Published:Updated:

'கருணாநிதி' பெயர் இருட்டடிப்பா? - பபாசியின் பொற்கிழி விருது அறிவிப்பும்... சர்ச்சைப் பின்னணியும்!

பபாசி பொற்கிழி விருது
News
பபாசி பொற்கிழி விருது

பபாசி வெளியிட்ட விருது பட்டியலில் கலைஞர் (கருணாநிதி) பெயர் இடம்பெறாமல், வெறுமனே 'பொற்கிழி விருது' என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் சர்சையைக் கிளப்பியது.

'கருணாநிதி' பெயர் இருட்டடிப்பா? - பபாசியின் பொற்கிழி விருது அறிவிப்பும்... சர்ச்சைப் பின்னணியும்!

பபாசி வெளியிட்ட விருது பட்டியலில் கலைஞர் (கருணாநிதி) பெயர் இடம்பெறாமல், வெறுமனே 'பொற்கிழி விருது' என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் சர்சையைக் கிளப்பியது.

Published:Updated:
பபாசி பொற்கிழி விருது
News
பபாசி பொற்கிழி விருது

2023-ம் ஆண்டு 46-வது சென்னை புத்தகக் கண்காட்சி, ஜனவரி 6-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. அதை நாளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார். இதை நடத்தும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) ஜனவரி 4-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பெயரில் அறிவிக்கும் 'கலைஞர் பொற்கிழி விருது' பட்டியலை வெளியிட்டது. இந்த நிலையில், பபாசி வெளியிட்ட விருது பட்டியலில் கலைஞர் (கருணாநிதி) பெயர் இடம்பெறாமல், வெறுமனே 'பொற்கிழி விருது' என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் சர்சையைக் கிளப்பியிருக்கிறது.

சென்னைப் புத்தகக் கண்காட்சி
சென்னைப் புத்தகக் கண்காட்சி
File Photo

கலைஞர் பொற்கிழி விருது!

கடந்த 2007-ம் ஆண்டு 30-வது புத்தகக் கண்காட்சியை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொடங்கிவைத்தார். அப்போது தி.மு.க அறக்கட்டளையிலிருந்து ஒரு கோடி ரூபாய் நிதி பபாசி சங்கத்திடம் வழங்கப்பட்டது. அதில் ஆண்டுதோறும் பல துறைகளிலுள்ள எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 'கலைஞர் பொற்கிழி விருது' வழங்கப்படும் என அறிவித்தார் கருணாநிதி. அதன்படி, ஒவ்வோர் ஆண்டும் 6 எழுத்தாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. அதில் நான்கு தமிழ் எழுத்தாளர்கள், ஒரு பிறமொழி எழுத்தாளர், ஒரு ஆங்கில மொழி எழுத்தாளர் இடம்பெற்றிருக்க வேண்டும். அவர்களுக்கு கலைஞர் பொற்கிழி விருதும், ஒரு லட்சம் ரூபாய் நிதியும் வழங்கப்படும்.

கலைஞர் பொற்கிழி விருது
கலைஞர் பொற்கிழி விருது

அந்த வகையில், இந்த ஆண்டு தேவி பாரதி (நாவல்), சந்திரா தங்கராஜ் (சிறுகதைகள்), தேவதேவன் (கவிதை), சி.மோகன் (மொழிபெயர்ப்பு), பிரளயன் (நாடகம்), பேரா.பா.ரா.சுப்பிரமணியன் (உரைநடை/ஆய்வு) ஆகியோருக்கு விருது வழங்கப்படுவதாகப் பட்டியல் வெளியானது. ஆனால், அதில், விருது வழங்குவதற்கு நிதியளித்த கருணாநிதியின் பெயரையே தவிர்த்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. மேலும், இது தொடர்பான அழைப்பில், `விருதுகள் பெறும்' என்பதற்குப் பதிலாக, `விருதுகள் பெரும்' என இடம் பெற்றிருந்த எழுத்துப் பிழைகளைக் குறிப்பிட்டும், எழுத்தாளர்கள் பலரும் தங்கள் கண்டனங்களைப் பதிவுசெய்தனர். தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இதை விமர்சித்து ஃபேஸ்புக், ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

'கலைஞர்' பெயர் குறிப்பிடாமல் இருக்கும் விருது பெயர்.
'கலைஞர்' பெயர் குறிப்பிடாமல் இருக்கும் விருது பெயர்.

இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெயரால் நிறுவப்பட்ட விருதுக்கு, அவர் பெயரையே போடாமல், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) வெறுமனே ‘பொற்கிழி விருது’ என அவர்களது அமைப்பின் பேரில் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறதென்றால்…!" எனப் பதிவிட்டிருந்தார். அதன் பிறகு இது பெரும் அளவில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசு

இது தொடர்பாக தி.மு.க செய்தித் தொடர்பாளர் சிவா ஜெயராஜிடம் பேசினோம். "பபாசி அமைப்பு வேண்டுமென்றே கலைஞர் பெயரை தவிர்த்திருக்கிறது. அதைச் சரிசெய்து வெளியிட்டதாக சங்கம் சார்பாக இதுவரையிலும் எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அப்படி அச்சு செய்யப்பட்டதில் தவறு நிகழ்ந்திருந்தாலும், அதைச் சரிசெய்ய 48 மணிநேரம் தேவைப்படுமா... அதற்கு ஒரு மணிநேரம் போதுமானது. அதிகபட்சம் 24 மணி நேரத்தைக்கூட எடுத்துக் கொள்ளலாம். எழுத்தாளர்களுக்கு தி.மு.க அறக்கட்டளை சார்பாக வழங்கினால் அரசியல்ரீதியாக விமர்சனங்கள் எழும்.

சிவ ஜெயராஜ்
சிவ ஜெயராஜ்

அதனால், அறக்கட்டளையின் ஒரு கோடி ரூபாய் நிதி பபாசியிடம் வழங்கப்பட்டது. அதன்படி ஆண்டுதோறும் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது. ஒரு சிறிய அளவில் நடந்த புத்தகக் கண்காட்சி பெரியளவில் பிரபலமானதற்கு முக்கியக் காரணம் முன்னாள் முதல்வர் கருணாநிதி. ஆனால், அதையெல்லாம் மறந்துவிட்டு, இப்படிச் செய்வது ஏற்புடையதல்ல" என்றார்.

பபாசி
பபாசி

இது குறித்து பபாசி தலைவர் வைரவனிடம் விளக்கம் கேட்டபோது, ``அது அச்சிடும்போது தவறாகப் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன்புள்ள பக்கத்தில் தெளிவாக கலைஞர் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் எங்களின் மீது தவறில்லை. சரியான பக்கத்தை விட்டுவிட்டு தவறான பக்கத்தைச் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்" என்றவரிடம், சரியாகப் பதியப்பட்ட நகலை அனுப்பும்படி கேட்டதற்கு, ``நான் வெளியில் இருக்கிறேன்" என சுருக்கமாக முடித்துக்கொண்டார்.