Published:Updated:

``முதலமைச்சரே இப்படிச் செய்யலாமா?" - ஜெயக்குமாரின் கேள்வியும், அதிகாரிகளின் விளக்கமும்

ஸ்டாலின்
ஸ்டாலின்

̀`மக்கள் கூட்டமாகக் கூடக்கூடாது; தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த, கூட்டமாகக் கூடி ஒரு பேரணி நடத்துவார்களா... என்ன காமெடி இது?" என்று கேள்வி எழுப்புகின்றனர் எதிர்க்கட்சியினர்.

கொரோனா மூன்றாவது அலையைத் தடுப்பதற்காகத் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாகத் தமிழகம் முழுக்க விழிப்புணர்வு பேரணி நடக்கவிருப்பதாகவும் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் அந்தப் பேரணி, பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர், எம்.எல்.ஏ, எம்.பி-க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் சமூக ஆர்வலர்களும் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு நடப்பதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருக்கிறது.

̀`மக்கள் கூட்டமாகக் கூடக்கூடாது; தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த, கூட்டமாகக் கூடி ஒரு பேரணி நடத்துவார்களா... என்ன காமெடி இது?" என்று கேள்வி எழுப்புகின்றனர் எதிர்க்கட்சியினர்.

இறையன்பு ஐ.ஏ.எஸ்
இறையன்பு ஐ.ஏ.எஸ்

நேற்று தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு துறையின் உயர் அதிகாரிகளும் அதில் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் பேசிய தலைமைச் செயலாளர் இறையன்பு, ``கொரோனா மூன்றாவது அலையைத் தடுக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகமிக அவசியம். இதற்காகச் சென்னையில் நடக்கும் பேரணிக்கு நானே தலைமை தாங்குகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள் தலைமையில், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள், உள்ளாட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் வகையிலான விழிப்புணர்வு பேரணிக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று கூறியதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இதை முன்வைத்துதான் இப்போது சர்ச்சை வெடித்திருக்கிறது. `கொரோனா காலத்தில் பேரணி நடத்துவது அவசியமா... விழிப்புணர்வு ஏற்படுத்த வேறு வழிகளே இல்லையா?' என்று எதிர்க்கட்சியினர் கொந்தளிக்கின்றனர்.

இதுகுறித்து பேசிய அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ``விழிப்புணர்வு என்பது மிகவும் முக்கியமானதுதான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. கொரோனா முதல் அலையின்போதே அ.தி.மு.க அரசு சார்பாக பல்வேறு விதமான விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொண்டோம். அப்போது நாங்கள் முழுமையாக விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டதால்தான் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வாயிலாகத்தான் விழிப்புணர்வு பணிகளை முன்னெடுத்தோமே தவிர, நாங்கள் விழிப்புணர்வு என்ற பெயரில் பேரணியெல்லாம் மேற்கொள்ளவில்லை. ஸ்மார்ட்போன் இல்லாத காலத்திலும் தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்திலும்தான் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பேரணிகள் அவசியமானவையாக இருந்தன.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்
``'ஒன்றிய அரசு’ என்று தொடர்ந்து சொல்வோம்" - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ஆனால், இப்போது அப்படியல்ல, நிறைய வழிகள் இருக்கின்றன. இன்று தொழில்நுட்பம் பெரியளவில் வளர்ந்திருக்கிறது. பலரும் ஸ்மார்ட்போன் வைத்திருக்கின்றனர். டிவி பார்க்கின்றனர். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு வசதி வாய்ப்புகள் உள்ளன. அதையெல்லாம் விட்டுவிட்டு விழிப்புணர்வு பேரணி என்ற பெயரில் கூட்டத்தைக் கூட்டுவதும் அதற்குத் தமிழகத்தின் முதலமைச்சரே தலைமை தாங்குவதும் தவறான முன்னுதாரணமாகிவிடும். அப்படிச் செய்தால் அரசாங்கமே கூட்டம் கூடுவதை ஆதரிக்கிறது என்றுதான் பொருள். இது நாமே வலிந்துபோய் கொரோனாவை வரவழைப்பதற்கான வழி. எனவே, இந்தப் பேரணி முடிவைக் கைவிட்டுவிட்டு வேறு வழிகளைச் சிந்திக்க வேண்டும்" என்றார்.

இது குறித்து தமிழக அரசின் உயர் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம், ``விழிப்புணர்வு பேரணி நடக்கப்போகிறது என்பது தவறான செய்தி. மாவட்ட ஆட்சியர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் விழிப்புணர்வு பேரணி என்று குறிப்பிடவில்லை. விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி என்றுதான் குறிப்பிட்டார். அதைச் சில பத்திரிகைகளில் விழிப்புணர்வு பேரணி என்று குறிப்பிட்டுவிட்டனர். அது தவறான பொருளில் புரிந்துகொள்ளப்பட்டு, ஊர்வலம் போல நடத்தப் போகிறார்கள் என்று அர்த்தப்படுத்திக் கொள்கின்றனர்.

கொரோனா சிகிச்சைப் பிரிவு
கொரோனா சிகிச்சைப் பிரிவு
கொரோனா: 10 மடங்கு அதிகரித்த ஆக்ஸிஜன் விலை; சவப்பெட்டிகளுக்கு தட்டுப்பாடு; திணறும் இந்தோனேசியா!

அது அப்படி கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அந்த விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி என்னென்ன வகைகளில் மேற்கொள்ளப்படவிருக்கிறது என்பதுகூட முடிவாகவில்லை. அதற்கான பரிந்துரைகள்தான் மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்கப்பட்டிருக்கிறது. இதைத் தவறாகப் புரிந்துகொண்டு பெரிய பிரச்னையாக சித்திரிக்க வேண்டாம்" என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு