Published:Updated:

கோவை கலவரம் டு சி.ஏ.ஏ விவகாரம்... வழி மாறுகிறதா ரஜினியின் வாய்ஸ்?

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

கோவை மதக்கலவரத்தின்போது நல்லிணத்துக்காக ஒலித்த நடிகர் ரஜினிகாந்த்தின் குரலும், தற்போது சி.ஏ.ஏ விவகாரத்தில் ஒலிக்கும் அவரது குரலும் முற்றிலும் முரண்பட்டிருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) நாடு முழுவதும் நடத்தப்படும் என்று முன்பு அறிவிக்கப்பட்டு, தற்போது அது குறித்து இன்னும் முடிவுசெய்யப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு (என்.பி.ஆர்) நடைபெறவிருக்கிறது.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

இவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இரண்டு மாதங்களுக்கு மேலாக இதுதான் தேசிய அளவில் மிகப்பெரிய விவாதப்பொருளாக இருந்துவருகிறது. ஆனால், புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதாகவும், 2021 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாகவும் அறிவித்த ரஜினிகாந்த், அரசியல் ரீதியான கருத்துகளைத் தொடர்ச்சியாகத் தெரிவித்துவருகிறார். சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர் தொடர்பாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் இருந்துவந்த ரஜினிகாந்த், தற்போது இந்த விவகாரங்களில் தன் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக, ரஜினிகாந்த் எந்தக் கருத்தைச் சொன்னாலும் அது சர்ச்சையாகிறது. துக்ளக் விழாவில் பெரியார் குறித்து அவர் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையானது மட்டுமல்லாமல், அவரது பேச்சுக்குப் பரவலான எதிர்ப்பும் கண்டனமும் எழுந்தன. அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன. அந்தப் பரபரப்பு சற்று அடங்கிய நிலையில், சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர் குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்துகள் சர்ச்சையாகியுள்ளன. முழுக்க முழுக்க பா.ஜ.க தலைவர்களின் கருத்துகளையே ரஜினிகாந்த் எதிரொலித்துள்ளார் என்றும் விமர்சிக்கப்படுகிறது.

மோடி
மோடி
`ரெய்டு' விஜய், `தனி வழி' ரஜினி, பிரசாந்த் கிஷோர் பூகம்பம்..! மிஸ்டர் கழுகின் அரசியல் அப்டேட்ஸ்

கடந்த 5-ம் தேதி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த ரஜினிகாந்த், "குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் வாழும் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. அவர்கள் குடியுரிமைக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. இந்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்குப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று பீதியைக் கிளப்பியுள்ளார்கள். இது எப்படி இஸ்லாமிய மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதே தெரியவில்லை. ஒருவேளை இங்குள்ள இஸ்லாமியர்களுக்கு இந்தச் சட்டத்தால் ஏதாவது பாதிப்பு என்றால், அவர்களுக்காக நான் முதல் குரல் கொடுப்பேன்” என்று கூறினார்.

இந்த நிலையில், ரஜினிகாந்த்தின் கருத்துகளுக்கு எதிர்த்தரப்பில் பல கேள்விகளை எழுப்புகிறார்கள். 10 நாள்களுக்கு முன்பு, பெங்களூரில் உள்ள பெல்லாந்தூர் என்ற பகுதியில் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் குடிசைகளில் தங்கி கூலிவேலை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், "பெல்லாந்தூர் பகுதியில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சட்டவிரோதமாக வீடுகளைக் கட்டி, குடிசைகளை அமைத்து வசிக்கிறார்கள். அவர்களால் அப்பகுதியில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. அந்த மக்களால் பெரிய தாக்குதல் நடக்கவும் வாய்ப்புள்ளது. வங்கதேச அகதிகள் முகாமை உடனே அகற்ற வேண்டும்" என்ற வீடியோ வாட்ஸ்அப்பில் பரப்பப்பட்டது.

பெங்களூருவில் இடிக்கப்பட்ட குடிசைகள்
பெங்களூருவில் இடிக்கப்பட்ட குடிசைகள்
`வாட்ஸ்அப் வதந்தி; எம்.எல்.ஏ ட்வீட்!'- 300 குடிசைகளைத் தரைமட்டமாக்கிய பெங்களூரு மாநகராட்சி

அந்த வீடியோவை அரவிந்த் லிம்பாவளி என்ற பா.ஜ.க எம்.எல்.ஏ தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அத்துடன், "அதிகாரிகள் அந்தப் பகுதிக்குச் சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் குறிப்பட்டிருந்தார். உடனே அந்தப் பகுதிக்குச் சென்ற அதிகாரிகள், அங்கிருந்த 300 வீடுகளை இடித்துத்தள்ளினர். வீடுகள் தரைமட்டமாக இடித்துத்தள்ளப்பட்டதால் பெண்கள், குழந்தைகள், முதியோர் என அந்த மக்கள் கண்ணீரும் கம்பலையுமாக வீதியில் நின்றனர். கடைசியில், அவர்கள் வெளிநாட்டவர் அல்ல என்பதும் அவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பதும் தெரியவந்தது. வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை எல்லாம் அந்த மக்கள் வைத்துள்ளார்கள். சி.ஏ.ஏ., என்.ஆர்.சி பிரச்னையால் நாடு பரபரப்பாக இருந்த சூழலில், 10 நாள்களுக்கு முன்பாக இப்படியொரு சம்பவம் நடைபெற்றது.

"'இந்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு ஏதாவது பாதிப்பு என்றால், அவர்களுக்காக முதல் ஆளாக நான் குரல் கொடுப்பேன்' என்று இன்றைக்குச் சொல்லும் ரஜினிகாந்த், 10 நாள்களுக்கு முன்பு பெங்களூருவில் இஸ்லாமியர்களின் வீடுகள் இடிக்கப்பட்டபோது ஏன் குரல் கொடுக்கவில்லை?" என்ற கேள்வியை எதிர்த் தரப்பு எழுப்புகிறது. இந்திய இஸ்லாமியர்களை வங்கதேசத்தவர்கள் என்று பொய்யான செய்தியைப் பரப்பியதன் மூலம் இஸ்லாமியர்கள் மத்தியில் உண்மையிலேயே பீதியைக் கிளப்பியது பா.ஜ.க எம்.எல்.ஏ-தான். அது பற்றி ரஜினிகாந்த் ஏன் பேசவில்லை என்ற கேள்வியையும் பலர் எழுப்புகிறார்கள்.

டெல்லியில் மாணவர்கள் போராட்டம்
டெல்லியில் மாணவர்கள் போராட்டம்
`ஜெகன்மோகன் - சந்திரபாபு மோதல்!'- இரண்டே மாதத்தில் தமிழகத்துக்குத் தாவும் கியா நிறுவனம்?

"இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் தங்களது சுயலாபத்துக்காக, சுயநலத்துக்காக இஸ்லாமியர்களைத் தூண்டிவிடுகின்றன. இதற்கு மத குருக்களும் துணைபோகிறார்கள். போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்பு தீர ஆராய்ந்து, நன்றாக யோசித்து உங்கள் பேராசிரியர்கள், பெரியவர்களிடம் கேட்டுவிட்டு இறங்குங்கள் என்று மாணவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். எதையும் ஆராயாமல் போராட்டத்தில் இறங்கினால், பிரச்னை உங்களுக்குத்தான். உங்கள் மீது போலீஸ் எஃப்.ஐ.ஆர் போட்டுவிட்டால், உங்கள் வாழ்க்கையே முடிந்துபோகும்” என்று ரஜினிகாந்த் கூறினார்.

இந்தக் கருத்து தொடர்பாகவும் ரஜினிகாந்த் முன் ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது. டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது, அவர்கள் மீது வாலிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதேபோல, டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது மேலும் இரண்டு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றன. “ஜனநாயக ரீதியில் அமைதியாகப் போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு அறிவுரை சொல்லும் ரஜினிகாந்த், போராடிய மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர்களுக்கு அறிவுரை சொல்ல மாட்டாரா? அந்த இளைஞர்களின் எதிர்காலம் குறித்து ரஜினிகாந்த் கவலைப்பட மாட்டாரா?” என்ற கேள்விகளும் ரஜினிகாந்த் மீது முன்வைக்கப்படுகின்றன.

கருணாநிதி
கருணாநிதி

இந்த நேரத்தில், 20 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் மதக் கலவரம் நடைபெற்றபோது ரஜினிகாந்த் குரல் எழுப்பியது நினைவுகூரத்தக்கது. 1998-ம் ஆண்டு தி.மு.க தலைமையிலான ஆட்சி நடைபெற்றது. அப்போது, கோவையில் காவலர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்து - முஸ்லிம் கலவரம் மூண்டது. அந்த நேரத்தில் அமைதியை நிலைநாட்டக்கோரி ரஜினிகாந்த் குரல் எழுப்பினார். ‘தீவிரவாதச் செயலை, தீவிரவாதச் செயலாக மட்டுமே பார்க்க வேண்டும். எந்த மதத்தின் மீதும் பழி சொல்லாதீர்கள். மதங்களின் பெயரால் மோதிக்கொள்ளாதீர்கள்’ என்று அறிவுரை சொன்னார்.

மேலும், இன்னொரு முறை இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்தால் கருணாநிதி பதவி விலகுவார் என்றும் ரஜினிகாந்த் கூறினார். இரண்டு தரப்புக்கும் நடுவில் நின்றுகொண்டு நல்லெண்ணத்தூதராகப் பேசிய ரஜினிகாந்த், தற்போது ஒரு தரப்பின் குரலை மட்டுமே எதிரொலிப்பதாக விமர்சிக்கப்படுகிறார். சினிமா துறையில் ரஜினியின் வழி, தனி வழி என்பதில் யாரும் முரண்படுவதில்லை. அரசியலிலும் அவரது வழி தனி வழியா என்பது இன்றைக்குக் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு