திருச்சியில் மன்னார்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு `எல்ஃபின்’ என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. ``எங்களிடம் பணத்தை முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைப்பதோடு, முதலீடு செய்த பணத்தை மும்மடங்காகத் திருப்பித் தருவோம்’ என இந்நிறுவனம் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டது.
இதை நம்பி திருச்சி மட்டுமல்லாது, தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் இந்நிறுவனத்தில் பல நூறு கோடி ரூபாயை முதலீடு செய்தனர். ஒரு கட்டத்தில் வட்டியைக் கொடுக்காமலும், முதலீட்டுப் பணத்தைத் திருப்பிக் கொடுக்காததாலும் எல்ஃபின் நிறுவனத்தினர் கம்பி நீட்டினர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதையடுத்து எல்ஃபின் நிறுவனத்தை நடத்தி வந்த ராஜா (எ) அழகர்சாமி, அவரின் சகோதரர் ரமேஷ் ஆகிய இருவர் மீதும், முதலீட்டாளர்கள் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளிக்க ஆரம்பித்தனர். இதனால் எல்ஃபின் நிறுவனத்தை நடத்தி வந்த ராஜா மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், எல்ஃபின் நிறுவனம் மீது தொடர்ச்சியாகக் குவிந்து வரும் புகாரை அடுத்து, எல்ஃபின் நிறுவன உரிமையாளர்களின் வீடு, அலுவலகம், நண்பர்கள் மற்றும் ஏஜென்டுகளுக்குச் சொந்தமான இடங்கள் என தமிழகம் முழுக்க 38 இடங்களில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் நேற்று ரெய்டில் இறங்கி அதிரடியாக சோதனை செய்தனர்.
திருச்சி மன்னார்புரத்தில் உள்ள எல்ஃபின் நிறுவனத்தின் தலைமையகத்தின் பூட்டை உடைத்து ரெய்டில் இறங்கியதுடன், எல்ஃபின் நிறுவனத்தின் இயக்குநர்களிடம் நெருங்கிய தொடர்பிலிருந்த திருச்சி மாநகராட்சி 17-வது வார்டு கவுன்சிலர் பிரபாகரன் வீடு, வடக்கு தாராநல்லூர் காமராஜர் நகரிலுள்ள பிரபாகரனின் மாமியார் வீடு எனத் திருச்சியில் மட்டும் 18 இடங்களில் அதிகாரிகள் ரெய்டு நடத்தி அதிர வைத்திருக்கின்றனர்.

இந்த ரெய்டில் பிரபாகரனுடைய பாஸ்போர்ட், செல்ஃபோன் மற்றும் பிரபாகரனின் மனைவி பெயரிலுள்ள இனோவா கிரிஸ்டா கார் சம்பந்தமான ஆவணங்கள் போன்றவற்றை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
எல்ஃபின் நிறுவன தலைமையகம் மற்றும் மற்ற இடங்களில் நடைபெற்ற சோதனையில் பெரிதாக எந்த ஆவணங்களும் சிக்கவில்லை. எல்ஃபின் நிறுவனத்தில் பணத்தைக் கட்டி ஏமாந்தவர்கள் தமிழகம் முழுக்க புகார்களைக் கொடுத்து வந்த நிலையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நடத்தியிருக்கும் இந்த ரெய்டு எல்ஃபின் நிறுவன மோசடி வழக்கை சூடுபிடிக்க வைத்திருக்கிறது.
அதே சமயம், இந்த ரெய்டு ஏன் இத்தனை காலதாமதமாக நடக்கிறது என்றும் இதில் பணம் போட்டவர்கள் கேட்கத் தொடங்கி இருக்கின்றனர். இந்த நிறுவனம் பற்றி புகார்கள் வரத் தொடங்கி ஓர் ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. புகார் வந்தபோதே இந்த நிறுவனத்தின் மீது இப்படிப்பட்ட அதிரடி ரெய்டு நடவடிக்கை எடுக்காமல், பல மாதங்கள் கழித்து செய்தால், உருப்படியாக எந்த ஆவணம் கிடைக்கும்? இருக்கிற எல்லா ஆவணங்களையும் அவர்கள் ஒழித்துக் கட்டியிருப்பார்களே என்று மக்கள் கேட்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

தவிர, இந்த ஒரு நிறுவனம் போல தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் மோசடித் திட்டங்கள் கனஜோராக நடக்கத்தான் செய்கின்றன. இந்த நிறுவனங்கள் பற்றி புகார் எதுவும் வரவில்லை என்பதால், மோசடித் திட்டங்களை வெற்றிகரமாக நடத்திக்கொண்டுதான் இருக்கின்றனர்.
இது மாதிரியான நிறுவனங்கள் பற்றி மக்கள்தான் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அளவுக்கு அதிகமாக லாபம் தருவோம் என்று சொல்லும் நிறுவனங்களிடம் இருந்து தள்ளி நிற்க வேண்டும். ஆஹா, இத்தனை லாபம் கிடைக்கிறதே என்று நினைத்து, இந்த மோசடி நிறுவனங்களில் பணத்தைப் போட்டால், பிற்பாடு பணத்தை இழப்பது தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்து செயல்படுவது அவசியத்திலும் அவசியம்!