Published:Updated:

`கொரோனா நிவாரணப் பொருள்களைக் கொடு..!' - தி.மு.க ஒ.செ மிரட்டலால் ஆடியோவை ரிலீஸ் செய்த அரசு அதிகாரி

விசு அண்ணாதுரை
விசு அண்ணாதுரை

``குடிபோதையோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்து, கொரோனா நிவாரணப் பொருள்களைக் கேட்டு மிரட்டினார். அதைப் பார்த்துப் பெண் ஊழியர்கள் பயந்துவிட்டனர். நான் அப்போது வெளியில் இருந்தேன்".

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலரை, தி.மு.க ஒன்றியச் செயலாளர் செல்ஃபோனில் அநாகரிகமாகப் பேசி மிரட்டியதாக வலம்வரும் ஆடியோ, சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

நீடாமங்கலம்
நீடாமங்கலம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலராக இருப்பவர் ஆறுமுகம். இவரை இப்பகுதியைச் சேர்ந்த தி.மு.க ஒன்றியச் செயலாளர் விசு அண்ணாதுரை போனில் தொடர்புகொண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக ஒரு ஆடியோ வெளியானது. இதுதொடர்பாக, விசு அண்ணாதுரை மீது வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சர்ச்சைக்குரிய அந்த ஆடியோவை நாமும் கேட்டோம். காது கொடுத்துக் கேட்க முடியாத அளவுக்குத் திட்டியிருக்கிறார் விசு அண்ணாதுரை.

ஆறுமுகத்திடம் பேசினோம். ‘’ கொரோனா தொற்று தடுப்புக்காக, பொதுமக்களுக்கு அரசு சார்பாக வழங்கப்படும் முகக்கவசம், சோப், ப்ளீச்சிங் பவுடர் உள்ளிட்ட பொருள்களை விநியோகம் செய்கிறோம். இந்தப் பொருள்களை அதிக எண்ணிக்கையில தனக்குக் கொடுக்க வேண்டும் என விசு அண்ணாதுரை வற்புறுத்தினார். அதுமாதிரியெல்லாம் எந்த ஒரு தனிநபருக்கும் கொடுக்க முடியாது என மறுத்துவிட்டேன். இதனால் அவர் என்மேல கோபமாகிட்டார்.

நிவாரணப் பணிக்குச் சென்ற லாரி; வெளியான `லஞ்ச’ வீடியோ! -நெல்லை ஆயுதப்படை காவலர் சஸ்பெண்ட்

இதையடுத்து குடிபோதையோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்து, பொருள்களைக் கேட்டு மிரட்டினார். அப்போது அசிங்கமான வார்த்தைகளில் கடுமையாகப் பேசியிருக்கார். அதைக் கேட்டுப் பெண் ஊழியர்கள் பயந்துவிட்டனர். நான் அப்போது வெளியில் இருந்தேன். தொடர்ந்து எனக்கு ஃபோன் செய்து அசிங்கமான வார்த்தைகளில் திட்டினார். இதுமாதிரி அவர் நடந்துகொள்வது ஒன்றும் புதிதில்லை.

ஊராட்சி ஒன்றியத்தில் ஏதாவது பணிகளுக்கு டெண்டர் விடுங்க என என்னைப் பலமுறை வற்புறுத்தினார். நிதி இல்லாததால, டெண்டர் விட முடியாது என மறுத்து வந்தேன். இப்பவும் இதேபோல் எங்கள் அலுவலகத்துக்கு வந்து மிரட்டினார். எவ்வளவு நாளைக்குத்தான் பொறுத்துப் போவது?” என்றார் வேதனையுடன்.

வட்டார வளர்ச்சி அலுவலரின் குற்றச்சாட்டு தொடர்பாக விசு அண்ணாதுரையிடம் விளக்கம் கேட்க தொடர்பு கொண்டோம். அவருடைய செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவர் சார்பாக நம்மிடம் பேசிய தி.மு.க பிரமுகர் ஒருவர், ‘’கொரோனா தடுப்பு பொருள்களை விசு அண்ணாதுரை கேட்டதாகச் சொல்வது முற்றிலும் பொய்யானது. வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம், ஒரு அரசு அதிகாரியாக நடுநிலையோடு நடந்து கொள்வது இல்லை. நீடாமங்கலம் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளரின் தங்கையின் கணவர்தான் இந்த ஆறுமுகம்.

தி.மு.க-வினரின் பொறுப்பு வகிக்கும் ஊராட்சிகளுக்கு மிகவும் குறைவாக நிவாரணப் பொருள்களைக் கொடுக்குறார். இதைக் கேட்டதற்காக தி.மு.க-வைச் சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகளை ஆறுமுகம் அநாகரிகமாகத் திட்டினார்.
தி.மு.க நிர்வாகி

இதனால் அவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதைதான் கேட்பார். உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிக்கும்போது கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் அ.தி.மு.க-வுக்குச் சாதகமாக நடந்துகொண்டார். அப்போதிருந்தே இவருக்கும் விசு அண்ணாதுரைக்கும் இடையே சண்டை தொடங்கிவிட்டது. இப்போது பிரச்னை முற்றிவிட்டது. அ.தி.மு.க-வினர் பொறுப்பு வகிக்கக்கூடிய ஊராட்சிகளுக்கு, மிகவும் அதிக எண்ணிக்கையில கொரோனா தடுப்புப் பொருள்களைக் கொடுக்குறார்.

ஆனால் , தி.மு.க-வினரின் பொறுப்பு வகிக்கும் ஊராட்சிகளுக்கு மிகவும் குறைவாகக் கொடுக்குறார். இதைக் கேட்டதற்காக தி.மு.க-வைச் சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகளை ஆறுமுகம் அநாகரிகமாகத் திட்டினார். இதை விசு அண்ணாதுரை தட்டிக்கேட்டார். இதனால்தான் வாக்குவாதம் முற்றியது. விசு அண்ணாதுரை கடைசியாகப் பேசியதை மட்டும் ஆறுமுகம் ரெக்கார்டு பண்ணி எல்லாருக்கும் அனுப்பி வருகிறார்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு