Published:Updated:

``வங்கத்தில் வியாபித்திருப்பது ஜெய் ஸ்ரீராம் அல்ல...`மா துர்கா’ ”! - அமர்த்யா சென்

ஆ.பழனியப்பன்

ஜெய் ஸ்ரீராம் என்கிற கோஷம் சமீபகாலமாக அரசியல் ரீதியில் முன்னெடுக்கப்படுகிறது. இது, அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ``வங்கத்தில் வியாபித்திருப்பது ஜெய் ஸ்ரீராம் அல்ல... `மா துர்கா’ ” என்று பேசியிருக்கிறார், பொருளாதார அறிஞர் அமர்த்யா சென்.

அமர்த்யா சென்
அமர்த்யா சென்

நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஜெய் ஸ்ரீராம் என்கிற கோஷம் நாட்டின் சில பகுதிகளில், குறிப்பாக மேற்கு வங்கத்தில் அதிகம் கேட்டது. பிறகு, நாடாளுமன்றத்தில் எம்.பி-க்கள் பதவியேற்பு நிகழ்ச்சியின்போது, பி.ஜே.பி உறுப்பினர்களால் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பப்பட்டு, அதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்வினையாற்றி, பரபரப்பானது. அந்த விவகாரம் பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தியது.

இச்சூழலில், ஜாதவ்பூர் பல்கலைக்கழத்தில் பேசிய நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் அமர்த்யா சென், ``ஜெய் ஸ்ரீராம் என்கிற கோஷம் வங்க மக்களின் கலாசாரத்துக்குச் சம்பந்தமில்லாதது. வங்க மக்களின் வாழ்க்கையில் வியாபித்திருப்பது `மா துர்கா’ மட்டுமே” என்று கூறியிருக்கிறார்.

``தற்போதைய காலகட்டத்தில் ஜெய் ஸ்ரீராம் என்கிற கோஷம் மக்களைத் தாக்குவதற்கே பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முன்பாக, ஜெய் ஸ்ரீராம் என்கிற கோஷத்தை நான் கேட்டதே இல்லை. அதேபோல, ராம நவமி என்பதையும் இந்த மாநிலத்தில் இதற்கு முன்பு நான் கேள்விப்பட்டதே இல்லை.”
அமர்த்யா சென்

``தற்போதைய காலகட்டத்தில் ஜெய் ஸ்ரீராம் என்கிற கோஷம் மக்களைத் தாக்குவதற்கே பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முன்பாக, ஜெய் ஸ்ரீராம் என்கிற கோஷத்தை நான் கேட்டதே இல்லை. அதேபோல, ராம நவமி என்பதையும் இந்த மாநிலத்தில் இதற்கு முன்பு நான் கேள்விப்பட்டதே இல்லை.`உன் கடவுள் எது?’ என்று என் நான்கு வயது பேத்தியிடம் கேட்டேன். அதற்கு அவள், `மா துர்கா’ என்றாள். மா துர்காவின் முக்கியத்துவத்தை ஜெய் ஸ்ரீராமுடன் ஒப்பிடவே முடியாது. குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சேர்ந்த மக்கள் சுதந்தரமாக நடமாடுவதற்கு அச்சப்படுகிறார்கள் என்றால், அது ஒரு சீரியஸான விஷயம்” என்றார் அமர்த்யா சென்.

அமர்த்யா சென்
அமர்த்யா சென்

பழைய டெல்லியில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, கவுஸ் குவாஸி பகுதியில் துர்கா கோயில் சூறையாடப்பட்டது. அந்தச் சம்பவம் நிகழ்ந்து இரு நாள்களுக்குப் பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தக் கருத்துகளை அமர்த்யா சென் பேசினார்.

சமீபத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வாகனத்துக்கு அருகே ஜெய் ஸ்ரீராம் என்கிற கோஷத்தைச் சிலர் எழுப்பினர். அதனால் பிரச்னை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, `` `ஜெய் ஸ்ரீராம்’ என்று எழுதப்பட்ட பத்து லட்சம் தபால் அட்டைகள் மம்தா பானர்ஜிக்கு அனுப்பப்படும்” என்று பி.ஜே.பி அறிவித்தது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

அதற்குப் பதிலளித்த மம்தா பானர்ஜி, ``நல்லிணக்கத்தையும், முன்னேற்றத்தையும், காத்திரமான சிந்தனைகளையும் கொண்ட ராஜாராம் மோகன்ராய், வித்யாசாகர் போன்ற மிகப்பெரிய சமூகச் சீர்திருத்தவாதிகளின் களமாக மேற்கு வங்க மாநிலம் எப்போதுமே இருந்துவந்துள்ளது. மதத்தையும் அரசியலையும் ஒன்றாகக் கலப்பதற்கு பி.ஜே.பி முயற்சி செய்கிறது” என்றார்.

மேலும், ``அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி நடத்தும் பேரணிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் எந்தவொரு கோஷத்தையும் எழுப்புவது எனக்குப் பிரச்னை அல்ல. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கோஷம் இருக்கிறது. என் கட்சிக்கு வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் ஆகியவை கோஷங்களாக உள்ளன. இடதுசாரிகளுக்கு, இன்குலாப் ஜிந்தாபாத். மற்றவர்களுக்குப் பிற கோஷங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் நாம் மதிக்கிறோம். ஆனாலும், ஜெய் ராம் ஜி கி, ஜெய் சியா ராம், ராம் நாம் சத்யா ஹை போன்ற கோஷங்கள் மதரீதியான, சமுதாயரீதியான சித்தாந்தங்களைக் கொண்டவை. இந்த உணர்வுகளை நாம் மதிக்கிறோம். ஆனால், இந்த மதரீதியான கோஷத்தை, தங்கள் கட்சியின் கோஷம்போல பி.ஜே.பி-யினர் மாற்றுகிறார்கள். இப்படியாக மதத்தை அரசியலுடன் கலக்கிறார்கள்” என்று மம்தா குற்றம்சாட்டினார்.

மம்தா பானர்ஜி ட்விட்டர் முகப்பு
மம்தா பானர்ஜி ட்விட்டர் முகப்பு

பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவரான திலீப் கோஷ், ``ஜெய் ஸ்ரீராமை மக்கள் தழுவியிருக்கிறார்கள். ராம நவமியைக் கொண்டாட ஆரம்பித்தோம். மற்ற கட்சிகள் ராம நவமியை எதிர்த்தன. நிறைய மக்கள் அதை நோக்கித் தள்ளப்பட்டார்கள். தற்போது சிறிய நகரங்களிலும், கிராமங்களிலும் ராம நவமியைக் கொண்டாடுகிறார்கள்.

இப்போது இந்துத்வாவின் குறியீடாக ராமர் மாறியிருக்கிறார். பங்களாதேஷாக மேற்குவங்கம் மாறிவிடுமோ என்று இந்த மாநில மக்கள் அஞ்சுகிறார்கள். மீண்டும் அகதிகளாகிவிடுவோமா என்று பயப்படுகிறார்கள். எனவே, இந்துக்களுக்குப் பாதுகாப்பான சூழல்கொண்ட, இந்துத்வா சார்ந்த ஒரு சமூகம் வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான், ராம நவமி ஊர்வலம் இங்கு பிரபலமாகியது. ஜெய் ஸ்ரீராம் என்பது பி.ஜே.பி-யின் கோஷம் அல்ல. அது ராமர் கோயிலுக்கான கோஷம். அந்தக் கோஷத்தை நாங்கள் இங்கே ஏற்றுக்கொண்டிருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

தற்போதைய சூழலில், ``அரசியல் மூலமாகப் பரப்பப்படும் வெறுப்பு சித்தாந்தங்களுக்கு மக்களும் அரசியல் கட்சிகளும் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் மம்தா பானர்ஜி. மேலும் அவர், ரவீந்திரநாத் தாகூர், அம்பேத்கர், விவேகானந்தர், பகத்சிங், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ராஜராம் மோகன்ராய் உள்ளிட்ட ஆளுமைகள் அடங்கிய படத்தை தன் ட்விட்டர் பக்கத்தின் முகப்பு படமாக மாற்றியிருக்கிறார்.