Published:Updated:

8 வழிச் சாலை... உள்ளாட்சித் தேர்தல்... சேலம் தி.மு.க பிரமுகரை கடத்தியதா கியூ பிராஞ்ச்?

திமுக பிரமுகர்
News
திமுக பிரமுகர்

சேலம் தி.மு.க ஒன்றியச் செயலாளரை உளவுத்துறை போலீஸார் மர்ம நபர்போல் வந்து தூக்கிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில், தி.மு.க பிரமுகர் ஒருவரை மர்ம நபர்களைப் போல வந்து சுற்றிவளைத்து, உளவுத்துறை போலீஸார் காரில் கடத்திச் செல்லும் காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம்குறித்து விசாரித்தோம். சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர், அயோத்தியாப்பட்டணம் தி.மு.க ஒன்றியக் கழக பொறுப்பாளராக இருந்துவருகிறார். அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவராகவும் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.

இவரைத்தான் கியூ பிராஞ்ச் போலீஸார் காரில் தூக்கிச் சென்றுள்ளார்கள். இதை அறியாத விஜயகுமாரின் குடும்பத்தினர், பதறிப்போய் கட்சிக்காரர்களுடன் அம்மாப்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பிறகே, கியூ பிராஞ்ச் போலீஸார் அழைத்துச்சென்றிருப்பது தெரியவந்தது.

விஜயகுமார்
விஜயகுமார்

சேலம் தீவட்டிப்பட்டியை அடுத்த ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடல், கேரளாவில் இருந்து சுமார் பத்து நாள்களுக்குப் பிறகு சேலம் வர இருக்கிறது. இதில் பலர் கலந்துகொள்ளப்போகும் தகவல் சேலம் உளவுத்துறைக்கு கிடைத்ததை அடுத்து, விஜயகுமாரின் செல் நம்பர் மணிவாசகத்தின் செல்லில் இருந்ததால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார் என்ற கட்டுக்கதையும் பேசப்பட்டது.

நடந்த சம்பவங்கள் குறித்து போலீஸார் அழைத்துச்சென்ற விஜயகுமாரிடம் கேட்டதற்கு, ''நேற்று 12-ம் தேதி மாலை 4:50-க்கு என் வீட்டுக்கு அருகே உள்ள பள்ளிக்குச் சென்று வரும்போது, டிப்-டாப்பாக 6 ஆண்களும், ஒரு பெண்ணும் இரண்டு கார்களில் வந்தார்கள். திடீரென கொள்ளைக்காரர்களைப் போல என்னைச் சூழ்ந்துகொண்டு, காரில் ஏறச்சொல்லி வற்புறுத்தினார்கள். நீங்கள் யார்... உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டுக் கொண்டே வீட்டுக்கு தகவல் சொல்வதற்குள், காரில் போட்டு கொண்டுபோய்விட்டார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பிறகு, வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் எனச் சுற்றினார்கள். பிறகு, ஓர் இடத்தில் காரை நிறுத்தி, '8 வழிச் சாலை பிரச்னைக்காக எதற்காக மக்களைப் போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்று தூண்டிவிடுகிறாய்? இனி 8 வழிப் பிரச்னைக்காக மக்களைத் தூண்டிவிட்டால், உன் வாழ்க்கையே வீணாகிடும். அடையாளம் தெரியாமல் செய்துவிடுவோம்' என்று மிரட்டினார்கள். அதற்கு நான் 8 வழிச் சாலைக்காக என்னுடைய 5 ஏக்கர் நிலம்போகிறது. இருந்தாலும், நான் 8 வழிச் சாலை பிரச்னையில் தலையிட்டதில்லை என்று கூறிய பிறகும் என்னை மிரட்டினார்கள். அவர்களின் நடவடிக்கையால் நான் மனத்தளவில் பாதிப்புக்குள்ளானேன்.

இதற்கிடையில், என்னை காரில் கடத்திவந்த காட்சி பள்ளியில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்தது தெரிந்ததால், இரவு 11:00 மணிக்கு பள்ளி அருகே இறக்கிவிட்டார்கள். 8 வழிச் சாலை பிரச்னைக்காக என்னைக் கடத்தவில்லை. குப்பனூர், ஆச்சாங்குட்டப்பட்டி பஞ்சாயத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராகவும் தலைவராகவும் 15 வருடங்கள் இருந்திருக்கிறேன். இந்தப் பகுதியில், என்னைத் தவிர வேறு யார் நின்றாலும் அவர்கள் வெற்றிபெற முடியாது என்பதற்காக என்னைக் கடத்தியிருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலுக்காக என்னைக் காவல்துறை மூலம் கடத்த ஆளுங்கட்சி சதி செய்திருப்பதாகப் பார்க்கிறேன்.

காவல்துறை
காவல்துறை

சி.சி.டி.வி கேமராவில் மட்டும் நான் பதிவாகவில்லை என்றால், என்னைக் கொலை செய்திருப்பார்கள். மற்றபடி மாவோயிஸ்ட் செல்போனில் என்னுடைய நம்பர் இருந்ததாகச் சொல்லுவது பொய். மாவோயிஸ்ட் என்றால் எனக்கு என்னவென்றே தெரியாது'' என்றார்.

இதுபற்றி கியூ பிராஞ்ச் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகிலா, ''முறைப்படி அவருக்குத் தகவல் கொடுத்து அழைத்தோம். அவர் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் தூக்கிச்சென்றோம். மற்றபடி காவல்துறைதான் கூட்டிப் போயிருக்கிறது என்ற தகவல் அவருடைய குடும்பத்திற்குத் தெரிந்துவிட்டது. பொதுவான விசாரணைக்குத்தான் அழைத்துச்சென்றோம். என்ன விசாரணையென்று தெரியாது. எங்க உயர் அதிகாரிகளுக்குத் தான் தெரியும்'' என்றார்.