Published:Updated:

கொரோனா: `உணவு, தண்ணீர் வழங்கவில்லை!’ - சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட நோயாளிகள்

கொரோனா
கொரோனா

``நோயாளிகளுக்கு இங்கு தங்க பிடிக்காவிட்டால் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து போட்டுவிட்டு தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.”

கொரோனா வைரஸ் இந்தியாவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவாக 34,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 25,602 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிய நாள்களில் இருந்தே பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள் மீதும் தனிமைபடுத்தப்படும் முகாம்களின் மீதும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், கொரோனா நோயாளிகள் சாலைக்கு வந்து போராட்டம் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

கொரோனா
கொரோனா

அஸ்ஸாம் மாநிலத்தில் கம்ருப் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளைப் பராமரித்து வரும் சிறப்பு சிகிச்சை மையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த 100-க்கும் அதிகமான நோயாளிகள் உணவு மற்றும் தண்ணீர் ஆகியவை முறையாக வழங்கப்படவில்லை என அதிகாரிகள் மீது குற்றம்சாட்டி தங்கியிருந்த இடத்தில் இருந்து வெளியேறி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து நேற்று போராட்டம் நடத்தியுள்ளனர். இதையறிந்த அம்மாவட்ட துணை ஆணையர் கைலாஷ் கார்த்திக் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து அடிப்படை வசதிகள் தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதாகக்கூறி நெடுஞ்சாலையில் இருந்து எழுந்து வார்டுகளுக்குள் திரும்பி செல்ல அவர்களுக்கு கோரிக்கை விடுத்தனர். எனினும், இப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவியது.

கொரோனா: பிளாஸ்மா தானம்; அரசு வேலையில் முன்னுரிமை! - அஸ்ஸாம் அரசின் அதிரடி அறிவிப்பு

இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரி ஒருவர் பேசும்போது, ``நோயாளிகள் தங்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் ஆகியவை வழங்கப்படவில்லை என்றும் 10 முதல் 12 பேர் ஒரே அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் படுக்கைகளும் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்ந்து அவற்றை சரிசெய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்று கூறினார். கொரோனா தொடர்பான பராமரிப்பு மையத்தில் நோயாளிகள் தங்குவதற்கு அதிருப்தி தெரிவித்தால், அவர்கள் வீடுகளிலேயே தங்களைத் தனிமைப்படுத்துக்கொள்ளலாம் என அம்மாநில சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

கொரோனா
கொரோனா

சுகாதாரத்துறை அமைச்சர் இதுதொடர்பாகப் பேசுகையில், ``நாங்கள் அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்துள்ளோம். இதனால், அவர்கள் விரைவில் குணமடையவும் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படாமலும் தடுக்க முடியும். அவர்களுக்கு இங்கு தங்க பிடிக்காவிட்டால் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து போட்டுவிட்டு தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம். மற்ற மாநிலங்களில் பரிசோதனைகளுக்குகூட கட்டணம் செலுத்துகிறார்கள். ஆனால், அஸ்ஸாம் மாநிலத்தில் பரிசோதனை முதல் அவர்கள் தங்குவது மற்றும் உணவு வரை முழு செலவுகளையும் மாநில அரசு ஏற்றுள்ளது” என்று தெரிவித்தார்.

`கொரோனா அச்சம்; அளவுக்கு அதிகமான மலேரியா மருந்து..?' -அஸ்ஸாம் மருத்துவருக்கு நேர்ந்த துயரம்
அடுத்த கட்டுரைக்கு