Published:Updated:

துபாய்: தனிமைச் சிறை; கடுங்காவல்! தந்தையால் சிறைவைக்கப்பட்ட இளவரசி லத்தீஃபா யார்?

லத்திஃபா 2002-ம் ஆண்டு தனது 17-வது வயதில் முதன்முறை தப்பிச்செல்ல முயன்று துபாய் - ஓமன் எல்லையில் பிடிபட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

துபாய் இளவரசி லத்தீஃபா (Latifa), 2018-ம் ஆண்டு தப்பிச்செல்ல முயன்று பிடிபட்டார். இவ்வளவு நாள்கள் பொதுவெளியில் செல்லாமல் சிறைப்படுத்தப்பட்டிருந்ததாக, செவ்வாய் அன்று வெளியான காணொலியில் லத்தீஃபா குற்றம்சாட்டியிருக்கிறார்.

துபாய் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் ஆல் மக்தூமின் மகள் ஷெய்கா லத்தீஃபா முகமது அல் மக்தூம், கடந்த 2018-ம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் வழியாக துபாயிலிருந்து தப்பிச்செல்ல முயன்று கடற்படையினரால் பிடிக்கப்பட்டு, மீண்டும் துபாய்க்கு அனுப்பப்பட்டார். அதன் பிறகு இன்றுவரை யாரும் அவரைப் பார்க்கவில்லை. வெளியுலகிலிருந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தார். லத்தீஃபா 2002-ம் ஆண்டு தனது 17-ம் வயதில் முதன்முறை தப்பிச்செல்ல முயன்று துபாய் - ஓமன் எல்லையில் பிடிபட்டார்.

லத்தீஃபா
லத்தீஃபா

செவ்வாய் அன்று தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் வீடியோவில் லத்தீஃபா,``நான் ஒரு பிணைக்கைதிபோல அடைக்கப்பட்டிருக்கிறேன். நான் இருக்கும் வீடு சிறைச்சாலைபோல அடைக்கப்பட்டிருக்கிறது. ஜன்னல்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. என்னால் எதையும் திறக்க இயலவில்லை, நான் மட்டுமே இங்கு தனியாக இருக்கிறேன். தனிச்சிறையில் மருத்துவ உதவிக்குக்கூட யாரும் இல்லை. வெளியில் எப்போதும் காவல் படையினர் இருக்கிறார்கள்" எனக் கூறியிருக்கிறார்.

லத்தீஃபா பதிவு செய்திருக்கும் வீடியோ பூட்டிய கழிப்பறையில் ரகசியமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. லத்தீஃபா பிடிபட்டு ஓராண்டுக்குப் பிறகு மூன்றாம் நபர் உதவியுடன் அவரின் நண்பர் டீனா ஜௌஹியானனுடன் (Tiina Jauhianen) தொலைபேசி மூலம் பேசிவந்திருக்கிறார். அந்தநேரத்தில், சில வீடியோக்களைப் பதிவு செய்து அவருடன் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் இருக்கும் வீட்டின் ஜன்னல்கள் மூடி, சிறைச்சாலையாக மாற்றப்பட்டிருப்பது பற்றிப் பேசியிருக்கிறார்.

வீடியோக்கள் மூலம் லத்தீஃபா அடைபட்டிருக்கும் வீடு கடற்கரை அருகில் இருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும், அந்த வீட்டைச் சுற்றி 30 காவல் படை வீரர்கள் இருக்கிறார்கள். லத்தீஃபா பதிவு செய்திருக்கும் மற்றொரு வீடியோவில், ``நான் ஒரு வருடத்துக்கு மேலாகத் தனிமை சிறையில் அடைபட்டிருக்கிறேன். மருத்துவப் பரிசோதனைகள், விசாரணைகள் இன்றி இருக்கிறேன். `நீ சூரியனைப் பார்க்கவே முடியாது’ எனக் காவல்துறையினர் மிரட்டுகின்றனர். நான் இங்கு பாதுகாப்பாக இல்லை" என அச்சத்துடனும் வருத்தத்துடனும் தெரிவித்திருக்கிறார்.

2018-ம் ஆண்டு நாட்டிலிருந்து தப்ப முயன்று தோல்வியுற்ற லத்தீஃபாவை, ஐ.நா முன்னாள் மனித உரிமை ஆணையர் மேரி ராபின்சன் சந்தித்தார். அப்போது லத்தீஃபா மிகவும் அச்சத்துடனும் வருத்தத்துடன் இருக்கிறார் என மேரி தெரிவித்தார். ஆனால், செவ்வாய் அன்று அவர் கூறிய வார்த்தைகள் அதிர்ச்சியளிக்கின்றன.

துபாய் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்-ன் ஆறாவது மனைவி ஹயா 2019-ம் ஆண்டு துபாயிலிருந்து தப்பி, தன் இரண்டு குழந்தைகளுடன் லண்டனுக்குச் சென்றார். கடந்த ஆண்டு தன் இரண்டு குழந்தைகளுக்கும் அவர்களின் பாதுகாப்பு கருதி தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தார்.

லண்டன் நீதிமன்ற நீதிபதி, ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இளவரசி ஹயாவை அச்சுறுத்துவது உண்மை எனக் கூறினார். ஷேக், தனது இரண்டு மகள்களையும் மூன்று முறை கடத்தத் திட்டமிட்டிருந்தது நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது. இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் இளவரசி ஹயா, இந்தியாவின் கோவா கடற்கரைப் பகுதியில் லத்தீஃபா ஆகியோர் கடத்தப்பட்டதாக ஹயா கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபணமானதாக நீதிமன்றம் தெரிவித்தது.

ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்
ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்
Amr Nabil

இங்கிலாந்து நீதிபதி ஆண்ட்ரூ மெக்ஃபார்லேன், `ஷேக்கின் மற்றொரு மனைவியின் மகள் ஷீகா ஷம்சா, 2000-ம் ஆண்டு கோடைக்காலத்தில், தனது குடும்பத்திலிருந்து பிரிந்து இங்கிலாந்துக்குச் சென்றிருக்கிறார். பின்னர் அவர் கேம்பிரிட்ஜில் அவருடைய தந்தையின் வேலையாட்களால் காரில் கடத்தப்பட்டார். அங்கிருந்து அவர் ஹெலிகாப்டரில் பிரான்ஸுக்கு அனுப்பப்பட்டார். பின்னர் துபாய்க்கு ஒரு ஜெட் விமானத்தில் அனுப்பப்பட்டார்.

ஷம்சா, லத்திஃபா இருவரும் அவர்கள் தந்தை மற்றும் குடும்பத்தின் காவலுக்குத் திரும்பியதால் சுதந்திரத்தை இழந்துவிட்டார்கள்" என்று தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும், பிரதமருமான ஷேக் முகமது, `நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒருதலைபட்சமானது’ என்று கூறினார்.

`இந்த வழக்கு எங்கள் குழந்தைகள் தொடர்பான தனிப்பட்ட விஷயங்களைப் பற்றியது. குழந்தைகளின் நலன்களைப் பாதுகாப்பதற்காகத் தீர்ப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும். தீர்ப்பின் விளைவாக, எனது குழந்தைகள் ஊடகங்களின் பார்வையிலிருந்து சுதந்திரமாக இருக்க இயலாது. மற்ற குழந்தைகளைப்போல குடும்ப நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள்.

அரசாங்கத்தின் தலைவராக, நீதிமன்றத்தின் நேர்மையைக் கண்டறியும் செயல்பாடுகளில் என்னால் பங்கேற்க முடியவில்லை. இதன் விளைவாக வெளியிடப்பட்ட தீர்ப்பு உண்மையின் ஒரு பக்கத்தை மட்டுமே கூறுகிறது. நான் ஊடகங்களைக் கேட்கிறேன். எங்கள் குழந்தைகளின் தனிப்பட்ட சுதந்திரத்தை மதிக்கவும்; இங்கிலாந்து அவர்களின் வாழ்க்கையில் தலையிட வேண்டாம்" என்று அறிக்கையில் ஷேக் தெரிவித்திருந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு