Published:Updated:

கல்லணை: `பாதுகாக்க வேண்டிய அரசே இதைச் செய்யலாமா?’ - மணல் குவாரியால் பதறும் கிராம மக்கள்

இந்தப் பகுதியின் விவசாயமும் நீர் ஆதாரங்களும் பாதுகாக்கப்படணும்னு அதுல சொல்லப்பட்டிருக்கு. இங்க மணல் குவாரி அமைக்குறது சட்ட விரோதம்.

2,000 ஆண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்த கல்லணை இன்றளவும் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. நீர்மேலாண்மையிலும் பொறியியல் நுட்பங்களிலும் தமிழர்கள் சிறந்து விளங்கியதற்கு இதுவே சான்று. இது பாரம்பர்ய பொக்கிஷம் மட்டுமல்ல. காவிரி டெல்டாவின் நீர் நிர்வாகி. லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம். இதற்கு மிகப்பெரும் ஆபத்து நெருங்கிக்கொண்டிருக்கிறது. இங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரியால், அச்சுறுத்தல் உருவெடுத்துள்ளது. இதற்கு தடை விதிக்கக் கோரி, இப்பகுதி மக்கள் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஆயத்தமாகி உள்ளார்கள்.

மணல் குவாரி
மணல் குவாரி

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே திருசென்னம் பூண்டியில் தற்போது மணல் குவாரி தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இதனால், காவிரி டெல்டா விவசாயிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் எனப் பதறுகிறார்கள் அப்பகுதி மக்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் ஜீவக்குமார், ``இது மிகப்பெரிய அநியாயம். கல்லணையைப் பார்த்து உலகமே வியக்குது. இது உணவு உற்பத்திக்கான அடிப்படை ஆதாரம். இதைப் போற்றி பாதுகாக்க வேண்டிய தமிழக அரசே, இதற்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய செயல்ல ஈடுபட்டிருக்கு. கல்லணையில் இருந்து கொஞ்ச தூரத்துலதான் இந்தத் திருசென்னம்பூண்டி கிராமம் இருக்கு. இந்தப் பகுதியில் ஓடக்கூடிய, வெண்ணாற்றில் மணல் குவாரி அமைத்தால், படிப்படியாக மணல் சரிவு அதிகமாகி, கல்லணையின் கட்டுமானம் பாதிக்கப்படும். ராட்சத இயந்திரங்கள் மூலமாகத் தினமும் இங்க டன் கணக்குல மணல் எடுக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள்ல கொண்டு செல்லப்படுது. இதனால் அதிர்வுகள் ஏற்பட்டு கரைகளும் பலவீனம் அடைஞ்சிக்கிட்டு இருக்கு. குவாரியால் உருவான சேறு சதியில சிக்கி 10 வயதுச் சிறுமி ஒண்ணு இறந்துடுச்சு.

தஞ்சை: ஆற்றுக்கு நடுவே பெரிய பள்ளங்கள்! - சிறுமியின் உயிரைப் பறித்த அரசு மணல் குவாரி

இங்க மூன்று மாவட்டங்களுக்கான கூட்டு குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டுக்கிட்டு இருக்கு. மணல் குவாரியால் அதுக்கும் பாதிப்புகள் அதிகம். அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுறதுனால, ஆற்றின் தரைமட்டம் அதலபாதாளத்துக்கு போயிக்கிட்டு இருக்கு. இதனால் சுற்றுவட்டார கிராமங்கள்ல நிலத்தடிநீர் மட்டம் இறங்கி, போர்வெல் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காத நிலைமை உருவாகியிடும். இந்த ஆறு, அணைக்கரைக்குப் பிறகு, பாசன ஆறாக விவசாயிகளுக்கு பயன்பட்டுக்கிட்டு இருக்கு.

வழக்கறிஞர் ஜீவக்குமார்
வழக்கறிஞர் ஜீவக்குமார்

இங்க மணல் எடுக்கப்பட்டால், ஆழம் அதிகமாகி, அந்தப் பகுதி விவசாயிகளுக்குத் தண்ணீர் போய் சேராது. இந்த மாதிரி இடத்துல மணல் குவாரி அமைக்க, தமிழக அரசுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ, தெரியலை. இதைத் தடுத்து நிறுத்த, இப்பகுதி மக்கள் சார்பாக, நீதிமன்றத்துல வழக்கு தொடரப்போறோம். காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு, இதற்கான சிறப்பு சட்டமும் இயற்றப்பட்டிருக்கு. இந்தப் பகுதியின் விவசாயமும் நீர் ஆதாரங்களும் பாதுகாக்கப்படணும்னு அதுல சொல்லப்பட்டிருக்கு. இங்க மணல் குவாரி அமைக்குறது சட்ட விரோதம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு