Published:Updated:

`சாலை நடுவே குழி; சுவர்களில் ஃப்ளெக்ஸ்!’ - வைத்திலிங்கம் மகன் திருமணத்துக்காக மீறப்படும் விதிகள்

திருமண ஏற்பாடு
திருமண ஏற்பாடு ( ம.அரவிந்த் )

சாலையின் நடுவில் குழிதோண்டப்படுவது குறித்து புகார் தெரிவித்தும் அதிகாரிகள், போலீஸார் கண்டுகொள்ளவில்லை என்றும் அப்பகுதி மக்கள் புகார் வாசிக்கிறார்கள்.

தஞ்சாவூரில் நடைபெற உள்ள வைத்திலிங்கம் மகன் திருமண நிகழ்ச்சியில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர். இதற்காக சாலையின் நடுவே பள்ளம் எடுத்து பெரிய கம்புகளைக் கொண்டு சாரம் அமைத்து அலங்கார வளைவுகள் வைத்து வருவது வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகப் புகார் வாசிக்கிறார்கள். இதனால், அசம்பாவிதம் நிகழ வாய்ப்பிருப்பதாகவும் கொதிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

மாநிலங்களவை எம்.பி-யும், அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பளருமான வைத்திலிங்கத்தின் மகன் திருமணம் தஞ்சாவூரில் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் என பலர் கலந்துகொள்கின்றனர். இதற்காக விமரிசையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார் வைத்திலிங்கம்.

திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபலங்களை வரவேற்பதற்காக அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக முக்கிய சாலையில் நடுவே குழி எடுத்து பெரிய கம்புகளைக் கொண்டு சாரம் கட்டி வருகின்றனர். இதனால் அசம்பாவிதம் நிகழ வாய்ப்பிருப்பதாகவும் வாகன ஓட்டிகளுக்கு சிரம் ஏற்படும் வகையில் இவை அமைக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சாலையில்
சாலையில்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை பகுதி சமூக ஆர்வலர்கள் சிலர், ``தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மண்டபம் ஒன்றில் வைத்திலிங்கம் மகன் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக நகர் முழுவதும் இப்போதே போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஃப்ளெக்ஸ் வைக்கக் கூடாது என தடை இருப்பதால் ஃப்ளெக்ஸ் அச்சடித்து, அதை அப்படியே பெரிய சுவரில் ஒட்டியிருக்கிறார்கள்.

முக்கிய சாலையான தஞ்சை - திருச்சி சாலையில் அமைந்துள்ள மண்டபத்துக்கு அருகே விமரிசையான பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில், அலங்கார வளைவுகள் வைப்பதற்காக சாலையின் நடுவே குழி எடுத்து பெரிய அளவிலான கம்புகளைக் கொண்டு சாரம் கட்டி வருகின்றனர்.

சாலையில் அமைக்கப்படும் அலங்கார வளைவு
சாலையில் அமைக்கப்படும் அலங்கார வளைவு

அந்தப் பிரதான சாலை எப்போதும் பரபரப்பு மிகுந்ததாக இருக்கும். வாகன ஓட்டிகள் அதிகம் பயன்படுத்தும் சாலை அது. மண்டபத்தை ஒட்டியே இடவசதி இருக்கும்போது, `முதல்வரை வரவேற்கிறேன்’ என்பதற்காக சாலையின் நடுவே அலங்கார வளைவுகள் அமைத்து வருகின்றனர். இதற்கு உரிய அனுமதியும் வாங்கவில்லை எனத் தெரிகிறது. இதில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புண்டு.

`சறுக்கிய ஆல் இன் ஆல்; வருத்தத்தில் வைத்திலிங்கம்!' - புலம்பும் தஞ்சை அ.தி.மு.கவினர்

சென்னை பள்ளிக்கரணையில் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் சாலையின் நடுவே வைத்த ஃப்ளெக்ஸ் விழுந்த விபத்தில் சுபஸ்ரீ என்ற இளம் பெண் உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்து சில மாதங்களே ஆகின்றன. இதைக் கவனத்தில் கொண்டு யாருக்கும் எந்தவிதமான இடையூறும் ஏற்படாமல் திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்’’ என்றனர். சாலையின் நடுவில் குழிதோண்டப்படுவது குறித்து புகார் தெரிவித்தும் அதிகாரிகள், போலீஸார் கண்டுகொள்ளவில்லை என்றும் அப்பகுதி மக்கள் புகார் வாசிக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு