Published:Updated:

`கோவில்பட்டி நிலைதான் ஏற்படும் என நினைத்தோம்!' -செங்கோட்டையன் மிரட்டலால் மிரண்ட ஈரோடு தி.மு.க.

தி.மு.க கவுன்சிலர்கள்
தி.மு.க கவுன்சிலர்கள்

அமைச்சர் செங்கோட்டையனின் மிரட்டலுக்குப் பயந்தே, தி.மு.க கவுன்சிலர்கள் தேர்தலைப் புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது.

ஈரோடு மாவட்டம், தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணி 7 வார்டுகளிலும் அ.தி.மு.க 3 வார்டுகளிலும் வெற்றிபெற்றது. `பெரும்பான்மை கவுன்சிலர்களைப் பெற்றிருப்பதால் வெற்றி நமக்குத்தான்’ எனத் தி.மு.க-வினர் மிகுந்த உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் இருந்தனர். ஆனால், அந்த நம்பிக்கையை அ.தி.மு.க கவுன்சிலர் ஒருவர் சுக்குநூறாக உடைத்தெறிந்தார்.

ஜனவரி 11-ம் தேதி காலை 10.30 மணியளவில் தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது முதல் ஆளாக வாக்களிக்கச் சென்ற அ.தி.மு.க கவுன்சிலரான கே.வி.நடராஜ், வாக்குப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தி.மு.க கவுன்சிலர்கள்
தி.மு.க கவுன்சிலர்கள்

தி.மு.க கூட்டணியில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் (7 பேர்) இருந்தும் அவர்களை வெற்றிபெறச் செய்துவிடக் கூடாது, என அ.தி.மு.க தரப்பு திட்டமிட்டே தேர்தலை நிறுத்த சதி செய்ததாகக் குற்றம் சாட்டினர். அதையடுத்து நேற்று மீண்டும் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே பிரச்னை நடந்திருந்ததால், இந்தமுறை எந்த அசம்பாவிதங்களும் நடந்துவிடக்கூடாதென பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

காலை 10.30 மணியளவில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் மூன்று பேரும் வந்திருந்தனர். ஆனால், தி.மு.க மற்றும் அதன் கூட்டணியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் 7 பேரும் கடைசி வரை வாக்களிக்க வரவில்லை. அதையடுத்து, தேர்தல் நடத்துவதற்குப் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் தேர்தல் மறுபடியும் ஒத்தி வைக்கக்கப்படுவதாக, தேர்தல் நடத்தும் அலுவலர் பொன்னம்பலம் அறிவித்தார். அமைச்சர் செங்கோட்டையனின் மிரட்டலுக்குப் பயந்தே, தி.மு.க கவுன்சிலர்கள் தேர்தலைப் புறக்கணித்ததாகச் சொல்லப்படுகிறது.

ஒருவேளை நாங்கள் வாக்களிக்கச் சென்றிருந்தாலும், கோவில்பட்டியில் ஏற்பட்ட நிலைமைதான் எங்களுக்கு ஏற்பட்டிருக்கும்.
நல்லசிவம்

இதுகுறித்து ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவத்திடம் பேசினோம். ``அ.தி.மு.க 3 கவுன்சிலர்களை மட்டுமே பெற்றிருக்க, நாங்கள் மொத்தம் 7 கவுன்சிலர்களை வைத்திருக்கிறோம். முறைப்படி தேர்தல் நடந்தால் தி.மு.க-வுக்குத்தான் வெற்றி கிடைக்கும். ஆனால், நாங்கள் வெற்றி பெற்றுவிடக் கூடாது என அ.தி.மு.க-வினர் தொடர்ந்து தடை செய்து வருகின்றனர். `என் தொகுதிக்குள்ள தி.மு.க-வை ஜெயிக்கவிட மாட்டேன்’ என அமைச்சர் செங்கோட்டையன் சொல்லியிருக்கிறார்.

தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவம்
தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவம்

தேர்தலில் யார் எப்படி ஓட்டு போட்டாலும், அ.தி.மு.க வெற்றி பெற்றதாகவே அறிவியுங்கள் என அமைச்சர் சொன்னதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்துதான் நாங்கள் தேர்தலைப் புறக்கணித்தோம். ஒருவேளை நாங்கள் வாக்களிக்கச் சென்றிருந்தாலும், கோவில்பட்டியில் ஏற்பட்ட நிலைமைதான் எங்களுக்கு ஏற்பட்டிருக்கும். மாவட்ட ஊராட்சிச் செயலாளராக இருக்கும் பொன்னம்பல நாதன் என்பவரை தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமித்திருக்கிறார்கள். அவர்களுடைய ஆட்களை வைத்து தேர்தல் நடத்தினால், எப்படி தேர்தல் நேர்மையாக நடைபெறும்” என்றார்.

இதுஒருபுறம் இருக்க, `தி.மு.க கவுன்சிலர்கள் 3 பேர் ஸ்லீப்பர் செல்களாக இருந்து எங்களுக்கு ஓட்டு போடுவார்கள்’ என அ.தி.மு.க-வினர் வதந்தி பரப்பியுள்ளனர். அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாதென தி.மு.க கவுன்சிலர்கள் யாரையுமே வாக்களிக்கச் செல்லக் கூடாது என மாவட்டச் செயலாளர் நல்லசிவம் சொன்னதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.

இந்த விவகாரம் குறித்து தூக்கநாயக்கன்பாளையம் 1-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் நடராஜ் அவர்களிடம் பேசினோம். "தேர்தலில் பங்கேற்காமல், எதுவுமே நடக்காமல் இருக்கிறபோதே சம்பந்தமில்லாமல் இப்படிக் குற்றச்சாட்டுகளை அடுக்கலாமா.. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அவர்கள் பக்கம்தான் பெரும்பான்மை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தேர்தலில் வாக்களித்து அவர்கள் சார்பாக தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டியதுதானே" என்றார் கொதிப்புடன்.

அடுத்த கட்டுரைக்கு