Published:Updated:

`சந்தோஷ் பாபு, சகாயம் வரிசையில் சூரப்பாவா?!'- கமல் கருத்தால் கொதிக்கும் கல்வியாளர்கள்

கமல்
கமல்

சூரப்பாவுக்கு எதிராகப் புகார் அளித்தவர், போலி முகவரி, போலி பின்கோடு எண் அளித்துள்ளார். புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருடையது.

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். இந்தநிலையில், ``சூரப்பா நியமனம் என்பதே மாநிலத்தின் கல்வி உரிமையைப் பறிக்கக்கூடிய விஷயம். அவர் மீதான புகார்களை திசைதிருப்புவதுபோல கமல் பேசியிருக்கக் கூடாது" என்கின்றனர் கல்வியாளர்கள்.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க, முன்னாள் நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக்குழுவை அமைத்தது தமிழக அரசு. பணி நியமனம் உட்பட பல்வேறு விவகாரங்களில் 250 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாகவும் சொல்லப்பட்டது. இதை எதிர்பார்க்காத சூரப்பா, ` நான் ஒரு பைசாகூட ஊழல் செய்தது கிடையாது. என் மகளின் சேவை, பல்கலைக்கழகத்துக்குத் தேவை என்பதால் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். என் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை' என மறுத்தார். அதேநேரம், `தன் மீதான புகார்களில் உண்மையில்லையென்றால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு சூரப்பா விசாரணையைச் சந்திக்கட்டும்' எனக் கல்வியாளர்கள் கொந்தளித்தனர்.

இந்தநிலையில், கடந்த நவம்பர் 30-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிதனிகை குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், `அண்ணா பல்கலைக்கழக பணி நியமனத்தில் ரூ.200 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் ஒவ்வொரு நபரிடமும் ரூ.13 முதல் 15 லட்சம் வரை வசூல் செய்ததாகவும் துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிராக முதல்வரின் தனிப்பிரிவுக்கு சுரேஷ் என்பவர் ஆன்லைனில் புகார் அனுப்பியுள்ளார். தமிழக அரசு இந்தப் புகார் தெடர்பாக முதற்கட்ட விசாரணையையும் நடத்தவில்லை; துணைவேந்தரிடம் விளக்கமும் கேட்கவில்லை. தற்போது சூரப்பா மீதான விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

இதனால், அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல், சூரப்பாவுக்கு எதிராகப் புகார் அளித்தவர், போலி முகவரி, போலி பின்கோடு எண் அளித்திருக்கிறார். புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் செல்போன் எண் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருடையது' எனக் குறிப்பிட்டிருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள், ` புகார்க் கடிதம் வந்ததும், அதில் முகாந்திரம் இருக்கிறதா, இல்லையா என்று பார்க்காமல் விசாரணைக்கு அவசரம் காட்டுவது ஏன்... சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?' எனக் கேள்வி எழுப்பினர்.

நேற்று (டிசம்பர் 5) இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, `இது பல்கலைக்கழகச் சேவை தொடர்பான வழக்கு. இதைப் பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுக்க முடியாது' என அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவிக்கவே, `இந்த விவகாரத்தில் ஆளுநரும் முதல்வரும் உரிய முடிவெடுப்பார்கள்' எனக் கூறி விசாரணையை டிசம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.

இந்தநிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவு, கூடுதல் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வீடியோ பதிவில், `அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டில் இதற்குத் தகுதியானவர் இல்லையா என்ற கேள்வியை நாம்தான் எழுப்பினோம். அந்தக் கேள்வி இப்போதும் தொக்கி நிற்கிறது. வந்தவரோ வளைந்து கொடுக்காதவர். அதிகாரத்தின் முன் நெளிந்து கொடுக்காதவர். தமிழகத்தில் பொறியியல் கல்வியை உலகத்தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்று முனைந்தவர். பொறுப்பார்களா நம் ஊழல் திலகங்கள்... வளைந்து கொடுக்கவில்லையென்றால் ஒடிப்பதுதானே இவர்கள் வழக்கம்... எவரோ அடையாளத்தை மறைத்துக்கொண்டு பேடி எழுதிய மொட்டைக்கடுதாசியின் அடிப்படையில் விசாரணைக்குழு அமைத்திருக்கிறார்கள். மொட்டையில் முடி வளராததால், மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் கொடுத்து ஏதேனும் வில்லங்கம் சிக்குமா என்று கடை போட்டுக் காத்திருக்கிறார்கள். முறைகேடாக பல்கலைக்கழகத்தில் தங்கியவர்கள், அங்குள்ள வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தியவர்களை விசாரித்துவிட்டீர்களா?

சூரப்பா
சூரப்பா
Jerome

உயர்கல்வித்துறை அமைச்சர் 60 லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டுதான் பேராசிரியர்களை பணி நியமனம் செய்கிறார் என்று பாலகுருசாமி தனியார் இதழுக்கு அளித்த பேட்டியில் புகாரளித்திருந்தாரே, அது குறித்து விசாரித்துவிட்டீர்களா... உள்ளாட்சித்துறை, மக்கள் நலவாழ்வுத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை என அத்தனை துறை அமைச்சர்களும் ஊழலில் திளைக்கிறார்கள் எனச் சமூகச் செயற்பாட்டளர்களும், எதிர்க்கட்சிகளும் அன்றாடம் குரல் எழுப்புகிறார்களே... அதை விசாரித்துவிட்டீர்களா? தேர்வு நடத்துவதும், தேர்ச்சி அறிவிப்பதும் கல்வியாளர்கள் கடமை. கரை வேட்டிகள் இங்கேயும் மூக்கை நுழைப்பது ஏன்?

இதுவரை காசு கொடுத்து ஓட்டு வாங்கியவர்கள், மதிப்பெண்களைக் கொடுத்து மாணவர்களை வாங்க நினைக்கிறார்களா... சூரப்பா கொள்கை சார்புகள், அரசியல் நிலைப்பாடுகள் மீது நமக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். ஆனால், ஒருவர் தன் நேர்மைக்காக வேட்டையாடப்பட்டால் கமல்ஹாசனாகிய நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன். நேர்மையாளர்களின் கூடாரமான மக்கள் நீதி மய்யமும் சும்மா இருக்காது' எனக் கொந்தளித்தார்.

கமல்ஹாசனின் இந்தக் கருத்து கல்வியாளர்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. இது குறித்து நம்மிடம் பேசிய பேராசிரியர் சிவக்குமார், ``துணைவேந்தர் சூரப்பா, தன் மகளை அண்ணா பல்கலைக்கழக அறிவுசார் சொத்துரிமைப் பிரிவில் ஆலோசகராக நியமித்திருக்கிறார். `இந்த நியமனம் சரியானது' என்கிறார் சூரப்பா. உண்மையிலேயே இந்த நியமனம், நேர்மையையும் நியாயத்தையும் பிரதிபலிக்கிறதா... சூரப்பாவை நேர்மையானவர் எனச் சொல்பவருக்கு இந்த நியமனம் எப்படித் தெரிகிறது எனத் தெரியவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்திலும் உறுப்பு கல்லூரிகளிலும் ஆடிட் கோர்ஸ் பிரிவில் பகவத்கீதையை ஒரு பாடமாகக் கொண்டுவந்திருக்கிறார்.

பேராசிரியர் சிவக்குமார்
பேராசிரியர் சிவக்குமார்

தமிழ்நாட்டின் மிக முக்கியமான பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக நியமிக்கப்பட்டவர், மதத்தைப் பாடப்பிரிவில் புகுத்தியது எந்த வகையில் சரியானது... இதை ஏன் கமல் பார்க்க மறுக்கிறார் எனத் தெரியவில்லை. ஊழல் என்பது காசு வாங்குவதும் கொடுப்பதும் மட்டுமல்ல, கருத்தளவில் மாற்றத்தைப் புகுத்த நினைப்பதும்தான். அதிலும், உயர் கல்வியைச் சீரழிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல், `எமினன்ஸ் அந்தஸ்து’ என்ற பெயரில் உயர்கல்விக்கான வணிகச் சந்தையில் அண்ணா பல்கலைக்கழகத்தை தள்ள முற்பட்டார் சூரப்பா. இதை கமல் எப்படிப் பார்க்கிறார்?

`கொடுத்த பணத்துக்கு கணக்கு கேட்கும் சூரப்பா!'- அண்ணா பல்கலைக்கழக 16 இயக்குநர்களுக்கு கெடு

சூரப்பா நியமனம் என்பதே மாநிலத்தின் கல்வி உரிமையைப் பறிக்கக்கூடிய விஷயம். இந்துத்துவக் கருத்துகளை உயர்கல்வி நிறுவனங்களில் பரப்புவதற்காகத்தான் அவர் கொண்டுவரப்பட்டார். இதையெல்லாம் திசைதிருப்புவதுபோல் கமல் பேசியிருக்கிறார். இது சரியான ஒன்றாகத் தெரியவில்லை. சூரப்பா மீதான ஊழல் புகார்கள் குறித்த தரவுகள் அரசிடம் இருப்பதாகக் கூறுகிறார்கள். அப்படியிருந்தால், அதற்கான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இந்த ஊழல் மட்டுமல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அனைத்து ஊழல்களையும் விசாரிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. இதைச் செய்வதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்" என்றார் உறுதியாக.

முரளி அப்பாஸ்
முரளி அப்பாஸ்

இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் விளக்கம் கேட்டோம். `` சூரப்பா, தனது மகளைப் பதவியில் அமர்த்தியது, பகவத்கீதையைக் கொண்டு வந்தது போன்றவை மீது அரசு நடவடிக்கை எடுக்கட்டும். அவர் நியமனத்திலுள்ள சர்ச்சை தொடர்பாக அரசே நீதிமன்றம் செல்லட்டும். அதை விட்டுவிட்டு ஊழல் எனப் பெயரிட்டு அவரை முடக்கப் பார்ப்பதுதான் தவறானது. சந்தோஷ் பாபு, சகாயம் ஆகியோருக்குச் செய்ய முடியாததை நாங்கள் சூரப்பாவுக்குச் செய்கிறோம். அவரை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கும் வகையில் சிலர் பேசுகிறார்கள். ஒரு மொட்டைக் கடிதத்தை வைத்துக்கொண்டு விசாரணைக்குழு அமைக்கிறார்கள். இப்போது நீதிமன்றமே முகாந்திரம் இல்லை எனக் கூறிவிட்டது.

ஒரு பலவீனமான வழக்கைப் போட்டு மிரட்ட நினைக்கிறார்கள். நேர்மைதான் எங்கள் கட்சியின் முக்கியமான ஆயுதம். இங்கு நேர்மை என்பதைச் சிலர் சாதாரணமாகப் பார்க்கிறார்கள். நேர்மையான ஓர் அரசாங்கம் இருந்தால், அங்கு சாதிப் பாகுபாடுக்கு வாய்ப்பில்லை. மதச்சார்பற்ற என்ற ஒரு வார்த்தையை வைத்துவிட்டு அனைத்துத் தவறுகளையும் செய்கிறார்கள். சூரப்பா மீது எந்த அடிப்படையில் வழக்கு போட்டீர்கள் என்றுதான் கேட்கிறோம். இனி சூரப்பாவுக்கு மட்டுமில்லை, வரும் காலங்களில் எந்தவொரு நேர்மையான அதிகாரிக்குப் பிரச்னை வந்தாலும் நாங்கள் குரல் கொடுப்போம்" என்றார் கொதிப்புடன்.

அடுத்த கட்டுரைக்கு