Published:Updated:

`சுடு தண்ணீர்... மாஸ்க் தாங்க!' -போராட்டத்தில் இறங்கிய ராமநாதபுரம் கொரோனா நோயாளிகள்

கொரோனா நோயாளிகள் போராட்டம்.
கொரோனா நோயாளிகள் போராட்டம்.

ராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்புப் பிரிவில் சிகிச்சைபெற்றுவந்த நோயாளிகள், தங்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறி திடீர் போராட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

கொரோனா நோயாளிகள் போராட்டம்
கொரோனா நோயாளிகள் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பின் தொடக்க நாட்களில் மிக மிகக் குறைவாக இருந்ததால் கட்டுக்குள் இருந்து வந்தது. கொரோனா பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தீவிர தடுப்பு நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு அதிகரிக்காமல் இருந்தது. இதன்பின்னர் தடுப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட தேக்கம், அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாதது, வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களின் எண்ணிக்கை போன்றவற்றால், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 15 நாட்களாக அதிகரித்து வருகிறது.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை

ராமநாதபுரம் மாவட்டத்தில், நேற்று வரை 269 பேர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ள நிலையில், அரசு தரப்பில் 222 பேர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கொரோனா பாதிப்புக்குள்ளாகி இறந்தவர்கள் 4 பேர் என்ற நிலையில் இறப்பு எண்ணிக்கை 1 என அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தவர்களைத் தவிர, 102 பேர் ராமநாதபுரத்திலும் 15 பேர் பரமக்குடியிலும் 9 பேர் சிவகங்கையிலும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

காவலர் உட்பட மூவருக்கு கொரோனா.. கூடும் எண்ணிக்கை- ராமநாதபுரம் `ஷாக்'!

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், தங்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறி திடீர் போராட்டம் நடத்தினர். நாளுக்கு நாள் இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், மருத்துவர்கள் யாரும் வார்டுக்குள் வந்து நோயாளிகளைப் பரிசோதிப்பதில்லை எனவும், 6 செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், தங்கள் வார்டில் குடிப்பதற்குத் தேவையான சுடுதண்ணீர் வழங்கப்படுவதில்லை. தினமும் பயன்படுத்தும் முகக்கவசத்திற்கு பதில் 3 நாளுக்கு ஒருமுறை மட்டுமே முகக்கவசம் வழங்கப்படுகிறது, உரிய நேரத்தில் உணவு வழங்கப்படுவதில்லை எனக் கூறி, நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

இதையடுத்து, நேற்று காலை மாவட்ட ஆட்சியர் மருத்துவமனையில் ஆய்வு செய்து, உரிய நேரத்தில் பணிக்கு வராத மருத்துவகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுச் சென்றார். இந்நிலையில், இரவு நேரத்தில் கொரோனா நோயாளிகள், சிறப்புப் பிரிவின் வாயிலுக்கு வந்து கதறி அழுதபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்பின் அங்கு வந்த மருத்துவப் பணியாளர்கள், அவர்களை சமாதானப்படுத்தி வார்டுக்கு அழைத்துச்சென்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறுகையில், ''நோயாளிகளின் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

மாவட்டத்தில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட நோயாளிகளின் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு