Published:Updated:

`கமலைத் தொடர்ந்து ஆதரவு கொடுத்த ஆளுநர்?!' - சூரப்பா விவகாரத்தில் தொடரும் சர்ச்சை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

சூரப்பா விவகாரத்தில் விசாரணை எதற்கு எனச் சிலர் பேசிவருகிறார்கள். அவர்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறோம். இதே விசாரணை இன்னொருவர் மீது நடந்திருந்தால் இதேபோல் ஆதரவு தெரிவித்து பேசியிருப்பார்களா?

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் அரசுக்கு ஆளுநர் எழுதியிருக்கும் கடிதம், விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. `தன் மீது எந்தத் தவறும் இல்லையென்றால் ஆவணங்களை ஒப்படைக்க சூரப்பா மறுப்பது ஏன்... சூரப்பாவுக்கு ஆளுநர் ஆதரவு தெரிவித்தாலும், கமல் ஆதரித்தாலும் எங்கள் கேள்வி இதுதான்' என்கின்றனர் கல்வியாளர்கள்.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீது ரூ.200 கோடி அளவுக்கு ஊழல் புகார் வந்திருப்பதால், ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதை ஏற்க மறுத்த சூரப்பா, `பல்கலைக்கழகத்தில் ஒரு பைசா அளவுக்குக்கூட நான் முறைகேடு செய்ததில்லை' என்றார்.

இதை வரவேற்ற கல்வியாளர்களும், `தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சூரப்பா விசாரணையைச் சந்திக்க வேண்டும்' என்றனர். சூரப்பா விவகாரம் தொடர்பாக, கலையரசன்குழு விசாரணையைத் தொடங்கிவிட்டது. ஆனால், சூரப்பா தொடர்பான ஆவணங்களை விசாரணைக்குழு கேட்டும் ஒப்படைக்காததால், பதிவாளர் கருணாமூர்த்தியை நேரில் ஆஜராகுமாறு விசாரணைக்குழு சம்மன் அனுப்பியிருக்கிறது. இதையடுத்து, கமிட்டி முன்பு ஆஜராகி விளக்கம் அளித்திருக்கிறார் அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர்.

`சந்தோஷ் பாபு, சகாயம் வரிசையில் சூரப்பாவா?!'- கமல் கருத்தால் கொதிக்கும் கல்வியாளர்கள்

அதேநேரம், சூரப்பா விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், `அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக வந்தவர், வளைந்து கொடுக்காதவர். அதிகாரத்தின் முன் நெளிந்து கொடுக்காதவர். தமிழகத்தில் பொறியியல் கல்வியை உலகத்தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்று முனைந்தவர். பொறுப்பார்களா நம் ஊழல் திலகங்கள்... வளைந்து கொடுக்கவில்லையென்றால் ஒடிப்பதுதானே இவர்கள் வழக்கம்... எவரோ அடையாளத்தை மறைத்துக்கொண்டு எழுதிய மொட்டைக் கடுதாசியின் அடிப்படையில் விசாரணைக்குழு அமைத்திருக்கிறார்கள். மொட்டையில் முடி வளராததால், மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் கொடுத்து ஏதேனும் வில்லங்கம் சிக்குமா என்று கடை போட்டுக் காத்திருக்கிறார்கள். முறைகேடாகப் பல்கலைக்கழகத்தில் தங்கியவர்கள், அங்குள்ள வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தியவர்களை விசாரித்துவிட்டீர்களா?' எனக் கோபத்தைக் காட்டியிருந்தார்.

சூரப்பா
சூரப்பா
Jerome

கமலின் கோபத்தைத் தொடர்ந்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் தமிழக அரசுக்கு ஐந்து பக்கங்களில் கடிதம் ஒன்றை எழுதியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்தக் கடிதத்தில், `துணைவேந்தர் சூரப்பா அப்பழுக்கற்றவர். அவர் துணைவேந்தர் பொறுப்பை நேர்மையாகவும் திறம்படவும் செயலாற்றிவருகிறார்' எனக் குறிப்பிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழகப் பல்கலைக்கழகங்களில் வேந்தராக இருக்கும் ஆளுநரே இப்படியொரு கடிதம் எழுதியிருப்பது, கல்வியாளர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம். `` ஆளுநர் கடிதம் எழுதியிருப்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளிவரவில்லை. சூரப்பா விவகாரத்தில் விசாரணை எதற்கு எனச் சிலர் பேசிவருகிறார்கள். அவர்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறோம். இதே விசாரணை இன்னொருவர்மீது நடந்திருந்தால் இதேபோல் ஆதரவு தெரிவித்துப் பேசியிருப்பார்களா... ஒருவர்மீது சந்தேகம் எழுவதால்தான் அரசு விசாரணைக்கு உத்தரவிடுகிறது. அவ்வாறு சந்தேகம் வருவதற்கு ஒரு கடிதம் காரணமாக இருக்கிறது. அரசு இயந்திரத்தில் பலம் பொருந்தியவர்கள் மீது புகார் கொடுக்கப்படும்போது, புகார்தாரரின் ரகசியத்தைப் பாதுகாக்க வேண்டும் எனச் சட்டம் சொல்கிறது. எனவே, அந்தக் கடிதம் குறித்துக் கேள்வி எழுப்புவது சரியானதல்ல.

பிரின்ஸ் கஜேந்திரபாபு
பிரின்ஸ் கஜேந்திரபாபு

தன்மீது குற்றமில்லையென்றால், விசாரணையை எதிர்கொண்டு குற்றமற்றவர் என சூரப்பா நிரூபிக்கட்டும். இதன் ஒரு பகுதியாக, தன்னிடமுள்ள ஆவணங்களை கலையரசன் கமிட்டியில் துணைவேந்தர் கொடுத்திருக்க வேண்டும். ஒருவேளை அவர் ஆவணங்களைக் கொடுத்திருந்தால் இது போன்ற கேள்விகள் வந்திருக்காது. விசாரணையே வேண்டாம் எனக் கூற வேண்டிய அவசியம் என்ன... துணைவேந்தராக ஒருவர் பொறுப்புக்கு வரும்போது, அந்தப் பல்கலைக்கழகத்தில் எத்தனை பாடப்பிரிவுகள் இருக்கின்றனவோ, அவற்றுக்கு நிரந்தர ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆனால், பல்கலைக்கழகத்திலுள்ள காலிப் பணியிடங்கள் குறித்து அறிவிக்காமல் செயல்படும்போதே ஊழல் தொடங்கிவிடுகிறது. அவருடைய பணிக்காலத்தில் எத்தனை காலிப் பணியிடங்கள் இருந்தன, தற்காலிக ஆசிரியர்களாக எவ்வளவு பேர் இருந்தார்கள் என்பதையெல்லாம் விசாரிக்க வேண்டும். அதைவிடுத்து, துணைவேந்தருக்கு எதிராக யார் கடிதம் எழுதினாலும் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனச் சொல்வது எந்தவகையில் சரியானது எனத் தெரியவில்லை" என்றார் கொதிப்புடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு