Published:Updated:

காஷ்மீர் குறித்து டி.வி-யில் பேசிய விவகாரம்... தி.மு.க-வும் பி.ஜே.பி-யும் சொல்வது என்ன?

காஷ்மீர்
காஷ்மீர்

தமிழகத்தில் தொழில்துறையைப் பலமாக்கும் விதமாக, சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில், ஒரு மிகப்பெரிய ராணுவத் தளவாடத் தொழில் பூங்கா அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

சில தினங்களுக்கு முன், ‘ரிபப்ளிக் டி.வி’யில் நடந்த விவாதம் ஒன்றில், தி.மு.க செய்தித்தொடர்பாளர் சரவணன், காஷ்மீர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அரசியல் வட்டாரம் பரபரப்பாகியிருக்கிறது.

அப்படி என்னதான் சொன்னார்? ‘காஷ்மீர், இந்தியாவின் ஒரு பகுதியே கிடையாது’ என்று சரவணன் பேசியதாக பி.ஜே.பி தரப்பினர் குற்றம் சாட்டுகிறார்கள்.

amit shah
amit shah

“1956-க்கு முன்பு, காஷ்மீர் இந்தியாவின் பகுதி கிடையாது என்று நேற்றைய வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்து, நிகழ்கால அரசியல் பற்றிப் பேச முற்பட்டபோது தவறுதலாகப் புரிந்துகொண்டு, சர்ச்சையை உண்டாக்கிவிட்டார்கள்” என்கிறார் சரவணன். அதையடுத்து, சமூக வலைதளங்களிலும் தி.மு.க-வை ‘நெட்டிசன்கள்’ கடுமையாக விமர்சித்துப் பதிவுசெய்து வருகின்றனர். தி.மு.க-வின் ஐ.டி விங்கும், பி.ஜே.பி-யின் ஐ.டி விங்கும் வரிந்துகட்டிக்கொண்டு களத்தில் நிற்கின்றன.

சரவணனின் பேச்சு, இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாகக் குறிப்பிட்டு, அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பி.ஜே.பி-யினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

பி.ஜே.பி-யின் தமிழ் மாநில ஊடகப் பிரிவு தலைவர் எ.என்.எஸ். பிரசாத்திடம் கேட்டபோது, “தி.மு.க செய்தித்தொடர்பாளர் சரவணன், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், காஷ்மீர் இந்தியாவின் அங்கமில்லை என்று கூறியிருப்பதன்மூலம், தாம் ஒரு தேசத்துரோகி என்பதையும் தி.மு.க எப்போதும் தேசத்திற்கு விரோதியான கட்சி என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். காஷ்மீர் பிரச்னையை முழுவதும் புரிந்துகொண்டு, தெரிந்துகொண்டு, அரசியல் சுயலாபத்திற்காக காங்கிரஸின் கைக்கூலிகள் என்பதை நிரூபிப்பதற்காக... பா.ஜ.க முன்னெடுத்துச் செல்லக்கூடிய நல்ல செயல்களை நசுக்க முயற்சிப்பதே, அதைப் பற்றி மக்களிடையே குழப்பம் விளைவிக்க முயற்சிப்பதே தி.மு.க-வின் தலையாய கடமை என்பதை அவருடைய தொலைக்காட்சிப் பேட்டியில் நாம் அறியலாம்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

இது, ஏதோ தி.மு.க செய்தித்தொடர்பாளர் சரவணன் கருத்து மட்டுமல்ல... இந்தியாவைப் பிளவுபடுத்தத் துடிக்கும், தமிழகத்தைத் துண்டாடக் காத்திருக்கும், தமிழகத்தைத் தங்களுடைய சுயலாபத்திற்காக அழிக்கத் துடிக்கும்,சில நச்சு விரோத சக்திகளின் கைக்கூலியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மனசாட்சியின்படிதான் சரவணன் செயல்படுகிறார் என்பது, அவரை தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ந்து தி.மு.க சார்பில் அனுப்புவதன்மூலம், தமிழக மக்களுக்கும் இந்திய உளவுத்துறைக்கும் ஸ்டாலின் ஓர் எச்சரிக்கையையும் அச்சுறுத்தலையும் உருவாக்கியிருக்கிறார் .

மேலும், இந்தியாவில் உள்ள பாரதப் பிரதமரின் பா.ஜ.க-வையே எதிர்க்கக்கூடிய முக்கிய அரசியல் கட்சிகள்கூட, காஷ்மீர் நிலைப்பாட்டை ஆதரிக்கும்போது, காஷ்மீர் நிலைப்பாட்டில் இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிராகச் செயல்படும் ஸ்டாலினின் இந்த எதேச்சதிகார தேசத்துரோக போக்கு... தன்மானம் உள்ள சுய கௌரவமிக்க எந்தவொரு தமிழனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை தமிழகத்தில் வாழும் யாரும் மறுக்க முடியாது; மறைக்க முடியாது; மறக்க முடியாது.

எ.என்.எஸ். பிரசாத்
எ.என்.எஸ். பிரசாத்

இந்தியாவை உலக அரங்கில் முன்னெடுத்துச்செல்லக்கூடிய வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலில், அன்று ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கு ராணுவக் கண்காட்சியை நடத்தினார். அந்தச் சமயத்தில், உலகமே வெட்கப்படக்கூடிய வகையில் தி.மு.க தரப்பு பொய்க் காரணங்களைக் கூறி, தமிழகத்தில் உள்ள மக்கள் விரோத சக்திகளை இணைத்து, பிரதமர் மோடி வருகையின்போது கறுப்பு பலூன்களைப் பறக்கவிட்டது.

ஆனால், தமிழக மக்கள் அதைப் பொருட்படுத்தாமல், அந்த ராணுவக் கண்காட்சியைப் பார்வையிட்டு, ஒரு மிகப்பெரிய வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ராணுவத்திற்கு அளித்தனர்.

தமிழகத்தில் தொழில்துறையைப் பலமாக்கும் விதமாக சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில், ஒரு மிகப்பெரிய ராணுவத் தளவாடத் தொழில் பூங்கா அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

நமது இந்திய ராணுவத்தை, ராணுவ வீரர்களைக் கொச்சைப்படுத்துவது, இன்று நேற்றல்ல, தி.மு.க காலம்காலமாகத் தன்னுடைய அரசியல் சுயலாபத்திற்காகச் சேற்றைவாரி இறைக்கக்கூடிய மனநிலையைத் தொடர்ந்து செய்துவருகிறது” என்றார் காட்டமாக.

அதையடுத்து, “டி.வி விவாதத்தின்போது உண்மையில் என்னதான் நடந்தது” என சரவணனிடமே கேட்டோம்.. “கடந்த ஆறு வருடங்களாக நான் ஆங்கில டி.வி-க்களின் விவாதங்களில் பங்குபெற்றுவருகிறேன். 'ரிபப்ளிக் டி.வி'யில் அர்னாப் கோஸ்வாமி நடத்தும் அரசியல் விவாதங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். காஷ்மீர் சப்ஜெக்ட் தொடர்பாக என் கருத்தைப் பதிவுசெய்ய என் வீட்டிற்கே வந்தார்கள். விவாதத்தில் பங்குபெற்ற மற்றவர்கள், ஸ்டூடியோவில் உட்காரவைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் முகங்களை நான் பார்க்க முடியாது. பேச்சு ஆடியோவைத்தான் கேட்கமுடிந்தது. நான் சொன்னது இதுதான்...

‘ஜம்மு-காஷ்மீர் வாஸ் நெவர் ஆன் ஏ இன்டகிரல் பார்ட் ஆஃப் இண்டியா’. 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, அது இந்தியாவோடு இல்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிக்க வந்தபோது, காஷ்மீர் மன்னர் இந்தியாவோடு ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார். அதன்பிறகு, ஜம்மு-காஷ்மீருக்கென தனி அரசியல் சாசனச் சட்டம் 1956-ல் அமலுக்குவருகிறது. அப்போதுதான், காஷ்மீர்... இந்தியாவின் இன்டகிரல் பார்ட் ஆகிறது. இதைத்தான் நான் சொல்ல முற்பட்டேன்.

அதற்குள், திராவிடர், பிரிவினைவாதம், தேசபக்தி என்றெல்லாம் பேசி விவாதத்தை வேறு பக்கத்துக்கு திருப்பிவிட்டனர். நான் இறந்தகாலத்தைப் பற்றி சொன்னதைத் திரித்து, நிகழ்காலத்தைப் பற்றி சொன்னதாக மாற்றிப் பேசினார்கள். இன்-பெட்வீன்-லையன் என்பார்களே? அதுபோல, நான் சொல்லவந்ததை முழுமையாகச் சொல்லவிடாமல் களேபேரம் உண்டாக்கிவிட்டார்கள். நான் நிகழ்காலத்தைக் குறிப்பிடவில்லை என்பதை மீண்டும் தெளிவுபடுத்தினேன். கடந்த கால வரலாறு... அரசியல் சாசனச்சட்டம்... இவற்றில் நான் புரிந்துகொண்டது இதுதான் என்று விளக்கம் சொல்ல முற்பட்டேன்.

அதற்கு வாய்ப்பே தரவில்லை. வேறு வழியில்லாமல், ‘என்னைப் பலியாடு ஆக்கப்பார்க்கிறீர்கள்’ என்று சொல்லி, கேமராவைவிட்டு விலகினேன். எங்கள் தி.மு.க-வின் நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் எங்கள் எம்.பி-க்கள் தெளிவாகவே எடுத்துச் சொன்னார்கள். அதையெல்லாம்விட்டுவிட்டு, என்னைக் குறிவைத்து பி.ஜே.பி-யின் ஐ.டி விங்க் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளது. இதை நான் சட்டரீதியாக எதிர்கொள்வேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு