Published:Updated:

கான்பூர் ஐ.ஐ.டி மாணவர்கள் போராட்டம் - உருதுக் கவிதை வாசிக்கப்பட்டதால் சர்ச்சை!

தற்போது கான்பூர் ஐ.ஐ.டி வளாகத்தில் பாடப்பட்ட ஃபைஸின் கவிதை சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

ஐ.ஐ.டி, கான்பூர்
ஐ.ஐ.டி, கான்பூர்

பரபரப்பாகப் பேசப்பட்ட நெட்பிளிக்ஸின் 'லெய்லா' தொடரில் முக்கியக் கதாபாத்திரம், அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவருக்கு உருதுக் கவிஞர் ஃபைஸ் அகமது ஃபைஸின் கவிதைகள் அடங்கிய ஒலிநாடா ஒன்றைத் திருட்டுத்தனமாக எடுத்துச் செல்வது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். தொடரின்படி அவர்களது ஆர்யவர்த்தா நாட்டில் ஃபைஸின் கவிதைகள் தடைசெய்யப்பட்டிருக்கும். அதுபோலத் தற்போது கான்பூர் ஐ.ஐ.டி வளாகத்தில் பாடப்பட்ட ஃபைஸின் கவிதை சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

ஃபைஸ் அகமது ஃபைஸ்
ஃபைஸ் அகமது ஃபைஸ்

ஃபைஸ் அகமது பாகிஸ்தானைச் சேர்ந்த உருதுக்கவிஞர், மார்க்சியவாதி. பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். பாகிஸ்தானின் லியாகத் அலிகான் அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாக நான்கு வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டவர். இலக்கியத்துக்கான நோபல் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். அவரின் கவிதைகள் பாகிஸ்தான் மற்றும் வட இந்திய இலக்கியச் சூழலில் இன்றளவும் பேசப்படுபவை.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராடிய ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக, கான்பூர் ஐ.ஐ.டி வளாகத்தில் அமர்ந்து போராடிய மாணவர்கள் திடீரென ஃபைஸின் 'ஹம் தேக்கேங்கே' கவிதையைப் பாடியது இந்து மத உணர்வுகளை அவமதிப்பதாக இருப்பதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. ஐ.ஐ.டி கான்பூரின் தற்காலிக ஆசிரியர் ஒருவர் மேலும் சில ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் இணைந்து இது குறித்த புகார் ஒன்றை நிர்வாகத்திடம் கொடுத்திருக்கிறார். இது குறித்துப் பேசியிருக்கும் கான்பூர் ஐ.ஐ.டி உதவி இயக்குநர், ``300 மாணவர்கள் மிகவும் அமைதியாக வளாகத்தின் உள்ளேயே அமர்ந்தபடி போராட்டம் நடத்தினார்கள்.

ஐ.ஐ.டி கான்பூர்
ஐ.ஐ.டி கான்பூர்
HuffPost

அப்போது மாணவர் ஒருவர் எழுந்து ஃபைஸ் அகமதுவின் கவிதை ஒன்றை வாசித்தார். இது 20 நாள்களுக்கு முன்பு நடந்தது. இதற்கிடையே ஊழியர் ஒருவர் கொடுத்த புகாரின் பெயரில் மாணவர்கள் சிலர் மட்டும் விசாரிக்கப்பட்டனர். மீதம் இருக்கும் மாணவர்கள் விடுமுறை முடிந்து கல்லூரிக்குத் திரும்பியதும் விசாரிக்கப்படுவார்கள். ஐ.ஐ.டி-யைச் சேர்ந்த சிலர் இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் விவாதத்தில் ஈடுபடத் தொடங்கினார்கள். அது பிரச்னையை இன்னும் வீரியப்படுத்தும் என்பதால் அந்த விவாதங்களை நிறுத்திக்கொள்ளச் சொல்லியிருக்கிறோம்" என்றார். சென்னை, மும்பை மற்றும் கான்பூர் உட்பட இதுவரை மூன்று ஐ.ஐ.டி-க்கள் போராட்டத்தில் களமிறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.