Published:Updated:

தேசிய வங்கிகளின் நிலைதான், இனி கூட்டுறவுக்கும்! -அச்சத்தில் விவசாயிகள்

விவசாயி
விவசாயி

விவசாய நகைக் கடன் வட்டி உயர வாய்ப்பிருக்கிறது. சேமிப்பு கணக்குக்கு வட்டி குறைந்து, வாங்கும் கடனுக்கு வட்டி அதிகரித்து, எளிய மக்கள் அவதிப்படும் நிலைதான் ஏற்படும்.

நாடு முழுவதும் உள்ள சுமார் 1,500 நகர கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டில் 120 கூட்டுறவு வங்கிகள் ரிசர்வு வங்கியின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இது மாநில உரிமையைப் பறிப்பதோடு மட்டுமல்லாமல், ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனையும் கடுமையாகப் பாதிக்கும் என்கிறார், வேளாண் பொருளியல் ஆய்வாளர் கி.வெங்கட்ராமன்.

கி.வெங்கட்ராமன்
கி.வெங்கட்ராமன்

இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசியவர், ‘’ ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டிற்கு கூட்டுறவு வங்கிகள் சென்றுவிட்டால், அவ்வங்கிகளில் ஊழல் கட்டுப்படுத்தப்படும் என்ற மாயத்தோற்றத்தை மத்திய அரசு உருவாக்கப்பார்க்கிறது. ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகளிலும் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

Vikatan

இது அப்பட்டமான மாநில உரிமை பறிப்பு என்பதோடு, வங்கி வாடிக்கையாளர் நலனையும் பாதிக்கும் ஆபத்து இதிலிருக்கிறது. அரசு வங்கிகளைவிட, கூட்டுறவு வங்களில் கிட்டத்தட்ட 1 விழுக்காடு வரை சேமிப்புக்குக் கூடுதல் வட்டி கிடைக்கிறது. இனி அந்த வாய்ப்பு பறிக்கப்படும் சூழல் உள்ளது. வேளாண்மைக்கான நகைக்கடன் வாங்கும்போது, கூட்டுறவு வங்கிகளில் 4 விழுக்காடு வட்டிக்கு கடன் கிடைக்கும்.

ஆனால், தேசிய மற்றும் வணிக வங்கிகளில், சென்ற ஆண்டுவரை 6.3 விழுக்காடு வட்டியில் வேளாண்மைக்கான நகைக் கடன்கள் வழங்கப்பட்டன. இப்போது அந்த வட்டியும் நடைமுறையில் இல்லை. வேளாண்மைக்கான கடன் என்ற வகையினத்தில் நகைக் கடனே கிடையாது என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. இதனால் நகைக்கடனுக்கான வட்டி, தேசிய வங்கிகளில் 10 விழுக்காடாக உயர்ந்துவிட்டது. கூட்டுறவு வங்கிகளின் நகைக்கடன் வட்டியைவிட இது ஏறத்தாழ 2.5 மடங்கு அதிகம்.

நகைக்கடன் வட்டி உயர வாய்ப்பு!

இனி, கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்குச் சென்ற பிறகு, நகைக்கடன் வட்டி உயர வாய்ப்பிருக்கிறது. சேமிப்பு கணக்கிற்கு வட்டியும் குறைந்து, வாங்கும் கடனுக்கு வட்டி அதிகரித்து, எளிய மக்கள் அவதிப்படும் நிலைதான் ஏற்படும். இப்போது, தேசிய மற்றும் வணிக வங்கிகளில் ஏழை, நடுத்தர மக்களுக்கும், சிறு தொழில்களுக்கு வாங்கும் கடன் அளவு குறைந்து, பெரும் முதலாளிகளுக்கு கோடி கோடியாகக் கடன் வாரி வழங்கப்படுவதைப் பார்க்கிறோம்.

இதேநிலை இனி கூட்டுறவு வங்கிகளுக்கும் ஏற்படக்கூடும். இதற்கேற்ப, ஒரு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கூட்டுறவு வங்கிகள் இணைக்கப்படுவதற்கும் வாய்ப்புண்டு. எனவே, எந்த வகையில் பார்த்தாலும் இந்திய ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் எடுத்துச் செல்லப்படுவது நல்லதல்ல. மாநில உரிமையையும் மக்கள் நலனையும் பறிக்கும் இந்த அவசர சட்ட முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இதை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு