Published:Updated:

தீவிரவாத அமைப்புகளிடம் நன்கொடை பெற்றதா பா.ஜ.க? - தேர்தல் நிதிப் பத்திரம் ஏற்படுத்திய சர்ச்சை!

மோடி
மோடி

தீவிரவாத தொடர்புடைய நிறுவனங்களிடம் நன்கொடை பெறுவது தேசத்துரோகத்துக்கு ஒப்பானது எனும் நிலையில், பா.ஜ.க இதற்குக் கண்டிப்பாக விளக்கமளிக்க வேண்டும்.

கடந்த 2017-ம் ஆண்டில், அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பதற்காக எலெக்டோரல் பாண்டுகளை பா.ஜ.க அரசாங்கம் வெளியிட்டது. அத்திட்டம், ``அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும்" என்று அரசு கூறியது. ஆனால், கறுப்புப் பணத்தைக் கட்சிக்குள் கொண்டு வரவே பா.ஜ.க அரசு தேசிய பாதுகாப்பு பற்றிக் கவலைப்படாமல், ரிசர்வ் வங்கி விதியை மீறி, தேர்தல் பத்திரங்களை வெளியிட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை எளிமைப்படுத்துவதாகக் கூறித்தான் `தேர்தல் நிதிப் பத்திரம் (Electoral bonds)’ எனும் திட்டத்தை அறிவித்தது பா.ஜ.க அரசு.

அதன்படி அரசியல் கட்சிகளுக்கு 2,000 ரூபாய் வரை மட்டுமே ரொக்கமாகக் கொடுக்க முடியும். அதற்கு மேலான தொகையைத் தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது.

மேலும், தேர்தல் பத்திரங்களை வாங்கியவர் குறித்த தகவல்கள் வங்கியிடம் இருந்தாலும், அந்த நன்கொடையை வழங்கியவர் யார் என்று அரசியல் கட்சிக்குத் தெரியாது. ஆனால், தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் பெறும் நிதிக்கு அரசியல் கட்சிகள் வருமான வரி விலக்கு பெறமுடியும் என்கிற சலுகையையும் வழங்கியது.

எலக்டோரல் பாண்டு
எலக்டோரல் பாண்டு

இந்தத் தேர்தல் பத்திரங்கள் பரிசு வவுச்சர்களைப்போல செயல்படுகின்றன. எந்தக் குடிமகனும் அல்லது நிறுவனமும் பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து அவற்றை வாங்கி, தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சியிடம் ஒப்படைக்கலாம். கட்சிகள் அவற்றைத் தேர்தல் செலவுக்காகப் பயன்படுத்தும். பத்திரங்கள் ஆண்டு முழுவதும் நான்கு 10 நாள் சாளரங்களில் மட்டுமே அறிவிக்கப்படும்.

தேர்தல் நிதிப் பத்திரங்களை காசோலை அல்லது டிஜிட்டல் பரிமாற்றத்துடன் மட்டுமே வாங்க இயலும். மேலும், லாபகர நிறுவனங்களால் மட்டுமே அரசியல் கட்சிகளுக்குப் பணத்தை நன்கொடையாக வழங்க முடியும் என்ற நிபந்தனையை நீக்கி, வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் நிதி வழங்க இத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பத்திரங்கள் வெளியான நாளிலிருந்து 15 காலண்டர் நாள்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்கிற விதிமுறையும் இதில் அடங்கும்.

ரிசர்வ் வங்கியின் எதிர்ப்பு!

செப்டம்பர் 2017-ல், அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்குக் கடிதம் எழுதினார். அதில் தேர்தல் பத்திரங்கள் போன்ற ஒரு திட்டத்தை அனுமதிப்பது ஆபத்துகள் நிறைந்தது என்று எழுதினார்.

RBI
RBI

``மத்திய வங்கியைத் தவிர, வேறு நிறுவனம் பத்திரங்கள் போன்ற பணத்துக்குச் சமமான கருவிகளை வழங்குவது ரிசர்வ் வங்கியின் சக்திகளைப் பறிப்பது மட்டுமல்லாமல் பொருளாதாரத்துக்கும் ஆபத்தை விளைவிக்கும். இத்திட்டம் இந்தியாவின் நிதி அமைப்பின் நம்பகத்தன்மையைக் குறைக்கும். போலி நிறுவனங்கள் மூலம் இந்தத் திட்டம் தவறாகப் பயன்படுத்தப்படலாம்" என்று உர்ஜித் படேல் கடிதத்தில் கூறியிருந்தார். இது பணமோசடி பரிவர்த்தனைகளை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், ரிசர்வ் வங்கியின் எதிர்ப்பையும் மீறி இத்திட்டம் அமலானது.

தேர்தல் பத்திரத்தில் நடந்த விதிமீறல்கள்!

தேர்தல் பத்திரங்கள் குறித்த விதிகளை 6 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மாற்றக்கோரி நரேந்திர மோடியின் கீழுள்ள, பிரதமர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்தததாகச் சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. உடைக்கப்பட்ட விதிகள் முதலில் விதிவிலக்காக அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், அவை உடனடியாக விதிமுறைகளாக மாற்றப்பட்டன.

தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வந்தால் யார் எந்தக் கட்சிக்கு எவ்வளவு நிதியுதவி அளிக்கிறார்கள் என்பது தெரியாமலேயே இருக்கும் என்பதால் ரிசர்வ் வங்கி மற்றும் தேர்தல் ஆணையம் இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்தன.

2018 ஜனவரியில் தேர்தல் பத்திரங்களுக்கான விதிகளை அரசாங்கம் அறிவித்தபோது, ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மூலம் தேர்தல் பத்திரங்கள் 10 நாள்களுக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்தது. பொதுத் தேர்தலின்போது கூடுதலாக 30 நாள் காலம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு கர்நாடகா, சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தல்களுக்கு முன்னதாகத் தேர்தல் பத்திரங்களைத் திட்டமிடாமல் விற்க அனுமதிக்குமாறு நிதிஅமைச்சகத்திடம் கேட்டுள்ளது. 2018-ம் ஆண்டில், முதல் சுற்று பத்திர விற்பனை ஏப்ரல் மாதத்தில் திட்டமிடப்பட்டது. ஆனால், அதற்குப் பதிலாக மார்ச் மாதத்தில் ஸ்டேட் வங்கி அதைத் திறந்தது. இரண்டாவது சாளரம் அதே ஆண்டு ஏப்ரல் மாதம் திறக்கப்பட்டது.

SBI
SBI

முதற்கட்ட பத்திர வெளியீட்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு அதிக நிதி கிடைத்தது. ஆனால், எவ்வளவு கிடைத்தது என்பது தெரியவில்லை. ஆனால், கிடைத்த தகவல்களின் மூலம் அந்த இரண்டு தவணைகளின் விற்பனையில் அரசாங்கம் திருப்தியடையவில்லை என்றும், மே 2018-ல் நடந்த கர்நாடகத் தேர்தலுக்கு முன்னதாக, பிரதமர் அலுவலகம் நிதி அமைச்சகத்திடம் கர்நாடகாவை வெளிப்படையாகக் குறிப்பிடாமல் பத்திரங்களுக்கு மேலும் 10 நாள்கள் அவகாசத்தை நீட்டிக்குமாறு கேட்டுக்கொண்டது தெரியவந்துள்ளது.

`தேசிய அளவில் இரண்டு குழுக்கள்!’- பா.ஜ.க வுக்கு சவால் அளிக்க காங்கிரஸ் கட்சியின் புது பிளான்

இது, ஒருமுறை மட்டும் நடந்த நிகழ்வல்ல. முக்கியச் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக `விதிவிலக்கு' கேட்டுப் பெறுவது இந்த அரசாங்கத்துக்குப் பழக்கமாகிவிட்டது. ``ஐந்து மாநிலங்களில் வரவிருக்கும் மாநில சட்டசபைத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, தேர்தல் பத்திரங்களை வழங்குவதற்கான கூடுதல்10 நாள் சிறப்பு சாளரம் முன்மொழியப்பட்டது. 1-10- 2018 அன்று நிதியமைச்சரின் ஒப்புதலுடன் வழங்கப்பட்ட விதிவிலக்கை கருத்தில் கொண்டு இம்முறையும் விதிவிலக்கு வழங்கப்பட வேண்டும் என்று எழுதப்பட்டது. இத்தகவல்களைப் பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டபோது பிரதமர் அலுவலகம் பதிலளிக்க மறுத்துவிட்டது. அதே நேரத்தில் நிதி அமைச்சகம் அனைத்து முடிவுகளும் நல்ல நம்பிக்கையுடன் எடுக்கப்பட்டதாகக் கூறியிருக்கிறது.

காங்கிரசின் எதிர்ப்பு!

ரிசர்வ் வங்கியைப்போல, காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சிகளும் இந்த நடைமுறைக்குக் கடுமையான எதிர்பைத் தெரிவித்து வருகின்றன. பிரியங்கா காந்தி, தேர்தல் பத்திரங்களை வைத்து ஆர்.பி.ஐ விதிகளை மீறி, கறுப்புப் பணத்தால் பா.ஜ.க தேர்தல் நிதிகளைப் பெற்று வருவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். இது, தேசிய பாதுகாப்புக்கு கலகம் விளைவிக்கும். கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகச் சொல்லி ஆட்சியைப்பிடித்த பா.ஜ.க-வின் இச்செயல் வெட்கக்கேடானது என்று விமர்சித்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிரங்கமான கண்டனங்களையும் பதிவு செய்திருக்கிறார்.

மேலும் , தீவிரவாத தொடர்புடையதாக அமலாக்கத்துறையால் விசாரிக்கப்படும் நிறுவனத்திடமிருந்து பா.ஜ.க தேர்தல் நன்கொடை பெற்ற தகவலும் அண்மையில் அம்பலமாகியுள்ளது. 1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட மாஃபியா தலைவன் தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய உதவியாளர் இக்பால் மேமன் என்கிற இக்பால் மிர்ச்சி. இவரிடமிருந்து R.K.W டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்கு பணப் பரிவர்த்தனை நடைபெற்றது குறித்த புகாரில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இக்பால் மிர்ச்சி
இக்பால் மிர்ச்சி

இந்நிலையில், R.K.W டெவலப்பர்ஸ் நிறுவனம் பா.ஜ.க-வுக்கு தேர்தல் நன்கொடை அளித்ததாக பா.ஜ.க தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. 2014-2015-ம் ஆண்டில் பா.ஜ.க-வுக்கு ரூபாய் 10 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளது அந்நிறுவனம். இந்த நிதியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க பெற்றுள்ளது.

காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா இப்பத்திரங்கள் மூலம் ஆளும் பா.ஜ.க-வுக்கு எத்தனை 1,000 கோடி கறுப்புப் பணம் கிடைத்துள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ``பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் எனக் கூறும் பா.ஜ.க பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்திடம் நிதி பெற்றது பற்றி பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விளக்கம் அளிக்க வேண்டும்" என ட்வீட் செய்திருக்கிறார். `பா.ஜ.க-வின் ஊழல் வெளியாகியுள்ளது' என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கூறியுள்ளது.

பணம்
பணம்
பி.ஜே.பியைச் சுற்றும் தேர்தல் நிதிப் பத்திர விவகாரம்... நடந்தது என்ன?

தீவிரவாத தொடர்புடைய நிறுவனங்களிடம் நன்கொடை பெறுவது தேசத்துரோகத்துக்கு ஒப்பானது எனும் நிலையில், பா.ஜ.க இதற்குக் கண்டிப்பாக விளக்கமளிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு