Published:Updated:

17 நலவாரியங்கள்; அரசு பட்டியலில் விட்டுப்போன மீனவர் நலவாரியம்! - உதவித்தொகை அறிவிப்பு சர்ச்சை

கரையில் காத்திருக்கும் படகுகள்
கரையில் காத்திருக்கும் படகுகள்

கொரோனா பாதிப்பு காரணமாகப் பல்வேறு நலவாரியங்களில் பதிவு செய்துள்ளவர்களுக்கு 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், மீனவர்களை அந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. 

கொரோனா பாதிப்பில் இருந்து மீளும் வகையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறது. அதனால் தினமும் தொழிலுக்குச் சென்று வாழ்க்கையை நடத்தும் தொழிலாளர்களின் நிலை மோசமடைந்து வருகிறது. 

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

தொழிலாளர்களைப் பாதுகாக்கும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 6-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், `பல்வேறு நலவாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு ரூ.1,000 அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அவர்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்களும் விநியோகிக்கப்படும்’ என அறிவித்தார்.

முதல்வரின் அறிவிப்பில் மீனவர் நலவாரியம் சேர்க்கப்படவில்லை என்பதால் மீனவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இது குறித்துப் பேசிய எழுத்தாளரான குறும்பனை பெர்லின், ``அனைத்து நலவாரிய உறுப்பினர்களின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 1,000 ரூபாயும் மளிகைப் பொருள்களும் வழங்க அரசு முடிவெடுத்திருப்பது பாராட்டுக்குரியது. 

`கொரோனா வைரஸ் சாதாரண தொற்றல்ல ட்ரம்ப்...' - அமெரிக்காவை அன்றே எச்சரித்த மருத்துவர்கள்!

கட்டுமான தொழிலாளர் நலவாரியம், தையல் தொழிலாளர், முடிதிருத்தும் தொழிலாளர், சலவைத் தொழிலாளர், பனைத் தொழிலாளர், உடல் உழைப்புத் தொழிலாளர், வெளிமாநிலங்களிலிருந்து இடம்பெயர்ந்த தொழிலாளர், ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர் என்று 17 வகையான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு இந்த உதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழக அரசு சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து தொழிலாளர்களுக்கும் 1,000 ரூபாயும் மளிகைப் பொருள்களும் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால், அந்தத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் மீனவர் நலவாரியம் விடுபட்டிருப்பது மீனவர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எழுத்தாளர் குறும்பனை பெர்லின்
எழுத்தாளர் குறும்பனை பெர்லின்

ஏற்கெனவே மீன் சந்தைகளுக்கு அனுமதி அளித்துவிட்டு மீன்பிடிக்கத் தடைவிதித்துள்ளனர். இப்போது இடைவெளியைக் கடைப்பிடித்து கட்டுமரத்தில் மீன்பிடித்ததையும், ஒருமீட்டர் இடைவெளிவிட்டு கரமடி தொழிலாளர்கள் செய்த `கரைவலை’ தொழிலையும் காவல்துறையினர் தடுத்துள்ளனர்.

மீனவர்களை மீன் பிடிக்கச் செல்லக் கூடாது என்று அறிவித்ததுடன் மட்டுமல்லாமல் நலவாரிய உதவிகளையும் வழங்காமல் புறக்கணிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டால், `முதலமைச்சரின் அறிவிப்பில் மீனவர் நலவாரியம் விடுபட்டதே தெரியாது’ என்கிறார்கள். 

17 வகையான தொழிலாளர் நலவாரியங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் நிலையில் மீனவர் நலவாரியம் மட்டும் அதில் சேர்க்கப்படவில்லை.
குறும்பனை பெர்லின், நெய்தல் நில எழுத்தாளர்

இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளோம். அவர் முதல்வரிடம் பேசி மீனவர்களுக்கும் உதவித் தொகை கிடைக்க ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்துள்ளார். டெல்லி சிறப்புப் பிரதிநிதியான தளவாய் சுந்தரம் மூலமாகவும் முதல்வர் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறோம். விரைவில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

அடுத்த கட்டுரைக்கு