`பா.ஜ.க தலைவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்; வன்முறையைக் கண்டித்த நீதிபதி!' - இடமாற்ற சர்ச்சை #DelhiRiots

டெல்லி கலவரம் தொடர்பான வழக்கில், மத்திய அரசுக்கும் டெல்லி காவல்துறையினருக்கும் அதிரடி உத்தரவுகளைப் பிறபித்த நீதிபதி முரளிதர், வேறு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தியத் தலைநகர் டெல்லியின் வடகிழக்குப் பகுதியில், கடந்த சனிக்கிழமை மாலை குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்கணக்கான மக்கள் ஜாஃப்ராபாத் மெட்ரோ நிலையம் அருகில் கூடி போராட்டம் நடத்தினர். மறுநாள், அதே இடத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக வேறு நூற்றுக்கணக்கான பேர் கூடினர். ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என இரு தரப்பினரும் ஒரே இடத்தில் கூடியதால் அங்கு பதற்றம் நிலவியது.

பிறகு அந்தப் பதற்றம் மோதலாக மாறி, தற்போது பெரும் கலவரமாக வெடித்தது. இதனால் காவல்துறையினர் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கலவரம் தொடர்பாக சமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்தர் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்செய்திருந்தார். டெல்லியின் நிலைமையைக் கருத்தில்கொண்டு இதை அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதை ஏற்ற டெல்லி உயர் நீதிமன்றம், நேற்று முன்தினம் நள்ளிரவு 12:40 மணியளவில் இது நீதிபதி முரளிதர் வீட்டில் அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. அப்போது,`கலவரத்தில் படுகாயமடைந்து, வடகிழக்கு டெல்லியில் உள்ள அல் ஹிந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களைப் பாதுகாப்பான வேறு மருத்துவமனைக்கு மாற்றும்படி நீதிபதிகள் முரளிதர் மற்றும் தல்வாண்ட் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு, மறுநாள் காலை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் கூறியிருந்தனர்.

அதன்படி, நீதிபதிகள் முரளிதர் மற்றும் தல்வாண்ட் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் நேற்று காலை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா, தனக்கு வேறு வழக்கு இருப்பதாகவும் தன்னால் இதில் ஆஜராக முடியாது என்று கூறியதாகவும், இதில் அதிருப்தியடைந்த நீதிபதி முரளிதர், உங்களால் முடிந்தால் ஆஜராகுங்கள் இல்லையென்றால் வேறு அரசு தரப்பு வழக்கறிஞரை ஆஜர்படுத்துங்கள். இன்று கண்டிப்பாக இந்த வழக்கின் விசாரணை நடக்கும் என உறுதியாகத் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், டெல்லி காவல்துறையின் துணை ஆணையர் ராஜேஷ் ராவும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
அனைவரும் ஆஜரான பிறகு, நேற்று பிற்பகல் வழக்கின் விசாரணை தொடங்கியுள்ளது. அப்போது, வழக்கறிஞர் துஷார் மேத்தா மற்றும் துணை ஆணையர் ராஜேஷ் ராவ் ஆகிய இருவரிடமும், பா.ஜ.க-வின் கபில் மிஸ்ரா பேசிய வீடியோவைப் பார்த்தீர்களா எனக் கேள்வி எழுப்பியுள்ளார் நீதிபதி. அதற்கு துஷார் மேத்தா, தான் பார்க்கவில்லை என்றும் துணை ஆணையர்தான் அனுராக் தாக்கூர் பேசியதை மட்டுமே பார்த்ததாகவும் பதில் கூறியுள்ளனர். ‘ மாநில விவகாரம் குறித்து டெல்லி போலீஸார் எவ்வளவு அக்கறையாக உள்ளனர் என்பது எனக்கு வியப்பைத்தருகிறது’ என்று கூறிய நீதிபதி, நீதிமன்ற உதவியாளரை அழைத்து, கபில் மிஸ்ரா பேசியதை ஒளிபரப்பு செய்யச் சொல்லியுள்ளார்.

வீடியோவைப் பார்த்த வழக்கறிஞர் துஷார் மேத்தா, பா.ஜ.க தலைவரின் பேச்சு தனக்கு மிகுந்த வருத்தமளிப்பதாகக் கூறியுள்ளார். பின்னர் பேசிய நீதிபதி முரளிதர், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், ப்ரவேஷ் வர்மா, அபே வர்மா போன்றவர்கள்மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் , டெல்லி போலீஸாரிடம் கடுமையான கேள்விகளைக் கேட்டுள்ளார். மத்திய அரசு நிலைமையை கட்டுக்கடங்காமல் செல்ல அனுமதித்தது ஏன் என்று கேட்டுள்ளார். டெல்லி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினருக்கு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தார். இதனால் நீதிபதி முரளிதர் நேற்று கவனம் ஈர்க்கப்பட்டார்.
இந்நிலையில், இவரை டெல்லி உயர் நீதிமன்றத்திலிருந்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்துக்கு பணியிடை மாற்றம் செய்து அறிவித்துள்ளது மத்திய அரசு. முரளிதரை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற கடந்த 12-ம் தேதியே உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. ஆனால், இதை எதிர்த்து டெல்லி நீதிமன்ற நீதிபதிகள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், இந்த அறிவிப்பு நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் மூன்றாவது மூத்த நீதிபதியாக உள்ளார் முரளிதர்.

இவர், முதன் முதலாக 1984-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்ட நடைமுறை பயிற்சிபெற்றுள்ளார். பின்னர், 1987-ம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்திலும் டெல்லி உயர் நீதிமன்றத்திலும் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார். அப்போது, போபால் விஷ வாயு தாக்கிய வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆஜராகி கவனம் பெற்றார். இதையடுத்து, 2006-ம் ஆண்டு, டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் முரளிதர். இவர், பல்வேறு முக்கிய வழக்குகளின் அமர்வுகளில் இடம்பெற்றுள்ளார். குறிப்பாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்துகளைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் தெரிந்துகொள்வது தொடர்பான வழக்கு போன்ற பல வழக்குகளில் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.