Published:Updated:

`அச்சுறுத்தக் கூடிய, அவமானப்படுத்தக் கூடிய செயல்!' கலெக்டர் கடிதத்தால் கொதிக்கும் விவசாயிகள்

தஞ்சை கலெக்டர் அலுவலகம்
தஞ்சை கலெக்டர் அலுவலகம்

``இது விவசாயிகளை அச்சுறுத்தக்கூடிய, அவமானப்படுத்தக்கூடிய செயல். தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்தராவின், இந்தச் செயலை நாங்க வன்மையா கண்டிக்கிறோம்'' என்கிறார்கள் விவசாயிகள்

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மார்ச் 20-ம் தேதி நடைபெறவுள்ள விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் தொடர்பாக, தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு, தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், ஒரு கடிதம் எழுதியுள்ளார். இது விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ்
தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ்

விவசாயிகளின் குறைகளைத் தீர்க்க அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில்தான், தஞ்சையில் நடைபெறவுள்ள விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், காவல்துறை கண்காணிப்பாளருக்கு எழுதிய கடிதம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

அக்கடிதத்தில், ``வருகிற மார்ச் 20-ம் தேதி காலை 9 மணி முதல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. கஜா புயல் நிவாரணம், பயிர் காப்பீடு தொடர்பாக விவசாயிகளின் கோரிக்கை முழக்கங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தில் கலந்துகொள்ளும் விவசாயிகள் கூட்டமாக வந்து கோஷங்களை எழுப்பி, கூட்ட அரங்கில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்காமல், விவசாயிகளை ஒழுங்குப்படுத்தி, கூட்டத்தை நடத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு தேவைப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயி  சுகுமாறன்
விவசாயி சுகுமாறன்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் துணைச்செயலாளர் சுகுமாறன், ``இது விவசாயிகளை அச்சுறுத்தக்கூடிய, அவமானப்படுத்தக்கூடிய செயல். தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்தராவின் இந்தச் செயலை நாங்க வன்மையா கண்டிக்கிறோம். போலீஸை வெச்சி விவசாயிகளை ஒழுங்குப்படுத்துறதுங்கறது அநாகரிகமான செயல். விவசாயிகள் என்ன தீவிரவாதிகளா, இல்லை ரவுடிகளா. கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம் நடந்துக்கிட்டு இருக்கு.

ஒரு தடவை கூட, ஒரு சின்ன வன்முறைச் சம்பவங்கள் நடந்தது கிடையாது. நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத குறைகள் இருந்தாலோ, நாங்கள் சுட்டிக் காட்டக்கூடிய பிரச்னைகள் குறித்து அதிகாரிகள் அலட்சியமாக இருந்தாலோ, ஒரு சில விவசாயிகள் முழக்கம் எழுப்பி கவனத்தை ஈர்ப்பாங்க. இதனால் ஒருமுறைக் கூட கூட்டம் ரத்து செய்யப்பட்டதில்லை. கொஞ்சநேரம் முழக்கம் போட்டு, வெளிநடப்பு செய்வாங்க. இதுல என்ன தவறு இருக்கு? இது விவசாயிகளுக்கான கூட்டம். மக்கள் வரிப்பணத்துல சம்பளம் வாங்கக்கூடிய எம்.எல்.ஏ-க்களும் எம்.பி.-க்களும் சட்டமன்ற, நாடாளுமன்றத்தையே நடக்கவிடாமல் முடக்குறாங்க. நாங்க அந்த மாதிரியா நடந்துக்குறோம்?

`தமிழகக் காவல்துறை எங்கள் மீது பொய் வழக்கு போடுகிறது!'- நீதிபதியிடம் முறையிட்ட  விவசாயிகள்

விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்துக்கு போலீஸை வரவழைச்சா, விவசாயிகள் ஒட்டுமொத்தமா, இந்தக் கூட்டத்தைப் புறக்கணிப்போம். போராட்டத்துலயும் இறங்குவோம்” என்றார் கொந்தளிப்புடன்.

தஞ்சை ஆட்சியர் அலுவலக வட்டாரத்தில் விசாரித்தபோது, ``கூட்டம் அமைதியாக நடந்தால்தான் விவசாயிகள் தங்கள் குறைகளைச் சொல்ல முடியும். விவசாயிகள் என்ற போர்வையில் சிலர் திட்டமிட்டு கூச்சலிட்டு கூட்டத்தை சீர்குலைக்குறாங்க. உண்மையான விவசாயிகளுக்குப் பலன் கிடைக்கணும். அதுக்காகதான் காவல்துறை உதவியை நாடவேண்டியிருக்கு'' என்றார்கள்

அடுத்த கட்டுரைக்கு