Published:Updated:

`வேண்டியவங்க வருவாங்க... சரக்கு கொடுங்க..!' - ரகசிய உத்தரவு போட்டாரா சிவகங்கை டாஸ்மாக் மேலாளர்?

மது விற்பனை
மது விற்பனை

சிவகங்கை மாவட்டத்தில் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் அரைகுறையாகத் திறக்கப்பட்டு மது விற்பனை ஜோராக நடைபெறுகிறது.

ஊரடங்கு நேரத்தில் மதுபானங்களை விற்று கொள்ளை லாபம் பார்ப்பதாக சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், போதைக்காக சேவிங் லோஷன், மெத்தனால் போன்றவற்றை குடித்து மரணிப்பது ஒருபுறம் நடந்தாலும், கள்ளச்சாராயம் காய்ச்சுவது மறுபுறம் அதிகரித்து வருகிறது. ஊருக்கு வெளியே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக இடத்தைத் தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

டாஸ்மாக் கடையில் விற்பனை
டாஸ்மாக் கடையில் விற்பனை

இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் அரைகுறையாகத் திறக்கப்பட்டு மது விற்பனை ஜோராக நடைபெறுகிறது.

இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் சிலர் நம்மிடம் பேசுகையில், "சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஒருநாள் எங்கள் ஊழியர்கள் சிலரைக் கூப்பிட்டு, `வேண்டப்பட்டவங்க வருவாங்க மதுவை எடுத்துக் கொடுங்க'ன்னு சொன்னாங்க. அதைக் கேட்டு இரவில் மது எடுத்துக் கொடுத்தோம்.

டாஸ்மாக்
டாஸ்மாக்

அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த மாதிரி வேலைகளைச் செய்யச் சொல்றாங்க. நாங்களும் வேற வழியில்லாம செய்ய வேண்டியதா போயிருது. மார்ச் மாசத்தோட போன வருஷம் கணக்குளை எல்லாம் முடிச்சு அரசாங்கத்துகிட்ட ஒப்படைச்சிட்டோம்.

ஊரடங்கு அறிவிச்சுட்டாங்க, இந்த ஏப்ரல் மாசத்துக்கான கணக்கை தலைமையில் இருந்து கேக்கறாங்க. அதற்கான பணத்தை ஜி.எஸ்.டியோட சேர்த்துக் கட்டணும். இதைப்பத்தி மாவட்ட மேலாளரிடம் கேட்டோம். ஆனா, அவரு எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைனு சொல்லிட்டாரு. இப்போ இருக்கற நிலைமைல எங்களுக்கு என்ன பண்றதுனு புரியல. பணப் பிரச்னை இருக்கற சமயத்துல எங்க கைக்காசைப் போட்டு எப்படிக் கட்டுறது" என்கின்றனர் வேதனையோடு.

போலீஸ் பிடித்த டாஸ்மாக் மது
போலீஸ் பிடித்த டாஸ்மாக் மது

இதுகுறித்து டாஸ்மாக் சிவகங்கை மாவட்ட மேலாளர் காளிமுத்துவிடம் பேசினோம். ``சிவகங்கை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் உள்ள பாட்டில்கள் அனைத்தும் தனியார் மகாலில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு எந்த முறைகேடும் நடக்கவில்லை” என்றார் உறுதியாக.

ஊரடங்கு நேரத்தில் மதுவிற்பனை நடப்பது குறித்து சிவகங்கை எஸ்.பி ரோஹித்நாத்திடம் பேசினோம். ``சிவகங்கை மாவட்டத்தில் சட்டவிரோதமாக டாஸ்மாக் மது விற்பனை செய்யப்படுவதைத் தடுத்து மது பாட்டில்களைக் கைப்பற்றியுள்ளோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு