இன்று காலை, கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை அலுவகலத்தில் அவர் உட்பட வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க உடனடியாக அது அகற்றப்பட்டது.

நடிகையின் பாஸ்போர்ட்டில் இருந்த முகவரி.. குழப்பம்.. கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது ஏன்?

திடீர் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என கமல் தரப்பில் விசாரித்தோம். ``கொரோனா குறித்த அரசுகளின் நடவடிக்கைளை அனைவரும் பாராட்ட, கமல் மட்டும்தான் இன்னும் நடவடிக்கைளை துரிதப்படுத்த வேண்டும் என்று அரசை விமர்சிக்கும் விதமாகக் கருத்துகள் தெரிவித்தார். இதில் தமிழக அரசின் நடவடிக்கையும் விட்டு வைக்கவில்லை அவர். மேலும் ஒரு கட்டத்தில் தனது அலுவலகத்தையே, மருத்துவமனையாக்க மாற்றுவதற்கு முன்வந்து அரசின் உத்தரவுக்குக் காத்திருக்கிறார். இந்த காழ்புணர்ச்சியோ என்னவோ தெரியவில்லை.

இன்று ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் தனிமைப்படுத்தல் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. கமலா என்று பெயர் இருந்ததால் ஆழ்வார்பேட்டை ஆபீஸில் தனிமைப்படுத்தி விட்டதாக மாநகராட்சி ஏ.ஈ நோட்டீஸ் ஒட்டி இருக்கிறார். பின்பு அவரே நோட்டீஸை அகற்றி இருக்கிறார். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் கமல் சில ஆண்டுகளாக எம்ஆர்சி நகர் அருகே உள்ள தனியார் அபார்ட்மென்ட்டில் வசித்து வருகிறார். ஆழ்வார்பேட்டை வீட்டை தனது அலுவலகமாக மாற்றி பல ஆண்டுகளாக ஆகிறது. அவரது வீடுகூட தெரியாமல், மாநகராட்சி அதிகாரிகள் அங்கு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்" என்று கூறுகின்றனர்.

இதற்கிடையே, கமல் தற்போது அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், ``ஆழ்வார்பேட்டை முகவரியில் சில ஆண்டுகளாக நான் இல்லை என்பதும், அங்கு மக்கள் நீதி மய்யம் அலுவலகம் இருப்பதும் ஊர் அறிந்தது. எனினும் நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. கொரோனா வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் 2 வாரமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்" எனக் கூறியுள்ளார்.

மாநகராட்சி சார்பில் ஏன் குழப்பம் ஏற்பட்டது என்பதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், கமலின் ஆழ்வார்ப்பேட்டை முகவரியில் தங்கியிருந்த முன்னாள் நடிகை ஒருவர் சமீபத்தில் வெளிநாடு சென்றுவந்துள்ளார். அதனால் அவரை தனிமைப்படுத்துவதற்காக அவர் பாஸ்போர்ட்டில் ஆழ்வார்பேட்டை முகவரி காண்பித்ததால் அங்கு சென்று நோட்டீஸ் ஒட்டினோம். பின்பு தவறுதலாக ஒட்டினோம் என்று தெரிந்தபின்பு நோட்டீஸை அகற்றிவிட்டோம்" எனத் தெரிவிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு