Published:Updated:

`மொழிப் பேரினவாதிகளுக்கு இடமில்லை!’ - தமிழ் மொழி சர்ச்சை; மன்னிப்புக் கேட்ட ஹைடிசைன் நிறுவனம்

ஹைடிசைன்
News
ஹைடிசைன்

`இந்தி தேசிய மொழி’ என்றும், `அதைத் தெரிந்துகொள்ள வேண்டும்’ என்றும் கூறி சர்ச்சையில் சிக்கிய ஜொமேட்டோ நிறுவனத்தைப்போல தமிழ் மொழி விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது உலகப் புகழ்பெற்ற ஹைடிசைன் தோல் நிறுவனம்.

மதுரையைச் சேர்ந்த விகாஸ் என்பவர் ஒருசில மாதங்களுக்கு முன்பு ஜொமேட்டோவில் உணவை ஆர்டர் செய்திருந்தார். அந்த நபர் கொடுத்த ஆர்டரில் ஓர் உணவுப்பொருள் டெலிவரி செய்யப்படாததால் `சாட்’ மூலம் ஸொமேட்டோ வாடிக்கையாளர் பிரிவை அணுகினார். அப்போது டெலிவரி செய்யப்படாத உணவுக்கான பணத்தைத் தனக்குத் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது அவரிடம் சாட் செய்த வாடிக்கையாளர் சேவைப் பிரிவின் அதிகாரி, ``உங்கள் வட்டார மொழி தவறாக இருக்கிறது. இந்தி தேசிய மொழி. எனவே ஓரளவு புரிந்துகொள்ளும் அளவுக்காவது அனைவரும் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தினார். ஜொமேட்டோ நிறுவனத்தின் அந்த பதிலுக்கு கடும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் வலுத்தன. மேலும், `எங்கள் மாநிலத்தில் வியாபாரம் செய்ய வந்திருக்கும் நீங்கள்தான் தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்றும் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு வலுத்தது. ட்விட்டரில் #RejectZomoto என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனதால் ஸொமேட்டொ நிறுவனத்தின் பங்குகள் சரியத் தொடங்கியதால் மன்னிப்புக் கேட்டது அந்த நிறுவனம்.

நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பதிவு
நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பதிவு

தற்போது அதே போன்று தமிழைப் புறக்கணித்ததுடன், அவமதிக்கும்விதமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது தோல் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனமான ஹைடிசைன் (Hidesign) நிறுவனம். புதுச்சேரியைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கிவரும் உலகப் புகழ்பெற்ற ஹைடிசைன் நிறுவனம் தோல் பொருள்களை உற்பத்தி செய்துவருகிறது. வேலூர் மற்றும் புதுச்சேரியில் இந்த நிறுவனத்தில் தோல் தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இங்கு தயாரிக்கப்படும் தோல் பொருள்கள் உலகெங்கும் சந்தைப்படுத்தப்பட்டுவருகின்றன. இந்நிலையில் அந்த நிறுவனம் சமீபத்தில் தனது அதிகாரபூர்வமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் `ஒரு மேசை, ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள்’ என்ற தலைப்பில் ஒரு பதிவைப் போட்டிருந்தது. அந்தப் பதிவில் ஒரு மேசையை சுற்றி ஆண்கள் மற்றும் பெண்கள் அமர்ந்திருக்க, பின்னணியில் தோல் என்ற வார்த்தையை ஆங்கிலம், இந்தி, உருது, மலையாளம் உள்ளிட்ட மொழிகள் எழுதப்பட்டிருந்த நிலையில் தமிழ் தவிர்க்கப்பட்டிருந்தது.

புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா
புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா

அந்தப் பதிவில்,

`ஒரு மேசை, ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள்!’

`நாங்கள் தற்பெருமை காட்ட விரும்பவில்லை (ஆம், நாங்கள் செய்கிறோம்). ஆனால் எங்கள் மறைநிலைக் குழுவின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்று, எங்கள் குடும்பம் உலகம் முழுவதும் பரவியுள்ளது. நாம் வெவ்வேறு இடங்களிலிருந்து வந்து வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறோம், ஆனால் நம்மை ஒன்றிணைக்கும் ஒன்று எது? நிச்சயமாக கைவினை மற்றும் நிலையான ஃபேஷன் மீதுள்ள எங்கள் காதல். நாங்கள் நமது தாய்மொழிகளைப் பற்றிக்கொள்கிறோம், எப்போதும் ஒன்றாகச் செயல்படுவதற்கான வழியைக் காண்கிறோம். மொழிப் பேரினவாதிகளை விரட்டுங்கள், ஹைடிசைனில் உங்களுக்கு இடமில்லை. நாங்கள் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்கிறோம்!’ என்றும் பதிவிடப்படிருந்தது. தமிழ் தவிர்க்கப்பட்டிருந்த அந்தப் பதிவில் ‘மொழிப் பேரினவாதிகளை விரட்டுங்கள்’ என்று பதிவிடப்பட்டிருந்தது சமூக வலைதளங்களில் கடும் விவாதங்களைக் கிளப்பியது..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதையடுத்து புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும், வில்லியனுர் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ-வுமான சிவா வெளியிட்ட கண்டன அறிக்கையில், ``புதுச்சேரி வில்லியானூரில் தொழிற்சாலை நடத்தி, தோல் பதனிட்டு, உற்பத்திப் பொருள்களை வியாபாரம் செய்யும் ஹைடிசைன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழை புறக்கணித்தது மட்டுமல்லாமல், மொழிப் பேரினவாதிகளுக்கு ஹைடிசைனில் இடமில்லை என்று ஆணவத்துடன் வாசகத்தை குறிப்பிட்டு டிசைன் ஒன்றை வெளியிட்டுள்ளதை சமூக ஊடகத்தில் பார்த்தேன். தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரான இத்தகைய போக்கு கண்டனத்துக்குரியது.

ஹைடிசைன் வெளியிட்ட மன்னிப்பு கடிதம்
ஹைடிசைன் வெளியிட்ட மன்னிப்பு கடிதம்

தமிழ் பேசும் மாநிலமான புதுச்சேரி, எனது வில்லியனூர் தொகுதியில் தமிழ் தொழிலாளர்களைவைத்தும், தமிழ் மண்ணின் வளங்களைவைத்தும் உற்பத்தி செய்துவிட்டு, ஹைடிசைன் தயாரித்த பொருள்களை வாங்கும் தமிழர்களைப் புண்படுத்தும் வகையில் இவர்களது விளம்பர டிசைன் அமைந்துள்ளது. இதற்கு ஹைடிசைன் பகிரங்கமாக தமிழர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும். நுகர்வோரில் மொழி பேதமையையும் பிரிவினையையும் தூண்டும் ஹைடிசைன் பொருள்களை தமிழர்கள் ஏன் புறக்கணிக்கக் கூடாது என்ற கேள்விக்கும் ஒரு டிசைன் வெளியிட்டால் நன்றாக இருக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதையடுத்து அந்தப் பதிவை அவசர அவசரமாக நீக்கிய ஹைடிசைன் நிறுவனம், ``எங்கள் தவறுக்கு வருந்துகிறோம். ஒரு நிறுவனமாக நாங்கள் மொழியியல் பன்முகத்தன்மையை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறோம் என்பதை எடுத்துக்காட்டுவதே எங்கள் கடைசி பதிவு. நாங்கள் பல்வேறு மொழிகளைக் குறிப்பிட்டு, நமது சொந்த கலாசாரத்தின் மிக முக்கியமான பகுதியான தமிழ் மொழியைச் சேர்ப்பதைத் தவறவிட்டோம். இதற்காக நாங்கள் மனதார வருந்துகிறோம். தமிழ் ஹைடிசைனின் ஒருங்கிணைந்த பகுதியாகும். மற்றும் எங்கள் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. எங்கள் நிறுவனம் புதுச்சேரியில் நிறுவப்பட்டது.

எங்கள் குழுவில் உள்ள பெரும்பாலானோரின் தாய் மொழி தமிழ். Hidesign-ல் உள்ள நாங்கள், அனைத்து வகையான பன்முகத்தன்மையையும் கொண்டாடும் ஒரு சமூகம். மொழி வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் ஒற்றுமையுடன் பணியாற்றுவதற்கான வழியை நாங்கள் எப்போதும் கண்டுபிடித்துள்ளோம். அதையே செய்யும் இடமாக நாங்கள் தொடர்ந்து இருப்போம். தயவு செய்து எங்களின் நேர்மையான மன்னிப்பை ஏற்கவும்” என்று குறிப்பிட்டிருக்கிறது.