Published:Updated:

கார்ட்டூன் சர்ச்சை; இமானுவேல் மேக்ரான் Vs இம்ரான் கான்! - பிரான்ஸைப் புறக்கணிக்கும் அரபு நாடுகள்

இம்மானுவேல் மேக்ரான்
இம்மானுவேல் மேக்ரான் ( LUDOVIC MARIN )

இஸ்லாம் மதம், முகமது நபியை இழிவுபடுத்தும் கார்ட்டூனைப் பிரசுரிக்க ஆதரவு தெரிவித்ததன் மூலம் இஸ்லாமியர்களின் நம்பிக்கையைப் புண்படுத்திவிட்டார் அதிபர் இமானுவேல் மேக்ரான்’’ - இம்ரான் கான்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலுள்ள பள்ளியில் பணியாற்றிவந்த 47 வயதான சாமுவேல் பேட்டி எனும் ஆசிரியர் ஒருவர், `கருத்து சுதந்திரம்’ குறித்து மாணவர்களுக்கு வகுப்பெடுத்தார். அந்த வகுப்பில் முகமது நபி குறித்த கேலிச் சித்திரத்தை மாணவர்களுக்குக் காட்டியதாக தலை துண்டித்துக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம், பாரிஸ் நகரில் மட்டுமல்லாமல் பிரான்ஸ் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது குறித்த விசாரணையில், ஐ.எஸ் தீவிரவாத அமைப்போடு தொடர்புடைய ஒருவர் சாமுவேல் பேட்டியைக் கொலை செய்தது தெரியவந்தது. சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ``ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிரான்ஸில் நிம்மதியாக உறங்க முடியாது” என்றார்.

இந்தநிலையில், முகமது நபியின் கேலிச் சித்திரத்தை வெளியிட்ட பத்திரிகைக்கு ஆதரவாகவும், இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தியும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பேசியதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்தார்.

இம்ரான் கான்
இம்ரான் கான்

```ஒரு தலைவர் என்பதற்கான தகுதி என்பது மண்டேலா செய்ததுபோல் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்வதே; அவர்களைப் பிரித்தாள்வதல்ல. இது போன்ற சூழலில், தீவிரவாதிகளுக்கு இடம்கொடுக்காமல், காயங்களுக்கு மருந்து போடுவதே அதிபர் இமானுவேல் மேக்ரானின் பணியாக இருக்க வேண்டும். அடக்குமுறை என்பது தீவிரவாதத்துக்கு வழிவகுத்துவிடும்.

இஸ்லாம் மதம், முகமது நபியை இழிவுபடுத்தும் கார்ட்டூனை பிரசுரிக்க ஆதரவு தெரிவித்ததன் மூலம் ஐரோப்பா, உலகம் முழுவதும் இருக்கும் இஸ்லாமியர்களின் நம்பிக்கையைப் புண்படுத்திவிட்டார் அதிபர் இமானுவேல் மேக்ரான்’’ என்று இம்ரான் கான் கண்டனம் தெரிவித்திருந்தார்

இம்ரான் கான் கருத்துக்கு ஆதரவாக அரபு நாடுகளில் பிரான்ஸ் பொருள்களைப் புறக்கணிப்பதாகப் போராட்டம் தொடங்கியிருக்கிறது. துருக்கி, குவைத், ஜோர்டான், கத்தார், லிபியா போன்ற அரபு நாடுகளிலுள்ள பல்பொருள் அங்காடிகளில் பிரான்ஸ் தயாரிப்புப் பொருள்களை முழுவதுமாக புறக்கணித்திருக்கிறார்கள்.

போராட்டம்
போராட்டம்
Emrah Gurel

கத்தார் பல்கலைக்கழகத்தில் நடக்கவிருந்த பிரான்ஸ் கலாசார நிகழ்வுகள் இந்தச் செயலுக்குக் கண்டனம் தெரிவிக்கும்விதமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சமூக வலைதளங்களிலும் பெரும்பாலானோர் தங்கள் முகப்புப்படங்களை மாற்றி, பிரான்ஸுக்கு தங்கள் எதிர்ப்பைப் தெரிவித்துவருகின்றனர்.

இது தொடர்பாக, #BoycottFrenchProducts, #BoycottFranceproducts, #boycottfrance, #boycott_French_products, #ProphetMuhammad போன்ற ஹேஷ்டாக்குகள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகிவருகின்றன.

பிரான்ஸ் அதிபர்
பிரான்ஸ் அதிபர்
Emrah Gurel

இந்தநிலையில், பிரான்ஸ் பொருள்களைப் புறக்கணிக்கும் செயலை கைவிடுமாறு பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம், மத்திய கிழக்கு நாடுகளை கேட்டுக்கொண்டிருக்கிறது. மேலும், இம்ரான் கான் கூறிய கருத்துக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு