கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகிலுள்ள வசந்த நகரைச் சேர்ந்தவர் முருகேசன் (47). கட்டட மேஸ்திரியாக வேலை பார்த்துவருகிறார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு தனியார் ஹவுஸிங் ஃபைனான்ஸ் ஒன்றில் 18 லட்ச ரூபாய் கடன் வாங்கி, வீடு கட்டியிருக்கிறார். வீட்டைக் கட்டிய சில மாதங்களிலேயே மத்திய அரசு எடுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், முருகேசனுக்குக் கட்டுமான வேலைகள் பெரிதாகக் கிடைக்காமல் போயிருக்கிறது.
அதன் பிறகு கிடைத்த சிறு சிறு வேலைகளைச் செய்து குடும்பச் செலவுகளை கவனித்துக்கொண்டும், வீட்டுக்கு வாங்கிய கடனையும் கட்டிவந்திருக்கிறார். இதற்கிடையே கொரோனா வைரஸ் பரவலால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, முருகேசனின் வாழ்க்கையை மேலும் முடக்கிப்போட்டிருக்கிறது. இதனால் வீட்டுக்கு வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் தவித்துவந்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இப்படியான நிலையில், கடனைக் கட்டச் சொல்லி ஃபைனான்ஸ் நிறுவனம் முருகேசனுக்கு சமீபத்தில் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருக்கிறது. ஃபைனான்ஸ் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியதிலிருந்தே முருகேசன் கடுமையான மன வருத்தத்தில் இருந்துவந்திருக்கிறார். நேற்று காலை தூங்கி எழுந்தவர் நேராக சமையலறைக்குச் சென்று, கத்தியை எடுத்து அவரது நாக்கை துண்டாக அறுத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனயில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அரசு மருத்துவமனையில் வைத்து முருகேசனுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. முருகேசனின் இந்தச் செயலுக்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து அட்கோ போலீஸார் விசாரித்துவருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து விஷயமறிந்த போலீஸாரிடம் பேசியபோது, ``வீட்டுக் கடனைக் கட்டச் சொல்லி, சம்பந்தப்பட்ட ஃபைனான்ஸ் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியதிலிருந்தே முருகேசன் யாரிடமும் பேசாமல், ஒருவித இறுக்கத்துடன் இருந்திருக்கிறார். ஆசை ஆசையாகக் கட்டிய வீட்டை விற்றுவிட்டு கடனை அடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதே என்கின்ற கவலை வேறு. இதற்கிடையே முருகேசன் வீட்டை வாங்குவதற்கும் யாரும் முன்வராமல் இருந்திருக்கிறார்கள். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் மனம் நொந்துபோனவர், மன உளைச்சலுக்கு ஆளாகி, அவருடைய் நாக்கைத் துண்டாக அறுத்துக்கொண்டிருக்கிறார். இந்தப் பிரச்னையை எப்படி எதிர்கொள்வது என்று முருகேசன் யாரிடமாவது ஆலோசனை கேட்டிருக்கலாம்" என்றனர்.