Election bannerElection banner
Published:Updated:

`எந்த அனுமதியும் கொடுக்கவில்லை!’- `உலோக லத்தி’ சர்ச்சைக்கு டெல்லி போலீஸ் விளக்கம்

உலோக லத்தியோடு டெல்லி போலீஸ்
உலோக லத்தியோடு டெல்லி போலீஸ் ( ANI )

`புகைப்படங்கள் வெளியாகி, அது குறித்த தகவல் எங்களுக்குக் கிடைத்ததும் அந்த லத்திகள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டன’ என்று டெல்லி காவல்துறை விளக்கமளித்திருக்கிறது.

டெல்லியின் ஷாதரா மாவட்டத்திலுள்ள காவலர்களுக்கு, பாதுகாப்புக்காக, வாள் போன்ற அமைப்பிலுள்ள உலோகத்தாலான லத்தி கொடுக்கப்பட்டிருந்தது சர்ச்சையானது. காவலர்கள் அந்த லத்தியைக் கையிலேந்தியவாறு இருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், டெல்லி காவல்துறையினர் ஷாதரா (Shahdara) மாவட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.

உலோக லத்தியோடு காவலர்கள்
உலோக லத்தியோடு காவலர்கள்
ANI

டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறையில், கலவரக்காரர்கள் சிலர் கத்தி, வாள் போன்ற கூர்மையான ஆயுதங்களால் காவலர்களைக் கடுமையாகத் தாக்கினர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த போலீஸார் வெட்டுக் காயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். தற்போது டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து, டெல்லியில் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. பாதுகாப்புப் பணியில் காவலர்கள் குவிக்கப்பட்டுவருகின்றனர்.

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்! - சாலையில் தடுப்புச்சுவர், ஆணிகளுடன் டெல்லி காவல்துறை

டெல்லியின் எல்லைகளில் போராட்டக்காரர்கள் முன்னேறி வர முடியாத வண்ணம் சிமென்ட் தடுப்புச்சுவர், இரும்பு முள் வேலிகள், சாலைகளில் ஆணிகளாலான தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஷாதரா மாவட்டத்திலுள்ள காவலர்களுக்கு 60 வாள் போன்ற உலோகத்தாலான லத்தி கொடுக்கப்பட்டிருக்கிறது. நான்கு முதல் ஐந்தடிகொண்ட இந்த உலோகத்தடி தற்காப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.

பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
ANI

காவலர்களுக்கு உலோகத் தடி வழங்கிய முடிவைத் திரும்பப் பெறுவதுடன், எதற்காக உலோக லத்திகள் போலீஸாருக்கு வழங்கப்பட்டன என்பது குறித்து ஷாதரா மாவட்ட அதிகாரிகளிடம் டெல்லி காவல்துறை விளக்கம் கேட்டுள்ளது. `உயரதிகாரிகளிடம் எந்தவித ஒப்புதலும் பெறாமல் இப்படியொரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிகாரபூர்வ ஒப்புதல் எதுவும் கொடுக்கப்படவில்லை. புகைப்படங்கள் வெளியாகி, அது குறித்த தகவல் எங்களுக்குக் கிடைத்ததும், அந்த லத்திகள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டன’ என்று டெல்லி காவல்துறை விளக்கமளித்திருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு