Published:Updated:

`10 மணி நேரமாகக் காத்திருந்த பயணிகள்; விதிமுறைகளில் குழப்பம்!’ - டெல்லி விமான நிலைய சலசலப்பு

பயணிகள்
பயணிகள் ( NDTV )

டெல்லி மாநில அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளின்படி, இங்கிலாந்திலிருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் ஆர்டி-பிசிஆர் சோதனை நடத்தப்பட வேண்டும்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் இன்னும் குறைந்தபாடில்லை. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. கடந்த ஆண்டு இறுதியில், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் திரிபு அடைந்த கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா – இங்கிலாந்து இடையேயான விமான சேவைகளை மத்திய அரசு ஜனவரி 7-ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்திவைத்தது. இந்தச் சூழலில், இரு நாடுகளுக்கிடையேயான விமான சேவை, பல்வேறு விதிமுறைகளுடன் நேற்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

அதன்படி, நேற்று காலை 10:30 மணியளவில் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்திறங்கிய ஏர் இந்தியா (AI 112) விமானத்தில் பயணம் செய்த 250-க்கும் மேற்பட்ட பயணிகள் மேற்கொள்ள வேண்டிய கொரோனா தடுப்பு நடைமுறைகளில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக விமான நிலைய நிர்வாகத்தினருக்கும், பயணிகளுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், டெல்லி இந்திரா காந்தி சர்வேதேச விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன.

டெல்லி மாநில அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளின்படி, இங்கிலாந்திலிருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் ஆர்டி-பிசிஆர் சோதனை நடத்தப்பட வேண்டும். அதன் பிறகு, அனைவரும் 14 நாள்கள் கட்டாயமாகத் தனிமைப்படுத்தப்படுவார்கள். ஒருவேளை, பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், அவர்கள் மாநிலத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்த வழிமுறைகள் குறித்து விமான நிலைய நிர்வாகத்துக்கு ஏற்பட்ட குழப்பத்தால் இங்கிலாந்திலிருந்து வந்த பயணிகள் அனைவரும் வெள்ளிக்கிழமை பின்னிரவு வரை விமான நிலையத்திலேயே அமரவைக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பயணிகளில் சிலர் டெல்லி விமான நிலைய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, விஷயம் பெரிதானது.

கடும் வானிலையிலும் தொடரும் டெல்லி விவசாயிகள் போராட்டம்! - மம்தா அரசின் ஆதரவு முடிவு

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளில் மேற்கொண்ட கடைசி நேர மாறுதல்களே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னரே, டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்துவருவதால், அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டிசம்பர் 7-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த இங்கிலாந்துடனான விமான சேவைக்கான தடையை ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியிருந்தார்.

அடுத்த கட்டுரைக்கு