Published:Updated:

`துணை அதிபராக பதவியேற்கும் கமலா ஹாரிஸ்’ - துளசேந்திரபுரத்தில் அன்பளிப்பு வழங்கிய பீட்டாவால் சர்ச்சை

துளசேந்திரபுரம்
துளசேந்திரபுரம் ( DIXITH )

தமிழ்நாட்டின் பாரம்பர்ய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டைத் தடை செய்ய வேண்டுமென முயற்சி எடுத்த விலங்குகள் நல அமைப்பான பீட்டா [PeTA- People of Ethical Treatment of Animals] அமைப்பினர், இப்பகுதி மக்களுக்கு இதை வழங்கியிருப்பது, சர்ச்சையையும் கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கமலா ஹாரிஸ் 21-ம் தேதி பதவியேற்கவிருப்பதால், இவரது பூர்வீக கிராமமான திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகிலுள்ள துளசேந்திரபுரம் மக்கள் மிகுந்த மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். தங்களுடைய எதிர்பார்ப்பும், வேண்டுதல்களும் நிறைவேறியதால் வெற்றிக்களிப்போடு உற்சாகம் அடைந்திருக்கிறார்கள்.

இந்தநிலையில் இவர்களோடு மகிழ்ச்சியைக் கொண்டாடும்விதமாக, மும்பையிலிருந்து பீட்டா அமைப்பினர் இனிப்புகள், பிரியாணி ரெடிமிக்ஸ், முந்திரி பால் உள்ளிட்டவை அடங்கிய அன்பளிப்புப் பெட்டியை இந்தப் பகுதி மக்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் பாரம்பர்ய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டைத் தடை செய்ய வேண்டுமென முயற்சி எடுத்த விலங்குகள் நல அமைப்பான பீட்டா [PeTA- People of Ethical Treatment of Animals] அமைப்பினர், இந்தப் பகுதி மக்களுக்கு இதை வழங்கியிருப்பது, சர்ச்சையையும் கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.

பீட்டா
பீட்டா
DIXITH

அமெரிக்க துணை அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் கமலா ஹாரிஸின் தாய்வழித் தாத்தா கோபாலன், இந்திய சுதந்திரத்துக்கு முன்பு மன்னார்குடி அருகிலுள்ள துளசேந்திரபுரம் கிராமத்தில் வசித்திருக்கிறார். அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக, ஜனநாயகக் கட்சியின் சார்பில் கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டதுமே, இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும், இவரது பூர்வீக கிராமம் மன்னார்குடி அருகிலுள்ள துளசேந்திரபுரம் என்றும் தகவல் வெளியானது. அப்போதிலிருந்தே, துளசேந்திரபுரத்தில் மகிழ்ச்சியும் பரபரப்பும் வியாபிக்கத் தொடங்கின.

ஜோ பைடன் - கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழா... அமெரிக்காவில் கலக்கும் நம்மூர் கோலங்கள்!

தங்கள் ஊரைச் சேர்ந்த கோபாலனின் பேத்தியான கமலா ஹாரிஸ், உலக வல்லரசான அமெரிக்காவின் துணை அதிபர் பதிவிக்குப் போட்டியிடுவதை எண்ணி, இப்பகுதி மக்கள் பெருமிதத்திலும் உற்சாகத்திலும் ஆழ்ந்தார்கள். கமலா ஹாரிஸ், வெற்றிபெற ஊரின் பல்வேறு பகுதிகளில் வாழ்த்து பதாகைகள் அமைத்து, தங்களது அன்பை வெளிப்படுத்தினார்கள். கமலா ஹாரிஸ் வெற்றிபெற, இவருடைய குலதெய்வக் கோயிலான தர்ம சாஸ்தா ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தி, அன்னதானமும் வழங்கினார்கள்.

தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றபோது, கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றதாக தகவல் வெளியானதும், துளசேந்திரபுரம் விழாக்கோலம் பூண்டது. பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெற்றிக்களிப்போடு மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள். இந்தநிலையில், கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராக இன்று பதவியேற்கவிருப்பதால், துளசேந்திரபுரம் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இவர்களோடு மகிழ்ச்சியைக் கொண்டாடும்விதமாக பீட்டா அமைப்பினர் இனிப்புகள், பிரியாணி ரெடிமிக்ஸ், முந்திரிப் பால் உள்ளிட்டவை அடங்கிய பரிசுத் தொகுப்புப் பெட்டியை மும்பையிலிருந்து அனுப்பியிருக்கிறார்கள்.

பரிசுத் தொகுப்புப் பெட்டி
பரிசுத் தொகுப்புப் பெட்டி
DIXITH

இது நேற்று பள்ளி மாணவர்களுக்கும், ஊர்மக்களுக்கும் வழங்கப்பட்டது. இது குறித்து நம்மிடம் பேசிய துளசேந்திரபுர ஊராட்சித் தலைவர் புருசோத்தமன், ``எங்க ஊரைப் பூர்வீகமாகக்கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராக பதவி ஏற்க போறதை நினைச்சா ரொம்பவே பெருமையா இருக்கு. பீட்டா அமைப்பினர் மும்பையிலிருந்து இனிப்பு, உணவுப்பொருள்கள் அடங்கிய 100 பெட்டிகளை எங்களுக்கு அனுப்பி, ஊர் மக்களுக்குக் கொடுக்க சொன்னாங்க. மாணவர்களுக்கும் ஊர் மக்களுக்கும் கொடுத்தோம்’’ என்றார்.

பீட்டா அமைப்பினர் ஜல்லிக்கட்டைத் தடை செய்ய முயன்றவர்கள் என்பதால், இது இப்பகுதி மக்களிடையே கேள்வியையும் சர்ச்சையும் எழுப்பியிருக்கிறது. `கமலா ஹாரிஸின் வெற்றியை ஏன் இவர்கள் கொண்டாட நினைக்கிறார்கள்’ என கேள்வி எழுப்புகிறார்கள். இது குறித்து பீட்டா அமைப்பைச் சேர்ந்த நிரஞ்சன் சண்முகநாதனிடம் பேசினோம். ``இதில் பீட்டாவுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. அமெரிக்காவில் செய்ல்படும் பீட்டாவுக்கும், இந்தியாவில் செயல்படும் பீட்டாவுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. ஜல்லிக்கட்டோடு இதைத் தொடர்புப்படுத்திப் பார்க்க வேண்டியதில்லை. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், அமெரிக்க துணை அதிபராக பதவியேற்கவிருப்பதை, இந்தியாவில் பீட்டா அமைப்பினர் கொண்டாடுகிறோம். மேலும் கமலா ஹாரிஸ், விலங்குகள் நலனில் அதிக அக்கறைகொண்டவர். நாங்கள் கொடுத்த அன்பளிப்பு தொகுப்பிலுள்ள உணவுப்பொருள்கள் அனைத்துமே, விலங்குகளிலிருந்து கிடைக்கக்கூடிய பால், நெய் உள்ளிட்ட பொருள்களைத் தவிர்த்து செய்யப்பட்டவை. இனிப்புகள், செக்கு எண்ணெயில் செய்யப்பட்டவை. முந்திரியிலிருந்து தயார் செய்யப்பட்ட பால், மீல்மேக்கரில் செய்யப்பட்ட ரெடிமிக்ஸ் பிரியாணி உள்ளிட்டவற்றை வழங்கியிருக்கிறோம்’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு