Published:Updated:

`ஆக்சிஜன் வெளியேற்றும் பசுக்கள்; ஒப்புக்கொண்ட விஞ்ஞானிகள்!’ - உத்தரகாண்ட் முதல்வர் மீண்டும் சர்ச்சை கருத்து

சத்யா கோபாலன்

பசுக்கள் தொடர்பாகப் பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் உத்தரகாண்ட் முதல்வர்.

திரிவேந்திர சிங் ராவத்
திரிவேந்திர சிங் ராவத் ( Twitter/@tsrawatbjp )

சில காலங்களாக இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பா.ஜ.க தலைவர்கள் பசுக்களைப் பற்றியும், கடவுள்களையும் பற்றியும் பல சர்ச்சையான கருத்துகளைத் தொடர்ந்து கூறி வருகின்றனர். அவர்களின் வரிசையில் தற்போது உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தும் சர்ச்சையான வகையில் பேசியுள்ளார்.

பசுக்கள்
பசுக்கள்

டேராடூனில் நடந்த ஒரு விழாவில் பேசிய அவர், ``ஆக்சிஜனை வெளியேற்றும் ஒரே விலங்கு பசு மாடுகள் மட்டும்தான். எனவே அவற்றைத் தடவி விட்டு மசாஜ் செய்தால் சுவாசக் கோளாறு குணமாகிவிடும். பசு மாடுகளுடன் நெருங்கி வாழ்ந்தால் காசநோய் வராது” எனக் கூறியுள்ளார். திரிவேந்திர சிங் பேசிய வீடியோ கடந்த இரண்டு நாள்களாக சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து தற்போது தன் கருத்துக்கான விளக்கத்தைக் கூறியுள்ளார் திரிவேந்திர சிங். இது பற்றி ஏ.என்.ஐ ஊடகத்திடம் பேசியுள்ள அவர், ``பசு ஆக்சிஜனை வெளியேற்றும் என்ற கருத்தை பல விஞ்ஞானிகள் ஆதரித்துள்ளனர். இத்தாலியைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி இந்தத் தலைப்பு பற்றி ஆராய்ச்சி செய்து பசுக்கள் 80% ஆக்சிஜனை வெளியேற்றுவதாக உறுதி செய்துள்ளார். சராசரியான ஒரு மனிதனுக்கு 6 முதல் 7 அடி வரை ஆற்றல் புலம் (electromagnetic field) இருக்கும், ஆனால் பசுக்களுக்கு 42 அடி ஆற்றல் புலம் இருக்கும் என நம்பப்படுகிறது.

திரிவேந்திர சிங் ராவத்
திரிவேந்திர சிங் ராவத்
ANI

மேலும், பசு மாட்டின் பாலில் தங்கம் உள்ளதாகவும் நம்பப்படுகிறது. இது தொடர்பான ஆராய்ச்சியும் நடந்து கிர் வகை பசுக்களின் பாலில் தங்கம் உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொல்லும் சக்தி பசு மாடுகளில் பால் மற்றும் சாணத்தில் உள்ளதாக ஸ்ரீராம் லேப் சான்றிதழ் அளித்துள்ளது. ஸ்ரீ ராம் ஆய்வகம் நடத்திய சோதனைகளின் அனைத்துக் கண்டுபிடிப்புகளும் எங்களிடம் உள்ளன”எனக் கூறியுள்ளார். இவரின் விளக்கமும் தற்போது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதே போன்று கடந்த வருடமும் உத்தரகாண்ட் மாநிலத்தின் கால்நடைத் துறை அமைச்சர் ரேகா ஆர்யாவும் பசுக்கள் ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். அப்போது அதற்கு விளக்கமளித்த டெல்லி பல்கலைக்கழக விலங்கியல் துறை பேராசிரியர் சோமா எம்.கோரி, நாம் சுவாசிக்கும் 21% ஆக்ஸிஜனில் நம் உடல் 4 முதல் 5 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறது. மீதமுள்ள ஆக்ஸிஜன், கார்பன்டை ஆக்ஸைடு மற்றும் பிற வாயுக்களுடன் கலந்து வெளியேறுகிறது. இந்த செயல்முறை பசு உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்” எனக் கூறியுள்ளார். கடந்த வருடமே இந்த கருத்து வெளியாகி அதற்கு விளக்கமும் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தின் முதல்வரே இந்த கருத்தை மீண்டும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.