Published:Updated:

கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த தந்தை, மகன்! - போலீஸார் தாக்கியதுதான் காரணமா?

கோவில்பட்டி அரசு மருத்துவமனை
கோவில்பட்டி அரசு மருத்துவமனை

தூத்துக்குடியில் கடை அடைப்பது தொடர்பாக போலீஸாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கைது செய்யப்பட்ட தந்தை, மகன் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர், காமராஜர் சிலை அருகில் செல்போன் விற்பனைக்கடை நடத்தி வந்தார். கடந்த 19-ம் தேதி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும், கடையைத் திறந்து வைத்தது தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலைய போலீஸாருக்கும் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது, போலீஸார் ஜெயராஜை தாக்கியபோது, பென்னிக்ஸ் போலீஸாரைத் தட்டிக் கேட்டாராம்.

பென்னிக்ஸ் - ஜெயராஜ்
பென்னிக்ஸ் - ஜெயராஜ்

அப்போது போலீஸாருக்கும், பென்னிக்ஸுக்கும் மீண்டும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். பணி செய்யவிடாமல் தடுக்கப்பட்டதாக இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு நெஞ்சுவலிப்பதாகக் கூறிய ரென்னிக்ஸை, போலீஸார் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வரும் வழியிலேயே ரென்னிக்ஸ் உயிரிழந்தார். இந்நிலையில், இன்று காலை ரென்னிக்ஸின் தந்தை ஜெயராஜும் உயிரிழந்தார்.

அடுத்தடுத்த சில மணி நேரங்களில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மகன், தந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சாத்தான்குளத்தில் போலீஸாரைக் கண்டித்து வணிகர்கள் கடைகளை அடைத்து பேருந்து நிலையம் அருகில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல, `தந்தை, மகனைத் தாக்கிய சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவில்பட்டி அரசு மருத்துமனை முன்பாக சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

வியாபாரிகள் போராட்டம்
வியாபாரிகள் போராட்டம்

என்ன நடந்தது என சாத்தான்குளம் நகர வர்த்தகர்கள் சங்கத்தினர் தரப்பில் பேசினோம்.``ஊரடங்கு தளர்வால் இரவு 8 மணி வரை கடை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 7.30 மணிக்கெல்லாம் போலீஸார் சரியா 8 மணிக்குக் கடையை அடைச்சுடனுன்னு வழக்கமா ஞாபகப்படுத்திட்டு 8 மணிக்கு இன்னொரு ரவுண்டு வருவாங்க. கடந்த 19-ம் தேதி உயிரிழந்த ஜெயராஜ் சரியா 8 மணிக்கு செல்போன் கடையை அடைச்சுட்டார். அப்போது கடைக்கு முன்னால நாலஞ்சு பேரு கூடி நின்னு பேசிக்கிட்டிருந்தாங்க.

100 லாக்அப் மரணம்; பெண்களுக்கு எதிராக 3.59 லட்சம் வழக்குகள்! -அதிர்ச்சி கொடுத்த குற்ற ஆவணக் காப்பகம்

அப்போ ஜெயராஜுக்கும் சாத்தான்குளம் காவல் நிலைய எஸ்.ஐ-க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகிய ரெண்டு பேருக்கும் சின்ன வாக்குவாதம் வந்துச்சு. உடனே, `வண்டியில ஏறு’ன்னு சொல்லி போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அப்பாவை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போக வந்த ஜெயராஜோட மகன் ரென்னிஸ் போலீஸ் வண்டிக்குப் பின்னாலயே பைக்குல போயி, அப்பாவை எதுக்காகக் கூட்டிட்டு வந்தா ஸ்டேஷன்ல விசாரிச்சார். பென்னிக்ஸ் முன்பே தந்தை ஜெயராஜை போலீஸார் அடிச்சாங்க. பென்னிக்ஸ்க்கும் எஸ்.ஐ-களுக்கும் வாக்குவாதம் முற்றியதும், போலீஸார் பென்னிக்ஸையும் பிடித்து லத்தியால் அடித்தார்கள்.

கோவில்பட்டியில் சி.பி.எ கட்சியினர் தர்ணா
கோவில்பட்டியில் சி.பி.எ கட்சியினர் தர்ணா

அதுல அவரது ஆசன வாய் வழியே லத்தியால் குத்திக் கொடுமைப்படுத்தியதில் காயம் ஏற்பட்டு அதிக ரத்தக்கசிவு ஏற்பட்டது. இந்தக் காயத்துடனே, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். சிறையில் பென்னிக்ஸைச் சந்தித்த அவரது நண்பர்களிடம் ஆசனவாய் பகுதியில் லத்தியால் குத்தியதிலும், வயிற்றில் எட்டி உதைத்ததாலும் ரெண்டு நாள் மலம், சிறுநீர் கழிக்க முடியவில்லை எனச்சொல்லி அழுதார். இந்நிலையில் சிறையில் அவருக்கு நேற்று இரவு 7.30 மணியளவில் நெஞ்சுவலிப்பதாகக் கூறி, சிறைக் காவலர்கள், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.‌

அடுத்த சில மணி நேரத்தில் பென்னிக்ஸின் தந்தை ஜெயராஜும் இறந்து போனார். இருவரது உடற்கூராய்வை வீடியோ பதிவு செய்ய வேண்டும்” என்றார்.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி., அருண்பால கோபாலனிடம் பேசினோம். ``கடந்த 20-ம் தேதியே வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டு இருவரும் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று இரவு பென்னிக்ஸ் என்பவருக்கு நெஞ்சுவலியும், அவரது தந்தை ஜெயராஜுக்குக் காய்ச்சலும் ஏற்பட்டதால் உடனடியாக போலீஸார் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர்தான் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பிற்கான காரணம் பிரேதப் பரிசோதனை அறிக்கையில்தான் தெரிய வரும்.

பொதுமக்கள் போராட்டம்
பொதுமக்கள் போராட்டம்

இருவரையும் சாத்தான்குளம் காவல்நிலைய போலீஸார் தாக்கினார்களா என்பது குறித்து விசாரிக்கிறேன்” என சமாளித்தார்.

இதற்கிடையில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி, `காவல்துறையினரின் தாக்குதலில் தந்தை, மகன் ஆகிய இருவரின் உயிரிழப்பு நடந்திருக்கும் என பலத்த சந்தேகம் எழுகிறது. இச்சம்பவத்தை முறையாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளேன். மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’’ என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு