Published:Updated:

`காந்தியின் மரணம் விபத்தா?'- ஓயாத சர்ச்சையில் ஒடிசா அரசின் கையேடு!

காந்தி

`மன்னிக்க முடியாத செயல் என்று கூறியதோடு, முதல்வர் அரசாங்கத்தின் தலைவராக இருப்பதால் இதற்குப் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும்'

`காந்தியின் மரணம் விபத்தா?'- ஓயாத சர்ச்சையில் ஒடிசா அரசின் கையேடு!

`மன்னிக்க முடியாத செயல் என்று கூறியதோடு, முதல்வர் அரசாங்கத்தின் தலைவராக இருப்பதால் இதற்குப் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும்'

Published:Updated:
காந்தி

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக ஒடிசா அரசு அவரது புகழைப் போற்றும் வகையில் “எங்கள் காந்திஜி ஒரு பார்வை” என்ற பெயரில் கையேடு ஒன்றினைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. இரண்டு பக்கங்களைக்கொண்ட இந்தக் கையேட்டில் காந்தியின் போதனைகள், படைப்புகள் மற்றும் ஒடிசாவுடனான தொடர்புகள் பற்றிய சுருக்கமான விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அந்தக் கையேட்டில் ``ஜனவரி 30, 1948 அன்று டெல்லியில் உள்ள பிர்லா அரங்கில் நடந்த ஒரு நிகழ்வில் காந்தி தற்செயலான காரணங்களால் விபத்தில் இறந்தார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Mahatma Gandhi
Mahatma Gandhi

இந்நிலையில், இந்தக் கையேடானது பள்ளிக்கல்வித்துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. காந்தியின் மரணம் குறித்த தகவல்கள் அந்தக் கையேட்டில் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதால், இந்தத் தவறுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், ஒடிசாவின் முன்னாள் முதல்வருமான நரசிங்க மிஸ்ரா பிழை மன்னிக்க முடியாத செயல் என்று கூறியதோடு, முதல்வர் அரசாங்கத்தின் தலைவராக இருப்பதால் இதற்குப் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். பிஜூ ஜனதா தள அரசு காந்தி வெறுப்பாளர்களுக்கு சாதகமாக இருப்பதாகக் குற்றம் சாட்டிய மிஸ்ரா, மகாத்மா காந்தியை எந்தச் சூழ்நிலையில் யார் கொன்றார்கள் என்பதை தெரிந்துகொள்ள குழந்தைகளுக்கு முழு உரிமையும் இருப்பதாகக் கூறியதோடு, தேசத் தந்தையின் மரணம் அவரது வெறுப்பாளர்களை மகிழ்விக்கும் வகையில் இருப்பதாகவும் கூறினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிபிஐ மாநிலச் செயலாளர் ஆஷிஷ் கனுங்கோ, ``இந்தச் செயல் வரலாற்றை திசை திருப்பி உண்மையை மறைக்க அரசு மேற்கொண்ட ஒரு சதி திட்டத்தின் ஒரு பகுதியாகும். காந்தியைக் கொன்றது நாதுராம் கோட்சேதான் என்பது அனைவருக்கும் தெரியும். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். குழந்தைகளுக்கு இந்த உண்மையைச் சொல்ல வேண்டும். இந்தக் கையேட்டை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" எனவும் வலியுறுத்தினார். அரசாங்கம் குழந்தைகளை தவறாக வழிநடத்த இது போன்ற செயல்களை தொடர்ச்சியாகச் செய்து வருவதாக தெரிவித்த மூத்த மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் ஜனார்தன் பதி, இந்தத் தவறுக்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதோடு, கையேட்டை முழு வீச்சில் திரும்பப் பெற அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

பட்நாயக்
பட்நாயக்

பிரபல கல்வியியல் பேராசிரியர் மனோரஞ்சன் மொஹந்தி அரசு வெளியீட்டில் உண்மையைத் தவறுதலாக சித்திரித்ததற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இந்தக் கையேட்டிற்குத் தகவல்கள் எழுதியவரும், அதை வெளியிட்டவரும் கோட்சே அனுதாபிகளாக இருக்க வேண்டும் என்று கூறிய சமூக ஆர்வலர் பிரபுல்லா சமந்தாரா, துல்லியமான தகவல்களைக்கொண்ட திருத்தப்பட்ட கையேட்டை மாணவர்கள் மத்தியில் மறு பகிர்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சமீர் ரஞ்சன் தாஷ், இந்தத் தவறுக்கான காரணங்கள் ஆராயப்படுகின்றன. அரசு இந்தச் சம்பவத்தைத் தீவிரமாகக் கையில் எடுத்துள்ளது. மேலும், இந்தத் தவறுக்குக் காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.